இலங்கையில் கொரோனாவினால் ஒருவர் மரணமடைந்தால் என்ன நடக்கும்?


"கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களை எரித்துவிடவேண்டும்" என்பதுதான் சுகாதார அமைச்சின் முடிவாக இருந்தது. இது தொடர்பாக சில உத்தியோகாபூர்வ கடிதங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

இருந்தபோதிலும், இஸ்லாமிய மதத்தில் இறந்தவர்களை எரிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினாலும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைப் புதைப்பது எந்தவிதத்திலும் பாதிப்பைத்தராது என்பதை சுட்டிக்காட்டியும் இதுதொடர்பான தீர்மானத்தை மீள்பரிசீலிக்குமாறு முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் (அழ்ழாஹ் அந்த மக்களுக்கு அருள்பாலிப்பானாக) ஜனாதிபதி மற்றும் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த வேண்டுகோளையும் உள்ளடக்கியவகையில், இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

மக்கள் மத்தியில் "எரித்துவிடுவார்கள்" என்ற அச்சம் இருக்கின்ற காரணத்தினாலும், சுகாதார அமைச்சின் இந்த வழிகாட்டல் தொடர்பாக தமிழ் மொழியில் எந்தவித தகவல்களையும் ஊடகங்களில் காணக்கிடைக்காததாலும் இதை சுருக்கமாக எழுதுகிறேன்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் (Confirmed) மரணித்தால் அவருக்கு பிரேதப் பரிசோதனையோ அல்லது மரண விசாரணையோ செய்யத்தேவையில்லை.

மரணித்தவரின் உடல் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு வைத்தியசாலையில் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து காண்பிக்கப்படும். எக்காரணத்திற்காகவும் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

பின்னர் வைத்தியசாலையில் வைத்தே உடல் பொருத்தமான ஒரு பையில் வைத்து Seal செய்யப்படும். Seal செய்யப்பட்ட பின்னர் யாரும் உடலைப் பார்வையிட முடியாது.

அதற்குப்பின்னர் வைத்தியசாலையில் இறுதிக்கிரிகைகளை செய்பவரால் பொதிசெய்யப்பட்ட உடல் சவப்பெட்டியில் (அல்லது அதுபோன்ற ஒன்றில்) வைத்து அதுவும் Seal செய்யப்படும். அதற்குப் பின்னர் அந்த உடலை மையவாடிக்கு அல்லது தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

அவ்வாறு பெட்டியில் வைத்து சீல் செய்யப்பட்ட உடலை அந்தந்த பிரதேசத்தின் பொரிஸ்அதிகாரி மற்றும் PHI/ MOH முன்னிலையில் புதைக்கவோ அல்லது எரிக்கவோ முடியும். மரணித்து 24 மணிநேரத்தினுள் (12 மணிநேரம் விரும்பத்தக்கது) உடலை புதைக்கவோ அல்லது எரிக்கவோ வேண்டும்.

பூமியில் அடக்கம் செய்யும்போது ஆறு அடிக்குக் குறையாத அளவு ஆழத்தில் ஆழமான குழிதோண்டி உடல் புதைக்கப்பட வேண்டும். நிலக்கீழ் நீர் பாதிக்கடாதவகையில் குழி இருத்தல் அவசியமானதாகும்.

அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தெளிவாக (இன்னாருடையது என) அடையாளப்படுத்தக் கூடியதாகவும், கண்டுபிடிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உடலை குளிப்பாட்டவோ, நீரினால் கழுவவோ முடியாது.

இதற்கு மேலதிகமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர் என்று சந்தேகிக்கப்படும் (Suspect) ஒருவர் மரணித்தால், அவரது உடலில் இருந்து சிறிய மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படும். தேவையேற்படின் மரணவிசாரணையும் மேற்கொள்ளப்படும். மற்றப்படிக்கு அவருக்கும் மேற்சொன்ன நடைமுறையே பின்பற்றப்படும்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கமே இது. "ஐயோ... மரணித்தால் எரித்துவிடுவார்கள்" என்ற விரக்தியிலும், பீதியிலும் இருந்த என்னைப்போன்றவர்களுக்கு (😢) இந்த செய்தி ஓரளவு ஆறுதலைத் தருகின்றது.

இதற்கு மேலதிகமாக, குளிப்பாட்ட முடியாத சந்தர்ப்பத்தில் என்ன செய்வது, ஜனாஸாத் தொழுகையை எப்படி நடாத்துவது என்பது தொடர்பாக மார்க்க விடயங்களில் பூரண தெளிவுள்ள அறிஞர்கள் மக்களுக்கு பொருத்தமான நேரத்தில் வழிகாட்ட வேண்டும்.

‘கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமை யுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (புஹாரி: 3474)

Source - Newswire.lk
-Zinthah Nawaz-

Post a Comment

0 Comments