உளவளத்துணை ஓர் அறிமுகம் (Counseling an Introduction)


மனிதன் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகிய அம்சங்களைக் கொண்டு இறைவனால் படைக்கப்பட்டுள்ள மிகவும் மேலான படைப்பாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

இவ்வாறான மனிதன் கருவறையிலிருந்து கல்லறைக்குச் செல்லும் வரையில், நாளாந்தம் தனியாகவும் குடும்பமாகவும் குழுவாகவும் இவ்வுலகில் வாழும்போது பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் கஷ்டங்களுக்கும் மனச்சிக்கல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அனர்த்தங்களுக்கும் உள்ளாவதை தவிர்க்க முடியாது.

இவ்வாறான நிலைமைகளின் போது மனிதர்களில் சிலர் இறைவன் வழங்கிய அறிவு, உளவலிமை, மற்றும் ஆற்றல்கள் என்பவற்றின் காரணமாக அவற்றை எதிர்கொண்டு முகங்கொடுத்து அவற்றை இயல்பாக வெற்றி கண்டு தனது வாழ்வை தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றனர்.

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இதற்கு முகங்கொடுத்து வாழ்வதில் தோல்வி கண்டு, உள நெருக்குதல் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தீர்வுகளும் திட்டங்களும் தெரியாது அவற்றிலிருந்து, தானாகவே விடுபட முடியாது நாளாந்தம் தனது வாழ்வை கண்ணீரிலும் கவலையிலும் நிம்மதியிழந்து தொலைத்து வாழ்கின்ற அவல நிலைக்கு உள்ளாகி வாழ நேரிடுகின்றது.
இதனால், அம்மனிதனது தனிப்பட்ட, குடும்ப, தொழில் மற்றும் சமூக ரீதியான விவகாரங்களானது சிக்கலுக்குள்ளாகி உடைந்து போகின்றன. இதன்போது அம்மனிதனில் உடல் மற்றும் உள ரீதியாக பல்வேறு நேரெதிரான வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் பாரிய உளநோய்களுக்கும் ஆட்பட நேரிடுகின்றது. ஈற்றில், மீள வழி தெரியாத அம்மனிதன் உள அமைதியை இழந்தவனாக வாழ்கின்றான்.

மேலும், இங்கு இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். அதாவது, ஒரு மனிதன் தனது உடலுக்கு நோய் வருகின்ற போது அவற்றை குணப்படுத்துவதற்காக பல துறைசார் வைத்திய நிபுணர்களை அணுகி தீர்த்துக் கொள்ள முனைகின்றான். அதற்காக எந்தவித தயக்கமும் காட்டாது வெட்கப்படாது தனது நோயின் தன்மையை மனம் திறந்து வெளிப்படையாக பிறர் மத்தியில் தெரியப்படுத்துகின்றான்.

ஆனால், அதே மனிதன் தனக்குள்ளிருக்கின்ற இன்னுமொரு பகுதியான மிகப் பெறுமதிவாய்ந்த உள்ளத்தின் இயல்பு நிலையைக் கடந்து செயற்பட முயற்சிக்கும் போதும் அது எல்லை மீறி இயங்க முனையும்போதும், அதனால் தான் அடைகின்ற உள வருத்தத்தையும் உணர்வுப் பிறழ்வையும் துன்பத்தையும் தனக்குள்ளடக்கி, பிறருக்கு மறைத்து வாழ நினைக்கின்றான். ஏனெனில், இவ்வாறான மனிதனை அவனது குடும்பமும் அவனைச் சுற்றியுள்ள அயலவர்களும் சமூகமும் வேறு கண்கொண்டு பார்க்க முனைவதும் அவனை ஏற்றுக்கொள்ளாது ஒதுக்கி வாழ முனைவதுமே காரணம் எனலாம்.
அதுமாத்திரமன்றி, இவ்வாறானவர்களுக்கு பில்லி, சூனியம், செய்வினை என்பன பீடித்திருக்கின்றது என நினைத்து, வீட்டில் அவர்களை அடைத்துவைத்து அவர்களுக்கு மூட நம்பிக்கையின் வழியாக பல தவறான நடவடிக்கைகளை செய்து மேலும் மேலும் அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அதிகரித்துக் காணப்படுவதனையும் நாமறிவோம்.

இவ்வாறான நிலைமைகளை நாம் இனியும் அனுமதிக்காது, அவ்வாறான மனப்பாங்கிலிருந்து விடுபட முன்வரவேண்டும்.
அதற்காக, முதலில் இவ்வாறான நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு முறையாக உதவுவதற்கு வழியேற்படுத்த வேண்டும். இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்கே உளவளத்துணைச் சேவை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

உளவளத்துணை என்றால் என்ன?

உளவளத்துணை என்பது உளவியலை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாண்மைமிக்க சமூக அபிவிருத்தித் துறையாகும். நாளாந்த வாழ்வில் மனிதன் முகங்கொடுக்கும் எதிர்பாராத விடயங்களினால் ஏற்படும் பல்வேறுபட்ட உளப்பிரச்சினைகளை முகங்கொடுக்க இயலுமான வகையில், மனித ஆளுமையினை விருத்தி செய்வதும், தளம்பல் நிலையிலான உளநிலையினை நடுநிலைப்படுத்தலும்; மற்றும் தேவையான போது உளச் சிகிச்சையினைப் பெற்றுக்கொடுப்பதும் பிரச்சினைகளை உளவியல் விஞ்ஞான ரீதியில் அணுகுகின்றதுமான முறைமையானது உளவளத்துணையாகும். குழப்பமான மனநிலையிலிருக்கும் ஒருவரை சாதாரண மன நிலைக்கு கொண்டு வருவதற்காக வழங்கப்படும் உதவி உளவளத்துணை எனப்படும்.

உளவளத்துணையாளர் என்பவர் யார்?

உளவளத்துணையின் போது சேவைநாடியின் பிரச்சினையை நன்றாக செவிமடுத்து அவரைப் புரிந்துகொண்டு அவரது பிரச்சினையின் உண்மை நிலையை அவருக்கு சரியாகப் புரிந்துகொள்ள வாய்ப்பளித்து, அதனைத் தீர்த்துக்கொள்ள அவரின் உள்ளே காணப்படும் இயல்பான சக்தியை வெளிக்கொணரச் செய்பவரே உளவளத்துணையாளர். இங்கு உளவளத்துணையாளருக்கும் சேவைநாடிக்கும் இடையில் நிலவும் உறவானது தொழில்வாண்மையிலான உறவாகவே காணப்படும். இங்கு உளவளத்துணையாளர் துணைநாடியின் மீது சிகிச்சையளித்தல், முன்தடுப்பு செய்தல் மற்றும் விருத்தி செய்தல் ஆகிய 03 விதமான தலையீட்டினை மேற்கொள்வார்.

உளவளத்துணை யாருக்காக?

'அனைவருக்கும் உளவளத்துணை' உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நீங்கள் அல்லது நீங்கள் பழகும் நண்பர் ஒருவருக்கு ஏதாவதொரு பிரச்சினை ஏற்பட்டு மனமுடைந்துபோய் இருப்பின், அதனால் நாளாந்த செயற்பாடுகளைச் செய்துகொள்ள முடியாமல் அவர் கஷ்டப்படுவாராயின் அவருக்கு உளவளத்துணையாளரின் உதவி தேவைப்படுகின்றது. இவ்வாறான உளவளத்துணை உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்கள் வருமாறு.

 தனிப்பட்ட வகையில் ஒருவர் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானம் எடுக்க முடியாமலும் உள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும்.

 குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு தடையாகவுள்ள பிணக்குகள், பிரச்சினைகள்.

 குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள்.

 கல்விசார் பிரச்சினைகள் மற்றும் தொழில்சார் பிரச்சினைகள்.

 உள உபாதைகள், கோளாறுகள், நோய்கள்.

 திடீர் அனர்த்தம், அழிவு,  இழப்பின் போது கடுமையான மனம் உடைந்து போதல், ஆன்மிக நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பங்கள். உ-ம்: பரீட்சையில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம்.

 காதல் தோல்வி மற்றும் பாலியல்சார் பிரச்சினைகள்.

 ஏதாவதொரு பொருத்தப்பாடற்ற நடத்தை. உ-ம்: விலகல் நடத்தை.

 ஏதாவதொன்றுக்கு அடிமையாகியுள்ள சந்தர்ப்பங்கள். உ-ம்: போதைப் பழக்கம்.
மேற்சொன்ன ஏதாவதொரு பிரச்சினையை அனுபவிக்க வேண்டிய உணர்வு நிலை ஏற்படின், இன்று உளவளத்துணையாளரின் உதவியை பெற்றுக்கொள்வதால் உங்களுடைய நாளை வாழ்கையை மிகச் சிறந்த வாழ்கையாக திட்டமிட்டுக்கொள்ள உதவியாக அமையும். அதுமட்டுமன்றி, எதிர்பார்க்கப்படும் பிரச்சினை அல்லது சிக்கல்களை தவிர்த்துக்கொள்ளவும் முடியும்.

மேலும், இச்சேவையானது மனநோயாளிகளுக்கும் உளப்பாதிப்புற்றோருக்கும் மாத்திரமல்ல. இத்துறையானது இன்று பலருக்கும் பல மட்டங்களில் தேவைப்படும் ஒன்றாக அனைவராலும் உணரப்படும் ஒன்றாகும்.

உளவளத்துணையின் பயன்பாடுகள்:

உளவளத்துணையின் மூலம் குறிப்பாக ஒவ்வொரு நாளும் வாழ்கையில் தோன்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு துணிவோடு முகங்கொடுத்து, வாழ்க்கையை மேலும் வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ளத் தேவையான சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி கீழ்வரும் பயன்பாடுகளைக் கூறமுடியும்.

1. நாளாந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், தடைகளுக்கு பின்வாங்காது துணிவோடு முகங்கொடுப்பதற்குத் தேவையான சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

2. எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பல்வேறு ஆபத்தான நிலைமைகளை இனங்கண்டு அவற்றைத் தவிர்த்துக் கொள்வதற்கும், தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.

3. உடல், உள நோய்கள் காரணமாக நீண்டகாலமாக காணப்படும் உள அழுத்தங்கள், உளச்சமநிலையின்மைக்கு காரணமாக அமைகின்றன. உளவளத்துணையின் மூலம் அவ்வாறான உள அழுத்தங்களையும், உளச்சமநிலைளின்மையையும் சமநிலைப்படுத்தி உள அமைதியை, உள ஆறுதலை பெற்றுக் கொள்ள முடியும்.

4. தனது பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சுதந்திரமாக நம்பிக்கையான தொழில்வாண்மையான உளவளத்துணையாளர் ஒருவரோடு கதைப்பதற்கு வாய்ப்புக் கிடைப்பதனால், உள்ளத்தின் பாரம் குறைந்து உள்ளத்தை அமைதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்புக் கிடைக்கிறது.

5. ஒருவருடைய எதிர்மறையான நிலையிலிருந்து நேரிடையான நிலைக்கும், அதிருப்தியான நிலையிலிருந்து திருப்தியான நிலைக்கும் அவரது தன்னம்பிக்கையின் மூலம் நகர்த்துவதற்கு உதவுகின்றது.

6. ஒருவரிடத்தில் இருக்கின்ற ஆளுமைப் பிறழ்வையும் தப்பான எண்ணங்களையும் மூட நம்பிக்கைகளையும் அவராகவே இனங்கண்டு அவராகவே சீர்செய்வதற்கு அவரை ஆற்றுப்படுத்துகின்றது.

7. உளவளத்துணையினூடாக மனிதன் தனது துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு, வெற்றிகரமான வாழ்விற்கு அவசியமான உதவி மற்றும் வழிகாட்டல்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
எஸ்.ஆப்தீன்,
உளவளத்துணை உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம்,
அக்கரைப்பற்று

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments