கொரோனா சம்பந்தமாக இலங்கை பொது மக்களுக்கு ஒரு விஷேட அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகி பூரண குணமடைந்த நிலையில் அநுராதபுரம் - கெப்பத்திக்கொல்லைவையில் உள்ள தமது வீட்டிற்கு சென்ற பெண்ணொருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார்.

36 வயதான குறித்த பெண் கடந்த மாதம் 18 ஆம் திகதி குவைட்டில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் கொரோனா வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகள் அவரிடத்தில் காணப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி ஹோமாகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

அதன் பின்னர் அவர், அநுராதபுரம் - கெப்பத்திக்கொல்லைவையில் உள்ள தமது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், அங்கு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர குறிப்பிட்டார்.

இதனையடுத்து குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த வைரஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அது தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments