சமூக வலைத்தளங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள், விளையாட்டுத்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் இவ்வாறு பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும்என தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக டுவிட்டரில் ’JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஸ்டேகில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (55) இவர் குறித்த பகுதியில் பனைமரக்கட்டைகள் விற்பனை செய்யும் கடையொன்றை நடத்திவந்துள்ளார்.
அவரது மகன் பென்னிக்ஸ் (31) தந்தையின் கடை அருகிலேயே கைத்தொலைபேசி விற்பனை நிலைமொன்றை நடத்தி வந்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில உள்ள நிலையில் கடந்த 19 ஆம் திகதி இரவு அந்த பகுதிக்கு ரோந்து நடடிவக்கையில் ஈடுபட்ட பொலிஸார், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்குள்ள கடைகளை மூடுமாறு தெரிவித்துள்ளனர்.
இதற்கு பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதையடுத்து பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் மீது சாத்தான்குளம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 22 ஆம் திகதி இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவில்பட்டி அரசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜூக்கு கடந்த 23 ஆம் திகதி காலை 6 மணியளவில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மறுநாள் உயிரிழந்தார்.
சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகனின் திடீர் மரணம் பொதுமக்கள் இடையே பெறும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பொலிசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பாக வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சாத்தான்குளம் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
எனினும், அவர்களின் இறப்புக்கு நீதி வேண்டி அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்தவகையில்,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்ததுடன் மேலும் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இச் சம்பவம் தொடர்பில், பொலிசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
''பொலிசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது மிகவும் சோகமான ஒன்று. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் மரணத்திற்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் JusticeForJeyarajAndFeni'’ என தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவானும் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு உரிய நீதி வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து பதிவில்,’’ ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். கைகோர்ப்போம் JusticeForJeyarajAndFenix'’ என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சம்பவம் தொடர்பில், இயக்குனர் சேரன், நடிகர் ஜெயம் ரவி, கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சாந்தனு, நடிகை அதுல்யா, இயக்குனர் பா.இரஞ்சித், நடிகை குஷ்பூ, நடிகை மகிமா, இயக்குனர் ரத்னகுமார், பாடகி சுசித்ரா, உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் தமது டுவிட்டர் பக்கத்தில் நீதி கோரி பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments