இவ்வருட HAJ கடமைக்காக 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதி - சவுதி அறிவிப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, June 5, 2021

இவ்வருட HAJ கடமைக்காக 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதி - சவுதி அறிவிப்பு

 (ஏ.ஆர்.ஏ.பரீல்)


இவ்வருட ஹஜ் கடமைக்காக 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என சவூதி அரேபிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் யாத்திரிகர்கள் அடங்குவார்கள் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பயணிகளே அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிக்கப்படும் யாத்திரிகர்கள் அனைவரும் நல்ல தேகாரோக்கியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு பயணம் மேற்கொள்வதற்கு முன்னராக 6 மாத காலத்தில் எந்தவிதமான நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கக் கூடாது. அதற்கான அத்தாட்சி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

யாத்திரிகர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசி ஏற்றுக் கொண்டதற்கான அட்டை அவர்களது நாட்டு சுகாதார அமைச்சு, வைத்தியசாலை என்பவற்றின் மூலம் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு தடுப்பூசி, சவூதி அரேபிய சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனங்களிலிருந்து பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை வந்தடைந்ததும் உடனடியாக 3 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். முதலாவது தடுப்பூசி ஷவ்வால் மாதம் முதலாம் பிறையில் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஈதுல் பித்ர் தினத்தன்று பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது தடுப்பூசியை சவூதி அரேபியாவை வந்தடைவதற்கு 14 நாட்களுக்கு முன் பெற்றிருக்க வேண்டும். அத்தோடு சமூக இடைவெளி மாஸ்க் என்பன உட்பட அனைத்து யாத்திரிகர்களும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்க வேண்டும்.

சவூதி சுகாதார அமைச்சு இது தொடர்பில் 9 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. – Vidivelli

No comments:

Post a Comment

Pages