கொள்ளை நோய்கள் இஸ்லாமியப் பார்வை!

 


அச்சம், பசி, சொத்து உயிர் இழப்புகள், விளைச்சல்களில் வியாபாரங்களில் நட்டம் போன்றவற்றினால் மனிதர்கள் சோதிக்கப்படுவது இறைநியதி.

கொள்ளை நோய்கள் விசுவாசிகளுக்கு நல்லோருக்கு அருளாகவும், தீயவருக்கு தண்டனையாகவும் வரலாம்!
சோதனைகள் வரும் பொழுது அவை தீயவர்களை மட்டும் தீண்டுவதில்லை, நல்லவர்களையும் பாதிக்கின்றன, ஆனால் பின்விளைவுகள் தான் ஈருலகிலும் இருசாராரிற்கும் வேறுபடுகின்றன.
சோதனைகளுக்கு முறையாக முகம் கொடுப்பது ஒரு வணக்க வழிபாடாகவும், அறப்போராகவும், அறப்பணியாகவும் அமைய வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிகாட்டலாகும்.
விசுவாசிகள் சோதனைகளை அருளாக அமைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதில் தான் அவற்றை வெற்றி கொள்ள முடியும்.
இயற்கை அனர்த்தங்கள் அல்லது செயற்கை அனர்த்தங்களாக இருப்பினும் சோதனைகள் அல்லாஹ்வின் நாட்டத்தினால் ஏற்படுகின்றவை என்பதனை விசுவாசிகள் ஆழமாக நம்ப வேண்டும்.
சோதனைகளில் இருந்து வருமுன் காப்பதுவும், அவற்றை கையாளுவதுவும் அவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதுவும் பெளதீக காரணிகளோடு மாத்திரம் நிறைவேறுவதில்லை.
ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளுடன் அவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதும் பிரார்தனைகளோடும் நல்லமல்களோடும் முன்னெச்சரிக்கையாக வாழ்வதும் பிரதான அடிப்படையாகும்.
தண்டனைகளாக அவை அமைந்துவிடாதிருக்க இறைநிராகரிப்பு, பூமியில் அநீதி அக்கிரமம், பஞ்சமா பாதகங்கள், பாவங்கள் என்பவற்றிலிருந்து மனிதர்கள் தம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அனர்த்தங்கள் இழப்புக்கள் கொள்ளை நோய்களின் பொழுது எமது விசுவாசம் பொறுமை, எமது பண்பாடுகள், நடத்தைகள், செயற்பாடுகள் சோதிக்கப் படுகின்றன.
விசுவாசிகள், ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டவர்களாக பொறுமையாக நற்கருமங்களுடன் சோதனைகளை கடந்து செல்வார்கள், அவற்றில் அவர்களுக்கு இம்மையிலும் மறுமமையிலும் உள்ள நன்மைகளை பலாபலன்களை மனதிற் கொள்வார்கள்.
சோதனைகளின் பொழுத அவற்றிலிருந்து தம்மையும் பிறரையும் காத்துக் கொள்ள உண்மை விசுவாசிகள் தம்மால் இயன்ற அனைத்தையும் தனியாகவும் கூட்டாகவும் மேற்கொள்வார்கள் அதற்காகவே சோதனைகள் தரப்படுவதாக ஆழமாக நம்புவார்கள்.
அனரத்தங்கள் இழப்புக்கள் கொள்ளை நோய்கள் வரும் பொழுது தத்தமது குடும்பங்களில் அண்டை அயலவர்களில் சமூகத்தில் என ஏழை எளியவர்கள் தேவையுடையவர்கள் விடயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது அடுத்த பிரதான சோனையாகும்.
உண்மையான விசுவாசிகள் தனியாட்களாகவும் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும் மானுட நேயப்பணிகளை, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அவற்றிற்கு தம்மால் இயன்ற பங்களிப்புக்களை செய்வதில் சுயேட்சையாக ஆர்வம் காட்டுவார்கள்.
சோதனைகளை விசுவாசிகளாக எதிர்கொள்வோருக்கும் நாத்திகர்களாக நிராகரிப்பாளர்களாக எதிர்கொள்வோரிட்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
சோதனைகளின் பொழுது பொதுநலன் பிறர்நலன் பேணுவோருக்கும் சுயநலமிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.
அந்த வகையில் சோதனைகளை அருளாக ஆனுபவிப்பதற்கும் தண்டனைகளாக அனுபவிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நாம் உணர்ந்து அவற்றை வெற்றி கொள்ள வேண்டும், அப்போது தான் வணக்க வழிபாடுகளாக, அறப்போராக, அறப்பணிகளாக அவை ஈருலக ஈடேற்றங்களைத் தருகின்றன.
அத்தகைய நல்லடியார்களுக்கே அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் சுபசோபனங்களும் நன்மாரராயங்களும் கூறப்படுகின்றன.
எல்லாம் வல்ல அல்லாஹ், உண்மை விசுவாசிகளாக சோதனைகளை எதிர்கொள்ளவும் அவற்றில் வெற்றி பெறவும் எமக்கு நல்லருள் புரிவானாக!
இதனை ஒரு சதகதுல் ஜாரியாவாக பதிவு செய்துள்ளேன், நீங்களும் இதனை பகிர்ந்து கொண்டு நற்பணியில் பங்காளராகுங்கள், இன்ஷா அல்லாஹ் சோனைகளை உண்மை விசுவாசிகளாக வெற்றி கொள்வோம்!
எம்மையும் எமது பெற்றார் உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், அன்பிற்குரியோர், ஆசான்கள் அனைவரையும் உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍🏻
03.06.2021

Post a Comment

0 Comments