சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட பெரும்பான்மை சமூகத்தின் குரல்களின் தேவையை வலியுறுத்தும் உண்மைச் சம்பவமொன்று.


சில தினங்களுக்கு முன்னர், முஸ்லிம் நண்பர்கள் சிலருடன், இன்றைய நாட்களில் கொரோனா (Covid19) தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம் பிரேதங்களை தகனம் செய்வது தொடர்பில் வாக்குவாதப்பட நேர்ந்தது.

எனது முதன்மையான தர்க்கமாக, 'ஒரு தேசம் என்ற வகையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் வாழுவோர் அன்றி மரணித்தவர்கள் அல்ல' என்று அமைந்திருந்தது. ஆகவே, மிகவும் பாதுகாப்பான நடவடிக்கையாக பிரேதங்களைத் தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை எந்த வகையிலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றேன்.

ஆனால் அவர்களின் வாதமாக, உயிரற்ற பிரேதமொன்றின் மூலம் நிலக் கீழ் நீர் ஊற்றுக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்றும், இலங்கை (இந்தியாவும் சீனாவில் சிறிதளவும்) தவிர உலகில் ஏனைய அனைத்து நாடுகளும் பிரேதங்களை அடக்கம் செய்வதாகவும் அமைந்திருந்தது.

குறிப்பாக, உலக சுகாதார அமைப்பு (WHO) பிரேதங்களை அகற்றும் இவ் இரண்டு முறைகளையும் பாதுகாப்பான முறைகளாக ஏற்றுக் கொண்டிருப்பதினால் இலங்கை அரசாங்கத்தின் இத் தீர்மானம் ஏனைய (சிறுபான்மை) இனங்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காத அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுக்கும் செயலாகும்.

மேலும், விஞ்ஞான ரீதியாக பிரேதமொன்றில் இருக்கும் நீர் 3 - 7 நாட்களில் உலர்ந்து விடிவதும், இதுவரைக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் கொரோனா வைரசு உயிரற்ற ஓரிடத்தில் நீண்ட காலம் வாழாது என்ற காரணங்களையும் முன்வைத்து, அடக்கம் செய்வதினால் நீண்ட கால சுகாதார கேடுகளை ஏற்படுத்தாது என்றும் வாதிட்டனர்.

இது தொடர்பான பல விடயங்களை இணையத்தில் வாசித்த போது நான் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால், முஸ்லிம்களின் கோரிக்கையானது விஞ்ஞான காரணிகளை மட்டும் வைத்து வாதிக்க முடியாத மிகவும் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் என்பதாகும்.

முஸ்லிம் சமயத்தில்; புனித குர்ஆனில் மரணத்திற்கு வழங்கப்பட்டுள்ள தனிச் சிறப்புக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. பௌத்த சமய கற்பித்தலின் ஊடாகவும் எனது நம்பிக்கையின் அடிப்படையிலும் நாம் மரியாதை செலுத்த வேண்டியதும் கடமைகளை நிறைவேற்ற வேண்டியதும் ஒருவர் உயிரோடிருக்கும் போது அன்றி, மரணித்த பிறகு அல்ல என்பது எனது கருத்தாகும்.

ஆகவே, சில கலாசாரங்களில் மரணத்துடன் தொடர்புபட்ட சடங்குகளை என்னால் புரிந்துகொள்வதற்கு பெரும்பாலும் கஷ்டமாக உள்ளது. பெரும்பான்மையான எனது சிங்கள பௌத்த நண்பர்களுக்கும் இவ்வாறுதான் இருக்கும் என்று கருதுகின்றேன்.

சுருங்கக் கூறுவதாயின், எமக்கு முஸ்லிம்களின் பிரச்சினை விளங்குவதில்லை. அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் ஒரு சமூகம் என்ற வகையில் நாம் தோல்வியடைந்துவிட்டோம்.

முஸ்லிம் பிரேதமொன்றை எரிப்பது உயிர் வாழும் அனைத்து முஸ்லிம்களின் உள்ளங்களை எரிப்பதாகும். அது fard kifayah எனும் கூட்டுக் கடமையின் கீழ் அவர்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதாகும்.

இந்த விடயம் அரசாங்கத்தின் தீர்மானங்களை மேற்கொள்வோர் அறியாத ஒன்றாக இருக்க முடியாது. பல்லின மக்கள் வாழும் நாடொன்றின் அரசாங்கமொன்று ஏனைய இனத்தவரின் உணர்வுபூர்வமான பிரச்சினை தொடர்பில் இதனை விட திறந்த கலந்துரையாடலை உரிய தரப்பினரின் சமூகத் தலைமைகளுடன் மேற்கொண்டிருக்க வேண்டும்.

வரலாற்றில் எமக்கு பல தவறுகள் நடைபெற்றிருப்பது அறியாமையின் காரணமாக அல்ல, சரியான நோக்கு இல்லாமையினால் ஆகும். குறுங்கால அரசியல் தேவைகளுக்காக நீண்டகாலத்திற்காக கட்டியெழுப்பியிருக்கக் கூடிய ஒற்றுமையையும் சகவாழ்வையும் காட்டிக்கொடுத்ததினால் ஆகும்.

துரதிஷ்டவசமாக நாம் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகள் குழப்பாமல் இருந்திருந்தால் சாமானிய மனிதர்கள் இதை விடவும் சுதந்திரமாக பரஸ்பரம் மணங்களைப் புரிந்துகொண்டு வாழ்ந்திருப்பார்கள் எனத் தோன்றியதால், இற்றக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் Charuka Hiran Dananjaya எழுதிய கவிதை(ப் படத்தை) இத்துடன் இணைக்கின்றேன்.

பிடித்தேறத் தெம்பில்லை
நடத்துனரின் காட்டுக் கத்தலைப்
பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை
கை கொடுத்தான் அன்னைக்கு
'தம்பி' வாலிபன்

மூல கட்டுரையின் இணைப்பு:

சிங்களத்தில்: Asanka Dodantenne (2020.05.09)
தமிழில்: Hisham Hussain, 

Post a Comment

0 Comments