பாட்டு போட்டு, காசு கொடுத்து வாக்கு சேர்க்கும் அரசியலில் இருந்து எமது அரசியல் தலைமைகள் மாறுமா (சுக்ராவை தொடர்ந்து சாணக்கியன் அலை) - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, February 7, 2021

பாட்டு போட்டு, காசு கொடுத்து வாக்கு சேர்க்கும் அரசியலில் இருந்து எமது அரசியல் தலைமைகள் மாறுமா (சுக்ராவை தொடர்ந்து சாணக்கியன் அலை)


சுக்ரா அலை ஓய்ந்துவரும் போது மறுபடியும் சாணக்கியன் அலை வீச ஆரம்பித்துள்ளது, கடந்த மாதம் பலவந்த ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் மும்மொழியில் பிளந்து தள்ளிய கௌரவ ரா. சாணக்கியன் அவர்களை தலையில் வைத்து கொண்டாடியது முஸ்லிம் சமூகம், ஆம் அது வெறும் உரையல்ல கொண்டாடப்பட வேண்டிய சரவெடி அது,
இன்று கடைசி தினமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காரணகர்த்தாவாக அல்லது முளையாக இருப்பது சுமந்திரன் ஐயா இருப்பது போல, சாணக்கியன் எம்பீயின் துடிப்பான அந்த ஆளுமைதான் முதுகெழும்பு என்றால் அது மிகையல்ல,
வெள்ளை சர்ட், கறுப்பு கறை வேஷ்டியோடு ஆறடி உயரமான அந்த மனிதர் “தடை அதை உடை” என சொல்லாமல் சொல்லி ஒரு காட்டாறு போல அணை கடந்து பீரிட்டு பாய்ந்து செல்கிறார், ஒரு செலிப்ரிட்டிக்கு கிடைக்கும் வரவேற்பு, ஆரவாரம் சகோ. சாணக்கியனுக்கு கிடைத்திருப்பது ஒன்றும் புதினமல்ல,
(“ஆதவன் எழுந்து ....... “ பாட்டை போட்டு சாணக்கியனை பாருங்கள், அஷ்ரப் தெரிவார்)
மக்களை ஆகர்ஷிக்கும் கலையை நன்கறிந்த மனிதர், கண்டி திரித்துவ கல்லூரி செதுக்கிய ஆளுமை என்றால் சொல்லவா வேண்டும்?
தடையுத்தரவு கொடுக்க வந்த போலீசை நையாண்டி பண்ணி ரோல்ஸ் சாப்பிடுவதாக இருக்கட்டும்,
STF, போலீஸ் பின்னால் துரத்த துள்ளியோடும் குட்டி யானை போல அடைமழை என்று கூட பாராமல் தமிழ்பட க்ளைமேக்ஸ் போல நேர்கொண்ட பார்வை, தளறாத நடையென, முன் வைத்த கால்களை பின்வைக்கவில்லை அவர்,
“அவரே ஒரு தனிமனித பேரணியாக பளீர்னு தேர் போல தெரிகிறார்”
இளையவர்கள் சாரி சாரியாக புதிய உத்வேகத்தோடு பின்தொடர, முஸ்லிம் இளைஞர்களும் தோள் கொடுக்கிறார்கள், ஆம், இது தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம்,
சுதந்திர தினத்தன்று காத்தான்குடியில் சுமந்திரன் ஐயா அவர்கள் இது தமிழ், முஸ்லிம், மலையக உறவுகளுக்கான பேரணி என்பதை விளக்குவது வரலாற்று நிகழ்வு.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள மனித உரிமை மீறல்களுக்கான அமர்வு எதிர்வரும் 22ம் தேதி இருக்கும் நிலையில், இந்த பேரணி நடப்பது தான் இங்கே ஹைலைட்,
තැටිය රත්වෙලා තියෙද්දී රොටිය පුච්චගන්න ඕන, ஆம், ஓடு சூடா இருக்கும் போது தானே ரொட்டியை சுட வேண்டும்? இந்த கைங்கர்யமே தமிழர் கூட்டணி அரசியல் சாமர்த்தியம்.
இங்கு இதனை தான் நாம் ஒரு சமூகமாக தமிழ் உறவுகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது,
நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியாத அரசியல் தலைமைகள்,
ஊழல், சொத்து குவிப்பு என மடியில் கனத்தோடு டீல் அரசியல் என எந்த பெரும்பான்மை கட்சியையும் பகைத்துக் கொள்ள முடியாத அரசியல் வியாபாரிகள் எம்மை ஏலம் விடுபவர்களாக இருக்க,
எமது சமூகமோ ஒரு சுமந்திரன் - சாணக்கியன்களுக்காக ஏங்குவது பேராசையல்லவே,
ரிசாத் - ஹக்கீம் அரசியலில் paradigm shift அதாவது மாற்றி யோசிக்க வேண்டிய காலம் வந்தாகிட்டு, இனிமேலும் ஊசிப்போன அந்தர்பல்டி அரசியலிலிருந்து ஒதுங்கி புதிய பாதையில் பயணியுங்கள்,
முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் சொத்து சேர்த்தது போதும், உங்கள் பாதைகளை மாற்றிக் கொள்ளுங்கள், குளிரூட்டப்பட்ட சொகுசு அறைகளை, வாகனங்களை விட்டு வெளியே வாருங்கள், மக்களோடு மக்களாக சங்கமித்து, தோளோடு தோள் சேர்த்து பயணிக்கவில்லையென்றால், வெகு சீக்கிரம் தொலைந்து போவீர்கள், (இப்போது கூட கிட்டத்தட்ட அந்த நிலமைதான்)
கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு சுமந்திரனோ, சாணக்கியனோ முஸ்லிம் அரசியலில் இல்லை, எங்கு பார்த்தாலும் ஹிஸ்புல்லாக்களும், அதாவுல்லாக்களும்,அமீர் அலிகளும், ஹாபிஸ் நசீர்களுமாக பார்த்து ஒரே அலுப்பா போயிட்டு, அருவருப்பு வேற ....
பாட்டு போட்டு, காசு கொடுத்து வாக்கு சேர்க்கும் அரசியலில் இருந்து எமது அரசியல் தலைமைகள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மாறுவதா? தொடர்ந்து நாறுவதா?

-சஹீத் ரிஸ்வான்-

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages