நேற்று, முகப்புத்தகத்தில் மகளிர் தின வாழ்த்துக்களில் ஒன்றாக இதையும் கண்டேன்.
வாழ்த்தை விட என் மனதை வலிக்கச் செய்த செய்தியே அதில் மறைந்திருந்தது.உண்மைதான்...
சமீப காலமாக புதிய முதியோர் இல்லங்களின் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது.
21ம் நூற்றாண்டின் இளம் பெண்களுக்கு வாழ்க்கை ஒன்றும் இலகுவல்ல. போட்டிகளும், பொறாமைகளும், நிறைந்த வாழ்க்கையில் பெரும் போரட்டங்களுக்கு மத்தியிலேயே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். விளைவு , திருமணத்தின் பின் தன் கணவன், தன் பிள்ளைகள் என்கிற குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிம்மதி கிடைக்க வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு,கணவனின் பெற்றோரையோ ஏன் சிலசமயங்களில் தன் பெற்றோரைக் கூட பராமரிக்கும் பொறுப்பை மறுத்துவிடுகிறாள்.
இக்கால இளம்பெண்கள் இதிலிருந்து முயற்சித்து பொறுமை , சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டால் பெரும்பாவத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.அதற்காக இந்த இளைஞர்கள் தப்பித்து விடலாம் என்றில்லை. நீங்கள்ஆயிரம் காரணங்களை பெண்களுக்குச் சொன்னாலும், அவர்கள் ஒரே காரணத்தால் இலகுவாக உங்கள் மேல் பழி போட முடியும்.
அது " சீதனம்" எனும் அரக்கன். பெண்களின் பெற்றோர்கள் முதியோர் இல்லம் நாட முக்கியக் காரணங்கள் இருந்த ஒரே வீட்டையும் சீதனமாகக் கொடுப்பது, வீட்டை விற்று சீதனம் கொடுத்து கடனாளியாகி, இருக்க இடமின்றி செல்வது, மகளுக்கு சீதனம் சம்பந்தமாக மருமகன் பண்ணும் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாமல் தாங்களே முதியோர் இல்லங்களை நாடுவது போன்றவைதான்.
இன்றைய இளைஞர்கள் சீதனத்துக்கு எதிராகவும், அது ஈனச்செயல் என்றும் பந்தி, பந்தியாக பதிவுகளின் மூலம் சமூக வலைத்தளங்களில் பொங்கியெழுவார்கள்.
ஆனால் தனக்கென்று திருமணம் வரும்போது எத்தனை இளைஞர்கள் அதை சாதித்துக் காட்டியுள்ளார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம். நான் அறிய திருமணம் பேசும்போது, அம்மாவைப் கொழுத்த சீதனத்துடன் பெண் தேடவிட்டு, பெற்றோர்களின் பின் மறைந்து கொள்ளும் வாய்ச் சொல் வீரர்களே இங்கு அதிகம்.இல்லாவிட்டால் பணக்கார இளைஞர்கள், பணக்காரப் பெண்களைத் தேடி மணம் முடித்து விட்டு, தாங்கள் சீதனமே வாயால் கேட்காத உத்தமர்கள் போல பீத்தல் வேறு. கருமம்.. இருசாராரும் திருந்தும் வரை " முதியோர் இல்லங்கள் மூடப்படப் போவதில்லை"...
Maheesha Edward
0 Comments