ஈராக்கின் திக்ரித் நகர அமீர் நஜ்முத்தீன் ஐயூப் நீண்ட காலமாக திருமணம் முடிக்காமலேயே இருந்தார்.
எதற்கு நீங்கள் திருமணம் முடிக்காமல் இருக்கின்றீர்கள் என்று அவரது சகோதர் அஸதுத்தீன் ஷிராக்கோ வெட்கத்தை விட்டு ஒரு தடவை கேட்டுவிடுகின்றார்...
அதற்கு, நஜ்முத்தீன்: பொருத்தமான துணை எனக்கு இன்னும் வாய்க்கவில்லை.
சகோதரன்: நான் உனக்கு ஒரு துணையை தேடித் தரட்டுமா?
நஜ்முத்தீன்: யார் அந்த துணை?
சகோதரன்: ஸல்ஜூக்கிய மன்னரின் மகள் அல்லது பிரதம அமைச்சரின் மகள்.
நஜ்முத்தீன்: அவர்கள் எனக்கு தகுதியானவர்கள் அல்லர்.
ஆச்சர்யம் மேலிட்டவராக,
சகோதரன்: அவ்வாறாயின்,இவர்களை விட பொருத்தமானவராக யாரை தான் நீ தேடுகின்றாய்?!
நஜ்முத்தீன்:
"ஆம், எனக்கு ஒரு மனைவி வேண்டும். அவள் என்னை சுவனத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். அவள் மூலம் ஒரு பிள்ளையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பிள்ளை இளைமை பருவத்தை அடையும் வரை சிறந்த முறையில் பயிற்றுவித்து ஒரு குதிரை வீரனாக அவனை அவள் உருவாக்க வேண்டும். அந்த இளைஞன் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பைதுல் மக்திஸை மீட்டு முஸ்லிம்களிடம் கையளிக்க வேண்டும்"
சகோதரன்: ஹ்ம்ம்...இப்படி ஒரு பெண் கிடைப்பது சாத்தியமா?
நஜ்முத்தீன்: உண்மையான,தூய எண்ணம் இருந்தால் நிச்சயம் அல்லாஹ் அருள்பாலிப்பான்.
_______________________________________________
அன்றொரு நாள் நஜ்முத்தீன் திக்ரித் பள்ளியில் அமர்ந்து கொண்டு ஷெய்க் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கின்ற போது ஒரு யுவதி அங்கு வந்து, ஷெய்குடன் கதைக்க வேண்டும் என்று திரைக்கு பின்னால் இருந்து அனுமதி வேண்டுகிறாள்.
நஜ்முத்தீனிடமிருந்து விடை பெற்றுக்கொண்ட ஷெய்க் அந்த யுவதியுடன் உரையாட துவங்கினார்.
ஷெய்க்: உன்னை பெண் கேட்டு வந்த இளைஞனை ஏன் வேண்டாம் என்று மறுத்து விட்டாய்?
யுவதி: ஆம்,அந்த இளைஞன் அழகிலோ, அந்தஸ்த்திலோ குறைந்தவனல்ல என்பது உண்மை. ஆனால் அவன் எனக்கு பொருத்தமானவன் அல்லன்.
ஷெய்க்: நீ எப்படிப்பட்டவரை எதிர்பார்க்கிறாய்?
யுவதி: என்னை சுவனத்துக்கு அழைத்து செல்கின்ற ஒரு கணவனாக அவன் இருக்க வேண்டும். அவன் மூலம் நான்
ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த பிள்ளை ஒரு குதிரை வீரனாக உருவாகி பைதுல் மக்திஸை முஸ்லிம்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்.
இவர்களின் சம்பாஷனை நஜ்முத்தீனின் செவிகளில் விழுந்து விடுகின்றது. உடனே அந்த ஷெய்கை அழைத்து அந்தப் பெண்ணை தான் மணமுடிக்க விரும்புவதாக மிகுந்த ஆனந்தத்துடன் கூறுகிறார் நஜ்முத்தீன்.
குறித்த பெண் இந்த ஊரின் ஏழ்மையான குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவள்,அவள் உனக்கு பொருத்தமான துணை அல்ல என்பதாக ஷெய்க் கருத்து தெரிவித்துவிடுகின்றார்.
இந்த பதிலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை நஜ்முத்தீன்.
நீண்ட நாள் கனவல்லவா!!
தனது கனவு தேவதையை கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி நஜ்முதீனின் உள்ளத்தில் பிரவாகிக்கின்றது.
தனக்கு மனைவியாக வருவதற்கு இவளை விட தகுதியானவள் எவரும் கிடையாது என்பதை தெரிந்து கொண்ட அமீர்,அந்தப் பெண்ணை மணமுடிப்பதற்கு பூரண விருப்பம் தெரிவிக்கின்றார்.
மன்னரின் மகளும் வேண்டாம்..!
அமைச்சரின் மகளும் வேண்டாம்..! என மறுதலித்த நஜ்முத்தீன் ஒரு ஏழை வீட்டுப் பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டார்.
இருவரதும் எதிர்பார்ப்பை போலவே இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தை பெரியவனாகி, சிறந்த வீரனாக மாறி முஸ்லிம்களின் கையில் மீண்டும் பைதுல் மக்திஸை பெற்றுக் கொடுக்கின்றது.
குழந்தை வேறு யாருமல்ல. அவர் தான் மாவீரன் ஸூல்தான் ஸலாஹூத்தீன் அய்யூபி.
எமது தூய்மையான எண்ணங்களும் இறை நாட்டத்தால் ஒருநாளில் மெய்ப்படத் தான் போகின்றன. நிராசையடையாதீர்கள் தோழர்களே..!
0 Comments