சுவனத்தில் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) வின் காலடி ஓசைக்குக் காரணம் என்ன? - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, September 17, 2017

சுவனத்தில் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) வின் காலடி ஓசைக்குக் காரணம் என்ன?


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “மிஃராஜ்” இரவில் விண்ணேற்றம் சென்று வந்தார்கள். “ஒரே இரவுக்குள் விண்ணுக்குச் சென்று சுவர்க்கம், நரகத்தைக் கண்ணுற்றபின் அல்லாஹ் விடமும் நேரிடையாகவே பேசி வந்துள்ளார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் “அது உண்மை தான்: நான் நம்புகிறேன்” என்று முதன் முதலாக மன உறுதியுடன் கூறிய ஸஹாபி தான் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு). எனவே அவர்கள் “ஸித்தீக்” (உண்மையாளர்) என்ற பட்டத்தைப் பெற்றார்கள்.

மிஃராஜ் சென்று வந்த சூட்டோடு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தேடினார்கள். காரணம் அவரை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அவசரமாகக் காண விரும்பிய செய்தியை பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அறிந்து ஓடி வந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் காண என்ன காரணத்திற்காக தன்னை இவ்வளவு துரிதமாகத் தேடுகிறார்கள் என்ற கேள்விக்குறி அலையாக எழுந்தது. எனினும் பொங்கி வரும் உணர்வுகளை அடக்கிக்கொண்டு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு முன் ஹாஜரானார்கள்.

பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பார்த்ததும் ஏதோ ஒரு புது மனிதரைப் பார்த்தது போன்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏன்? எதற்காக அப்படி பார்க்கிறார்கள் என்ற காரணமும் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தார்கள் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் புன்முறுவலோடு பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அருகிலழைத்தார்கள். அவரும் நெருங்கி வந்தார்கள்.

பக்கத்தில் வந்ததும் “பிலால்! உமக்கு பெரும் நன்மையை விளைவிக்கும் என்று நம்பிய எந்த செயலை இஸ்லாத்தில் நீர் செய்தீர் என்பதை எனக்கு அறிவியுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கேட்டார்கள். பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு என்ன சொல்வதென்றே முதலில் தோன்றவில்லை. மீண்டும் “பிலாலே! எதன் காரணமாக, நீர் என்னைச் சுவனபதி செல்வதில் முந்திக்கொண்டீர்?” என்றும் கேட்டார்கள். 

அதற்கு பிலால் (ரலியல்லாஹு அன்ஹு), "நாயகமே! நான் எப்பொழுதும் இரண்டு ரக்அத் தொழாமல் பாங்கு கூறியதில்லை. அன்றி ஒளு முறிந்ததும் உளூச் செய்து கொள்ளாது நான் ஒருபோதும் இருந்ததில்லை. மேலும் நான் ஒளு செய்ததும் அல்லாஹ்வுக்காக இரண்டு ரக்அத் தொழுவது என்மீது கடமையென்று நம்பி வந்தேன். இரவு பகல் எந்நேரமாயினும் பூரணமாக உளுச் செய்து அந்த உளுவுடன் என்மீது விதிக்கப் பெற்றது என்று எண்ணி இரண்டு ரக்அத் தொழுவதைத் தவிர பெரும் நன்மை விளைவிக்கும் என்று நான்  வேறு எச்செயலையும் நான் இஸ்லாத்தில் செய்யவில்லை” என்றனர், உணர்ச்சிவசப்பட்டவராக. எனினும் எதற்காக இவ்விதம் கேட்கின்றீர்கள் என்று கேட்கும் முன்னே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் புதிரின் ரகசியத்தை வெளியிட்டார்கள்.

“பிலாலே! நான் சுவனபதியில் நுழைந்தபொழுது எனக்கு முன்னர் உம்முடைய காலணிகள் சப்தத்தைக் செவியுற்றேன். நீங்கள் சொன்ன இரண்டு காரணங்களுக்காக உங்களுக்கு இப்பதவி கிடைத்துள்ளது.” என்ற கருத்தைச் சொன்னார்கள்.

இதனைக் கேட்டதும் மேலும் உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்ந்து போனார்கள் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு). ஒளு முறிந்தால் உடனே ஒளு செய்து கொள்ளுதலும், ஒளு செய்தவுடன் ரக்அத் நபில் தொழுதுகொள்ளும் காரணத்தாலேயே இறைவன் இத்தகைய சிறப்பை அளித்துள்ளான் என்பதை அறிந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். 

No comments:

Post a Comment

Pages