டெங்கு நோய் ஒழிப்பு – சிறப்புக் கட்டுரை.


இன்று இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடூரமான ஆட்கொள்ளி நோயான டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நாடு பூராகவும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று எல்லாத் தரப்பு மக்களும் பரவலாக பாதிக்கப்பட்டு வருவதைக் கண்கூடாக கண்டு வருகிறோம்.
டெங்கு தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ள டெங்குக் காய்ச்சல் தொடர்பான சில தகவல்களை அறிந்து கொள்வோம்.
டெங்குக் காய்ச்சலுக்கான நோய்க் காரணி.
வைரசு வகையைச் சேர்ந்த ஆர்போ வைரசு (Arbo Virus) எனும் நுண்ணங்கியாகும். டெங்குக் காய்ச்சலுக்கான நோய்க் காவி
ஈடிஸ் எனும் நுளம்பு வகையைச் சேர்ந்த ஈடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus)  ஈடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) போன்ற நுளம்பு வகைகளாகும். இவ் வகை நுளம்புகளை அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாக கரு நிறக் கால்களில் வெள்ளை வரிகள் காணப்படும்.
நுளம்பு மனிதனைக் கடிக்கும் நேரங்கள்.
இவை பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இந் நுளம்புகள் கடிக்கின்றன.
நுளம்புகளின் பெருக்கம்.
தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்கு நுளம்புகள் முட்டையிடுகின்றன. உதாரணமாக குறும்பை மட்டைகள், யோகட் கோப்பைகள், டயர்கள், பூச்சாடிகள், வடிகான்கள் போன்றவற்றில் நீர் தேங்கி நிற்கும் போது அதில் முட்டைகளை இடுகின்றன.
ஆரம்ப வரலாறு.
டெங்கு காய்ச்சல் நோய் ஒன்று முதன் முதலில் சீன மருத்துவ அறிகுறிகள் என்சைகிளோபீடியாவில் சீன பேரரசுக் காலத்தில் (265 – 420 கி.பி) பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்குவாக கருதக்கூடிய காய்ச்சலுடன் கூடிய பரந்த தொற்று நிகழ்வு ஒன்று முதன்முதலில் 1635 இல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்ததாகப் பதியப்பட்டுள்ளது.
1779-1780 ஆண்டுப் பகுதியில் முதலாவது டெங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நிகழ்வு ஆசியா, வட அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. 1789 இல் அமெரிக்க மருத்துவர் பெஞ்சமின் ரஷ் 1780 ஆம் ஆண்டு பிலாடெல்பியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய டெங்கு தொற்று நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டுள்ளார், இவர் அதன் அறிகுறிகளை வைத்து ‘எலும்பு முறிப்பு நோய்’ என்று பெயரிட்டார்.
1820 இன் முற்பகுதிகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் டெங்குவாக இருக்கக்கூடிய தொற்று நிகழ்வு நிகழ்ந்தது. இதனை சுவாகிலி மொழியில் கெட்ட ஆவியால் திடீரென உண்டாகும் எனப் பொருள்படும் ‘கி டெங்கா பெபோ’ (ki denga pepo) என்று அழைத்தனர். 1827-28 இல் கரிபியனில் நிகழ்ந்த தொற்று நிகழ்வின் பின்னர் இசுப்பானிய கரிபியர்களால் டெங்கு என அழைக்கப்பட்டது. 1906 இல் ஏடிசு நுளம்பினால் இது காவப்படுகின்றது என்பது அறியப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும்படியான தொற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன
நோயின் தன்மை. 
ஒரு தடவை நுளம்பு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும். நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை நுளம்பு கடிக்குமாயின் நுண்ணங்கிகள்  பரவக்கூடும். இதைவிட, பெண் நுளம்பு தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடம் இருந்து பெற்ற பின்னர், நுளம்பின் குடற்கலங்களை நுண்ணங்கிகள் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து நுளம்பின் ஏனைய இழையங்களுக்குள் நுண்ணங்கிகள் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இந் நுளம்புகள்  கடிக்கும் போது நுண்ணங்கிகள் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே நுளம்பானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க் காவியாகத் தொழிற்படுகின்றது.
நோயின் பாரதூரம்.
குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர்.  நீரிழிவு, ஆஸ்துமா நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உக்கிரம் அடையும் போது உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும்.
நோயின் அறிகுறி.
நோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்:
1.காய்ச்சல்,
2. கடுமையான பருவம்,
3. மீள்நிலைப் பருவம்.
நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °C (104 °F) க்கு மேற்செல்லும்,  இதனுடன் கடுமையான தலைவலி, குறிப்பாக கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். பொதுவாக காய்ச்சல் இரண்டு தொடக்கம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். வெகு அரிதாக ஆனால் சிறார்களில் பொதுவாக, இக் காய்ச்சல் 2 – 5 நாட்களுக்கு நீடித்து, பின்னர் ஓரிரு நாட்களுக்கு இராது, மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குத் தோன்றும், பின்னர் அறவே நிற்கும். பத்து நாட்களுக்கு மேலே காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு. இப்பருவத்திலே ஏனைய அறிகுறிகள் காணப்படும். அவையாவன:
•             தலைவலி
•             கண் பின்புற வலி
•             பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
•             குமட்டலும் வாந்தியும்
•             வயிற்றுக் கடுப்பு
•             தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே   அரிப்பு ஏற்படலாம்
•             பசியின்மை
•             தொண்டைப் புண்
•             மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளில் இருந்து குருதி வடிதல், மூக்கில் இருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல்,
•             நிண நீர்க் கணு வீக்கம்
•             வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்
காய்ச்சல் தொடங்கும் காலப்பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும்.  முதல் அல்லது இரண்டாம் நாள் (காய்ச்சல் மற்றும் மற்றைய அறிகுறிகள் தோன்றியதில் இருந்து) தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் சினைப்பைப் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும். முதலில் உடலிலும் பின்னர் முகத்திலும் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதி நுண் குழாயில் (குருதி மயிர்த்துளைக்குழாய்) கசிவு ஏற்பட்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளில் சிறியளவிலான குருதிப்போக்கு உண்டாகாலாம்.
சிலருக்கு இந்நோய் கடுமையான பருவத்தைக் கொண்டிருக்கும். காய்ச்சல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் இப்பருவம் ஓரிரு நாட்கள் நீடிக்கும். இப்பருவத்தில் உடலில் நீர்மத்தேக்கம் ஏற்படும். குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து கசிவு ஏற்படலால் நெஞ்சறை, வயிற்றுப் பகுதிகளில் நீர்மத்தேக்கம் உண்டாகின்றது. இதனால் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல் ஏற்படும். இப்பருவத்தில் உறுப்புகள் செயலிழப்பு, கடும் குருதிப்போக்கு என்பன ஏற்படும். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது அடுத்த கட்ட நிலையான டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறிக்குச் செல்லும்.
அடுத்ததாக மெதுவாக நிகழும் மீள்நிலைப் பருவம், இதில் குருதிக்குழாய்க்கு வெளியே கசிந்த நீர்மம் குருதிக் குழாய்க்குள் இழுக்கப்பட்டு குருதியை அடையும். இது இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இந்நிலையின் போது நமைச்சல், தாழ் இதயத் துடிப்பு போன்றன காணப்படலாம், மேலும் நீர்ம அதிகரிப்பு இந்நிலையில் ஏற்பட்டால் மூளையைப் பாதித்து சுயநினைவு இழத்தல், வலிப்பு போன்றவற்றை உண்டாக்கலாம். நோயின் பின்விளைவுகளில் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். இது டெங்கு கல்லீரல் அழற்சி எனப்படும்.
சிகிச்சை பலனில்லாது போனால் மரணம் சம்பவிக்கும்!
தடுப்பு முறைகள்.
டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் நுண்ணங்கியில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும்.
நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது நுளம்பு வலை உபயோகிப்பது, நுளம்புச் சுருள் போன்றவற்றை பயன்படுத்தல் என்பன நுளம்பு  கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
BBC இணைய தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி.
இலங்கையில் டெங்கு நோயினால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 12,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.
வாராந்தம் 500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர் – சுகாதார அமைச்சு.
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வாராந்தம் சுமார் 500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே உள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன குறிப்பிட்டார். இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுவதே டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவுவதற்குக் காரணமென அவர் மேலும் தெரிவித்தார். பாடசாலை, பல்கலைக்கழகம் போன்ற சன நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளிலேயே டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசிடம் முறையான செயல் திட்டங்கள் இல்லை.
கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் டெங்கு நோயை ஒழிக்க அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது. இலங்கை சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு குற்றச்சாட்டை மறுக்கிறது.
இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்வைத்த குற்றச் சாட்டை உண்மைப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் பணிப்பாளரை அந்த பதவியிலிருந்து நீக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பெற்றுக்கொண்ட ஒரு தொகை உபகரணங்களுக்காக தரகுப்பணம் பெற்ற சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார். டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கான உபகரணங்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். டெங்கு ஒழிப்பு திட்டத்தை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக எதிர்காலத்தில் புதிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோய் தடுப்பில் ஒரு முஸ்லிமின் பங்கு.
உண்மையான இறை விசுவாசியாக வாழ வேண்டும் என்று விரும்புபவன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது சொல்லினாலோ அல்லது செயற்பாட்டினாலோ பிற மக்களுக்கு எந்தவொரு தொல்லையும் செய்து விடக் கூடாது. அவ்வாறு செய்தால் அவன் உண்மையான முஸ்லிம் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது.
எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் (உண்மை) முஸ்லிம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( ஆதாரம்  புகாரி 100 )
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதாகும். எனவே தனி மனிதனோ அல்லது சமூகமோ டெங்கு பெருகும் வண்ணம் சூழலை அசுத்தப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். சட்டத்தின் மூலம் இதனை சாதித்து விட முடியாது. இறையச்சத்தின் மூலமும் சமூக அக்கறையின் மூலமுமே இதனை சாதிக்கலாம்.
தொற்று நோய் உண்டா ? இல்லையா ?
தொற்று நோயில் ஒரு முஸ்லிமின் பார்வை எப்படியிருக்க வேண்டும்? பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், தடிமன், கொலரா மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான நுண்ணங்கிகள் காற்றிலோ தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்? என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)      நூல்: புகாரி 5717
இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும். முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள். இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல் தொற்று நோயைக் காரணம் காட்டி இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள். ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை. தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள். அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள் இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள் என்று சொல்ல நான் கேட்டேன் என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 5279
கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும் அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம் இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன ?
v  டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை சூழலுக்கு சேர்க்காதிருப்போம்.
v  தென்னம் குறும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்றுவோம்.
v  ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை கண்கானிப்போம்.
v  வீதிகளிலோ, பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை நாமாக முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும். – மக்களுக்கு தீங்கு தரும் பொருட்களை பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனவும் அது ஈமானின் கிளைகளில் ஒன்றாகும் எனவும் நபி (ஸல்) குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கதாகும்.
இறைநம்பிக்கை என்பது ”எழுபதுக்கும் அதிகமான’ அல்லது ”அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான். (முஸ்லிம் 58)
மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன் றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக் கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
(புகாரி 2989)
டெங்கு நுள்ம்புகளை உணவாக உட்கொள்ளக் கூடிய தவளைகளை கொல்லக் கூடாது.
தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன.  அப்படியானால் தவளைகளின்  காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தவளைகளைக்  கொல்ல வேண்டாம் என்ற கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.     இதுபோல நுளம்புகள்  அதிகமாக உற்பத்தி ஆவதற்கு  காரணம் தவளைகள் எண்ணிக்கை  கணிசமாக குறைந்ததுதான்  என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் நுளம்புகள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால்  தண்ணீரில் மிதக்கும் நுளம்புகளின் (இளமைப் பருவமான)லார்வாக்களை அவை  சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள்  தவளையை கொல்வதை தடைசெய்தார்கள்.
நூல் : தாரமீ (1914)
நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் தவளைகளை கொல்வதை  தடை செய்துள்ளார்கள் என்று  மேற்கண்ட ஆதாரப்பூர்வமான  செய்தி தெளிவுபடுத்துகின்றது.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • பாடசாலைகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் போன்ற இடங்களில் –  மக்கள் சங்கமிக்கும் இடங்களில் – பிரச்சாரம், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • டெங்கு நோயின் விபரீதத்தை மக்களுக்கு தெரியப்படுத்தல்.
  • சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்துதல்.
  • சிரமதான வேலைத் திட்டங்களை கிராமங்கள் தோறும், தெருக்கள் தோறும் ஏற்பாடு செய்தலும் அதனை வலியுறுத்தலும்.
தொகுப்பு – K.M. பாயிஸ்

Post a Comment

0 Comments