நம்முடைய வளர்ச்சியை தீர்மானிப்பது தன்னம்பிக்கை. நம்மை சுற்றியுள்ள உலகம்
நம்மை ஏளனப்படுத்தலாம், உதாசீனப்படுத்தலாம், நம் வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டை போடலாம், நம்மை பலவீனப்படுத்தலாம், நமக்கு உதவிக் கரம்
நீட்டத் தயங்கலாம், நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பாராட்டு,
அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கலாம். ஆனால் நம் தன்னம்பிக்கை, ஆசை, கனவு,
வைராக்கியம், சுயமரியாதையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. எதை
வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால் அந்த ஆசை நியாயமானதாக இருக்க
வேண்டும். அதை சாதிக்க திறமை, திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு
ஆகியவை வேண்டும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிலும் எளிதாக வெற்றி
பெறலாம்.
செயல் என்பது உயிரின் இசை என்றொரு பழமொழி உண்டு. அதை செயல் படுத்துங்கள்.
இன்ப வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ அந்த
அளவுக்கு செயலாற்றலும் தேவை என்றார் ஹாஸ்விட் அறிஞர்.
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்கு முக்கியம்
ஆகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என விவேகானந்தர் கூறினார்.
எப்படி வேண்டு மானாலும் வாழலாம் என இல்லாமல் இப்படித் தான் வாழ வேண்டும்
என்கிற கொள்கையில் வாழ்நாள் எல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிட வேண்டும்.
லட்சியத்தை நம்மால் அடைய முடியும் என்று நம்புவதே தன்னம்பிக்கை. எதை
இழந்தாலும் இழக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை என்றும் இழக்க கூடாது.
தேவையற்ற பொருட்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு
அருகாமையில் வசிப்பவர்கள், அலுவலகத்தின் உடன் வேலை பார்ப்பவர்கள் என
அனைவரும் நட்பை என்றும் வைத்திருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள்
எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தும் இருக்க வேண்டும். இதுதான்
மற்றவர்களிடமிருந்து உதவியை பெற உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உங்களிடமுள்ள குறைகளை குறைத்து நிறைகளை பெற எப்போதும் முயலுங்கள்.
உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அது உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால்
என்று நினைத்து பிரச்சினைகளை அணுகுங்கள்.
படிக்க, படிக்க மனம் விரிவடையும். திறந்த மனம் வெற்றியின் விளைநிலம்.
பள்ளம் தான் மேட்டினை நிர்ணயிக்கிறது. குள்ளம் தான் உயர்வினை
வடிவமைக்கிறது. இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது. தவறு செய்வது தவறல்ல.
திருத்திக் கொள்ள மறுப்பது தான் தவறு. வெற்றி ஒரு அனுபவம் என்றால்
தோல்வியும் ஒரு அனுபவம் தான். உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்க
தயங்கி கொண்டு இருந்தால் தோல்வியை தழுவ நேரிடும். முயற்சி, பயிற்சி,
உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகிய ஐந்தும் தான் வெற்றியின் ரகசியங்கள்
ஆகும். எதில் ஈடுபட்டாலும் மன உறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக்
கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக் கொடுக்க வேண்டும். நாளுக்கு நாள்
முயற்சி கூடிக்கொண்டே இருக்க வேண்டும். இவை கூட, கூடத்தான் அதன் பலனும்
கூடிக்கொண்டேயிருக்கும். முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது.
நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கை தான். எப்படியாவது வாழ்ந்து
விடுவோம் என்று எண்ணுவதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற
குறிக்கோளுடன் வாழ்வதே வாழ்க்கை.
உங்கள் வாழ்க்கையில் எது செய்தாலும் ஒருபோதும் மற்றவர்களை
பின்பற்றாதீர்கள். பிரதியெடுப்பது தவறு. புதுமையாக சிந்தனை செய்து
வாழ்பவனுக்கு என்றும் எதிர்காலம் உண்டு. தேவையற்ற ஆசைகளை ஒழித்து கொண்டு,
அவசியமான ஆசைகளை வளர்த்து கொள்ளவேண்டும். உன் திறமையை தூண்டி விட
மற்றவர்களால் முடியும். உன்னை வளர்த்துக்கொள்ள உன்னால் மட்டும் தான்
முடியும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழந்து
விடக்கூடாது. பிறரிடம் காணும் குறையை, நம்மிடம் எப்போதும் அண்டவிடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் துயரங்களை பார்த்து இரக்கப்படு.
உன் துயரங்களை உன்னோடு மட்டுமே வைத்துக் கொள்.
உயர்ந்த பண்புக்கு அடிப்படை, சின்ன, சின்ன தியாகங்கள் ஆகும். நம்பிக்கை
வைத்தவனை ஏமாற்றுவது சாமாத்தியம் அல்ல. அது துரோகம் தான். பொறுப்பில்
இருக்கும் ஒவ்வொருவரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில்
இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு காரியத்தை சாதிக்க
நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில்
அடியெடுத்து வைக் கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆற்றில்
ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல,
நாமும் வெற்றியை நோக்கி ஓட வேண்டும். வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க
தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும். ஆதலால்
வெற்றியின் ரகசியமான விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலிலும் ஈடுபட்டால்
வெற்றி என்றுமே நம்மை பின்தொடரும்.
0 Comments