ரத்ன தேரர் பதவி விலகி ஞானசார பாராளுமன்றம் புகுவார் வெகுவிரைவில் - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, December 19, 2020

ரத்ன தேரர் பதவி விலகி ஞானசார பாராளுமன்றம் புகுவார் வெகுவிரைவில்

 (இராஜதுரை ஹஷான்)


அபேஜன பலவேகய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளதெனவும், வெகுவிரைவில்  பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வார் எனவும் அபேஜன பலவேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார்.

அத்துரலியே ரத்ன தேரருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் வேதிரிகல விமலதிஸ்ஸ தேரர் முறையற்ற விதத்தில் செயற்பட்ட காரணத்தால் வாக்களித்த 69 ஆயிரம் மக்களும் நெருக்கடிக்குள்ளானார்கள்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க, கட்சியின் செயற்குழு தீர்மானித்தது. ஞானசார தேரர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்வதற்கு சட்ட சிக்கல் காணப்பட்டது. 

ஏனெனில், தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் ஞானசார தேரரின் பெயர் கட்சியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் எழுந்தது. ஆகவே, ஞானசார தேரரும் அத்துரலியே ரத்ன தேரரும் கலந்துரையாடினார்கள். தேசிய பட்டியல் ஆசனத்தை ரத்ன தேரருக்கு வழங்க ஞானசார தேரர் இணக்கம் தெரிவித்தார். 

இந்த தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் ரத்ன தேரரின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமானம் செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்புரிமையை சுயமாகவே துறப்பதாக அத்துரலியே ரத்ன தேரர் வாக்குறுதி வழங்கியுள்ளார். 

இவர் பாராளுமன்ற உறுப்புரிமையை துறந்த பின்னர் பொதுபலசேனா அமைப்பின்   பொதுச்செயலாளர்  ஞானசார தேரர் பாராளுமன்ற உறுப்பினராக வெகுவிரைவில் சத்திய பிரமாணம் செய்வார் என குறிப்பிட்டார். -JM-

No comments:

Post a Comment

Pages