தொப்பையை மறைக்கணுமா... ஆண்களுக்கான டிரெஸ்ஸிங் டிப்ஸ்!

சில ஆண்களுக்கு அகன்ற தோள்பட்டை இருக்கும், சிலருக்கு வயிற்றுப்பகுதி பெருசாக இருக்கும். இதனால் அனைவருக்கும் அனைத்து உடைகளும் பொருந்துவதில்லை. ஆப்பிள், ஹவர்கிளாஸ் என்று பெண்களின் உடலமைப்பை வகைப்படுத்துவதுபோல, ஆண்களின் உடலமைப்பையும் வகைப்படுத்தப்படுகிறது. அவை முக்கோணம் (Triangle), தலைகீழ் முக்கோணம் (Inverted Triangle), செவ்வகம் (Rectangle), சரிவகம் (Trapezoid) மற்றும் ஓவல் (Oval). உங்களின் உடலமைப்பு என்னவென்று தெரிந்துகொண்டால், ஆடை வாங்கும்பொழுது தொப்பை தெரியுமோ, தோள்பட்டை பெரிதாக இருக்குமோ போன்ற சந்தேகங்கள் இருக்கவே இருக்காது. அதற்கான வழிகாட்டி இதோ.

முக்கோண உடலமைப்பு:
தோள்பட்டை குறுகியும், வயிற்றுப்பகுதி பெரிதாகவும் காணப்படும் உடல் வடிவம் முக்கோண உடலமைப்பு. இவர்களின் தோள்பட்டை நிமிர்ந்தில்லாமல், சற்று சாய்ந்து இருக்கும். செக்ட் அல்லது கட்டம்போட்ட உடைகள், செங்குத்து கோடுகளிட்ட உடைகள், தோள்பட்டைகளில் பிரின்ட் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள், அடர்த்தியான வண்ணம்கொண்ட உடைகள், க்ரூ நெக் டீ-ஷர்ட், கழுத்தை ஒட்டிய ஆடைகள், சிம்பிளான பெல்ட், ஸ்ட்ரெய்ட் கட் ட்ரவுசர் மற்றும் சிங்கிள் பிரெஸ்ட்டேட் ஜாக்கெட் (SIngle Breasted Jacket) போன்றவை முக்கோண உடலமைப்பின் பெர்ஃபெக்ட் ஆடைகள். உடலை இறுக்கும் போலோ டீ-ஷர்ட், பிரின்ட், எம்ப்ராய்டரி போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள், பெரிய பக்குள் உள்ள பெல்ட் வகைகள், ஸ்கின்னி பேன்ட்டுகள் முதலியவற்றை தவிர்க்கவேண்டும்.

செவ்வகம் உடலமைப்பு:
செவ்வக உடலமைப்பைப் பெற்றவர்கள் பொதுவாகவே ஒல்லியான தேகம் உடையவர்களாக இருப்பார்கள். தோள்பட்டை முதல் இடுப்பு வரை ஒரே அளவைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தோள்பட்டை சற்று அகன்றிருப்பதுபோல் மாயை தரும் உடையை அணிய வேண்டும். கிடைமட்ட கோடுகளுடைய டீ-ஷர்ட் (இவற்றை Breten டீ-ஷர்ட் எனலாம்), ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட் (அதாவது டீ-ஷர்ட் அணிந்து அதன் மேல் சட்டை அணிவது), க்ரூ நெக் ஜம்ப்பர், கழுத்தில் scarves , பிரைட் வண்ண உடைகள், இவற்றை அணிவதன் மூலம் மெலிந்த தேகம் சிறிது தடித்ததைப்போல் தோற்றம் பெரும். டபுள் பிரெஸ்ட்டேட் ஜாக்கெட், புகைப்படங்களுடைய டீ-ஷர்ட் போன்ற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.

சரிவகம் உடலமைப்பு:
சரிவகம் உடலமைப்பைப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு கடைகளில் விற்கப்படும் உடைகள் அனைத்தும் கட்சிதமாகப் பொருந்தும். விலா எலும்புகள் சீராக காலர் எலும்பு வரை சென்று அளவான அகன்ற தோள்பட்டைக்கொண்டிருப்பவர்கள் சரிவகம் உடலமைப்புக்காரர்கள். உடலை ஒத்தியிருக்கும் உடைகளை இவர்கள் தாராளமாக அணியலாம். செங்குத்தான கோடுகள் கொண்ட ஆடைகள் உயரமாகவும், கிடைமட்ட கோடுகள் கொண்ட ஆடைகள் சிறிது பருமனாகவும் காண்பிக்கும் மாயை ஏற்படுத்தும். எனவே, உயரத்துக்கு ஏற்ப பேட்டர்ன்களை தேர்ந்தெடுக்கலாம். டை (Tie) உபயோகப்படுத்துவதன் மூலம் மிடுக்கான தோற்றத்தைப் பெறலாம். தளர்வான ஆடைகள் உடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
தலைகீழ் முக்கோணம்:
தோள்பட்டை அதிகமாக அகன்றும், இடைப்பகுதி மிகவும் குறுகியும் காணப்படும் உடலமைப்பு தலைகீழ் முக்கோணம். கிடைமட்ட கோடுகளுடைய ஆடைகள், உடலை ஒற்றிய ஆடைகள், எலாஸ்டிக் மெட்டீரியல் உடைகள், V -நெக் டீ-ஷர்ட், ஸ்லிம் ஃபிட் பேன்ட், ஷர்ட், பெரிய பக்குள் வைத்த பெல்ட், பிரின்டெட் பேன்ட் போன்றவை சரியான தேர்வு. ஸ்கின்னி வகை உடைகள், தோள்பட்டைகளில் பிரின்ட், எம்ப்ராய்டரி போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள், அகன்ற கழுத்துடைய உடைகள் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.

ஓவல்:
தோள்பட்டை மற்றும்  இடுப்பைவிட வயிற்றுப்பகுதி தடித்திருப்பவர்கள் ஓவல் உடலமைப்பில் சேர்வார்கள். அதாவது தொப்பை கொண்டவர்கள். அடர்த்தியான சாலிட் வகை உடைகள் இவர்களுக்கான சரியான சாய்ஸ். இறுக்கமாக பெல்ட் அணிவதைத் தவிர்க்க வேண்டும். சஸ்பெண்டர் வகை உடைகள், ப்ளீட் வைத்த பேன்ட், அகலமான காலர், நெக்டை (Tie), பின் ஸ்ட்ரைப் அல்லது செங்குத்து கோடுகள் கொண்ட ஆடைகள் போன்றவற்றை அணிவதன் மூலம் தடித்த உடலமைப்பைக் குறுக்கி காண்பிப்பதைப்போல் மாயை உண்டாக்கலாம்.


Post a Comment

0 Comments