இன்னும் ஐந்து மணிநேரத்தில் ஊர் வருவேன் என பதிந்த சர்ஃபுதீன் கேரள விமான விபத்தில் மரணமானார் : விபத்தில் சிக்கியவர்களின் சாட்சியங்கள் - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, August 8, 2020

இன்னும் ஐந்து மணிநேரத்தில் ஊர் வருவேன் என பதிந்த சர்ஃபுதீன் கேரள விமான விபத்தில் மரணமானார் : விபத்தில் சிக்கியவர்களின் சாட்சியங்கள்

சர்ஃபுதீனுக்கு 29 வயதாகிறது. அவர் மீண்டும் கூடு திரும்புவதில் அவ்வளவு ஆர்வமாக இருந்தார். இன்னும் ஐந்து மணிநேரத்தில் ஊர் வருவேன் என சமூக ஊடகத்தில் எழுதி இருந்தார்.

அவரது அந்த பதிவும், மனைவி மற்றும் குழந்தையுடன் அவர் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சர்ஃபுதீனின், நம்பிக்கை அனைத்தும் உருக்குலைந்தது. துபாயிலிருந்து கோழிக்கோடு திரும்பிய விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளானதில் சர்ஃபுதீன் உயிரிழந்தார்.

உற்சாகம் ததும்பும் கண்களுடன் தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்திருந்த இரண்டு வயது மகள் ஃபாத்திமாவுக்கு தலையில் காயம். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்ததை அடுத்து
கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர் உறவினர் ஹனி ஹசன், "அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் கூறினர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்,"என்றார்.

உடைந்த குரலில் பேசிய ஹனி ஹசன், சர்ஃபுதீனின் மனைவி அமினா ஷரின் அதிகாலை 5 மணிக்கு, அறுவை சிகிச்சைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு பேசியதாகக் கூறுகிறார்.

"அமினாவுக்கும் பயங்கரமான காயம், கால்களில் ஏராளமான காயம். அவருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கிறது. தொடர்ந்து தன் கணவர் எங்கே என கேட்டுக் கொண்டே இருக்கிறார்," என்கிறார் ஹசன்.

ஃபாத்திமாவுக்கு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கிறது, அமினாவுக்கு மலபார் மருத்துவ கல்வி மையத்தில் அறுவை சிகிச்சை நடக்கிறது.

சர்ஃபுதீன் அங்கு விற்பனை பிரதிநிதியாக பணியாற்றுவதாக ஹசன் கூறுகிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயிலிருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு முதல் இன்று காலை அதிகாலை வரை நடந்த மீட்புப் பணிகளை அடுத்து தற்போது சம்பவம் நடந்த இடத்தில் விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவரின் சாட்சியம்

விமானம் விபத்துக்கு உள்ளான சமயத்தில் என்ன நடந்தது என்பதை அதில் பயணித்த 46 வயது பயணியான ஜயமோல் ஜோஷஃப் தமது குடும்ப உறவினர் சாதிக் முகம்மதுவிடம் விவரித்து இருக்கிறார்.

பிபிசியிடம் பேசிய சாதிக், "விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தில் இறங்கி மீண்டும் மேலே ஏறி இருக்கிறது விமானத்தின் உள்ளே இருந்த அனைவரிடமும் ஒருவிதமான அச்சம் பரவி இருக்கிறது. விமானம் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதை ஜயமோல் உணர்ந்திருக்கிறார்," என்று தெரிவித்தார்.

"விமானத்திலிருந்த அனைவருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. விமானம் விபத்துக்கு உள்ளான பிறகு, அதில் இருந்த பயணிகள் அனைவரும் உறவினர்களுக்கு அழைத்திருக்கிறார்கள். ஜயமோல் எங்களுக்கு அழைத்தார்," என்று கூறுகிறார்.

ஜயமோல் ஜோசஃப் தமது நண்பர்களைச் சந்திக்க துபாய் சென்றிருக்கிறார். மார்ச் மாதம் திரும்ப வர திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், கொரோனா தொற்றால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதன் காரணமாக அவரால் திரும்ப வர முடியவில்லை.

"அதிர்ஷ்டவசமாக அவர் நலமாக இருக்கிறார். அவர் 31வது வரிசையில் அமர்ந்து இருந்ததால் அவர் தப்பித்தார். அவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்," என்கிறார் சாதிக்.

பணம் இல்லாததால் பிழைத்த பயணி

அஃப்சல் பரா மற்றொரு அதிர்ஷ்டசாலி பயணி. இருபத்து ஆறு வயதான அந்த பயணி, விமானத்தைத் தவறவிட்டு இருக்கிறார்.

அவரது உறவினர் ஷமீல் முகமது, "அவரிடம் பணம் இல்லை. அவரது விசாவும் ரத்து ஆகி இருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாக அவருக்கு வேலை இல்லை. விமான நிலையம் செல்வதற்குக் கூட பணம் இல்லாமல் இருந்திருக்கிறார்." என்கிறார். BBC

No comments:

Post a Comment

Pages