மாட்டிக் கொண்ட Youtuber மதன் - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, July 24, 2021

மாட்டிக் கொண்ட Youtuber மதன்

 
இன்றைய உலகில் கூகுளுக்குப் பிறகு  அதிகமானோர்  பயன்படுத்தும் தளமாக  மாறியிருக்கிறது யூடியூப்.

 உலகில் யூடியூப்பின் மிகப் பெரிய சந்தையாக விளங்கும்  இந்தியாவில், பல யூடியூப் 

அலைவரிசைகள் கோடிக்கணக்கான  பார்வையாளர்களைப் பெறும்  அளவுக்குப் பிரமாண்டமான  வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

இங்கு, இந்தி மொழிக்கு அடுத்ததாக  யூடியூப்பில் அதிக உள்ளடக்கவீடியோக்களைக் கொண்டுள்ள மொழியாகத் தமிழே உள்ளது.


இச்சூழலில் தான் யூடியூப்பரின்  குற்றங்கள் வெளியுலகிற்குத் தெரிய 

வருகின்றன.

சமீப காலமாகத் தமிழ் நாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியவர் யூடியூப்பர் மதன்.

தமிழகத்தின் சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, பின்னர் சென்னை வாசியாக மாறிய இவர் ( வயது 29, பொறியியல் துறையில் கற்றவர்), சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை ' ‘டாக்சிக் மதன் 18+’ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கி நிகழ்நிலை (Online )  வழியூடாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


‘ பப்ஜி’ விளையாட்டைத்  திறமையாக விளையாடும் இவர், நிகழ் நிலையில் விளையாட்டை விளையாடும்போதே அதை எவ்வாறு  வெற்றி கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கி வந்தார்.

பதின்ம வயதினரான இளையோரே இவரது யூடியூப் சேனலைப்  பின்பற்றுவோராக இருந்தனர்.

 

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீடுகளில் முடக்கப்பட்ட இவர்கள் வீடுகளில் இருந்து நிகழ்நிலை வகுப்புகளில் கற்கும் நிலை உருவாகியது. 


அலைபேசியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மாணவர்களில்  சிலரும், வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளுமே பப்ஜி மதனின் யூடியூப் சேனலின் சந்தாதாரர்கள். இவர்கள் மதனின் யூடியூப் சேனலைப் பார்க்கத்  தொடங்கியதோடு நில்லாமல்  தமது பாடசாலை , கல்லூரித்  தோழர்களையும் இணைத்துக் கொண்டதால் மதனின் வருமானம்  பெருகியது.

 அவரின் யூடியூப் சேனலைப்  பின்பற்றுவோர் அதிகமாக 7,8  இலட்சம் பார்வையாளர்கள் இணைந்தனர்.

இதனால் மாதம் எட்டு இலட்சம் முதல் பத்து இலட்சம்வரை பணம் சம்பாதித்தார்.

இதனால் அவரது அத்துமீறல்  அதிகரித்தது. வலைத்தளங்கள் குறித்த பெற்றோர்களின் அறியாமை,  பிள்ளைகள் படிக்கிறார்கள் என்ற  பெற்றோரின் நம்பிக்கையை திசை மாற்றித் தனது பணம் சம்பாதிக்கும்  முயற்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார் மதன்.


சமூக அக்கறை குறித்த  சிந்தனை வளராத பால்யப் பருவம்,  வாலிபப் பருவம் இடையே குழப்ப மனநிலையிலும் ஆர்வ மனநிலையிலும் உள்ள இத்தகைய  இளம் பருவத்தினரைத் தனது பேச்சால் வளைத்துப் போட்டமதன், இதன்மூலம் இளம் தலைமுறையினரை வன்முறை எண்ணம் கொண்டோராகவும் சமூக அக்கறை எதுவும் இல்லாதவர்களாகவும் மா‌ற்றினார்.


வளர்கின்ற பருவத்தில் இளம் பருவத்தினர் தவறாக  வழிநடத்தப்பட்டால் அது அவர்களது குடும்பத்தையும் தாண்டி சமுதாயத்தையும் பாதிக்கும். 


அதிலும், ‘பப்ஜி கேம்’ போன்றவை முதலில் வன்முறை எண்ணம் கொண்டவர்களாக அவர்களை மாற்றும்.

இதன்மூலம், சகிப்புத் தன்மையின்மையும் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதே கூடாது என்கிற எண்ணமும் வளரும்; மற்றவர்களது துன்பங்களைக்கண்டு மகிழும் எண்ணம் வளரும்.


இதனால் வன்முறை எண்ணம் கொண்ட இளம் தலைமுறையினர் வளரவே வாய்ப்புள்ளது என்பதால் ‘பப்ஜி கேம்’ இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

ஆயினும் அதைக் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும் தமது ஆசைக்குப் பயன்படுத்திக் கொண்டார் மதன். மேலும், இவரது வீடியோவில் ஆபாசமாகப் பேசுவதை வழமையாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சந்தாதாரரான பெண்ணொருவர், ஆபாசப் பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டபோது, அவரைத் திட்டிப் பேசியுள்ளார்.

தன்னை விமர்சித்தவர்களை நாக்கூசும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதை எதேச்சையாகக் கண்ட சமூக ஆர்வலர்கள், இதனைக் கண்டித்தபோது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் எல்லைமீறிய மதனின் யூடியூப் சனலின் மீது 'சைபர் க்ரைம் ' பொலிஸாரிடம் புகார்கள் குவிந்தன.

மேலும், மாநிலக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு, முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைக்கு வருமாறு அழைத்தபோது மதன் தலைமறைவானார்.

 பொலிஸார் இவரின் அலைபேசி எண்ணை ‘ட்ராக்’ செய்தபோது, நவீன தொழில்னுட்பம் மூலம் அவர்களைக் கண்காணிக்க முடியாத அளவுக்குச்  செய்தார்.


இவரது மனைவி,தந்தை ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மதனின் சொத்துகள் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதனின் இத்தகைய செயல்களுக்கு மனைவி கிருத்திகாவும் ( வயது 25 , பொறியியல் துறையில் கற்றவர்) துணைபோன செய்தி தெரியவந்தது.

மதனின் இத்தகைய செயல்களுக்கு ஆலோசனை வழங்கி, அனைத்து செயல்களுக்கும் மூளையாக விளங்கினார்.

 அவர், கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். எட்டுமாத கைக்குழந்தைக்குத் தாயான இவர், தனது கணவர், நாளொன்றுக்கு 20 மணிநேரம் கடினமாக உழைத்ததாலேயே தங்கள் வங்கிக்கணக்கில் இருப்பு அதிகரித்தது என்பதை ஊடகவியலாளளர் சந்திப்பொன்றில் வலியுறுத்தினார்.

மதனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், இவரது தந்தை மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தர்மபுரியிலுள்ள உறவினர் ஒருவரது வீட்டில் வைத்துக் கைது செய்தனர்.

கைதுசெய்து அழைத்து வரப்பட்ட மதனின் நிஜத்தோற்றத்தை நம்ப மறுத்தனர், அவரைக் கண்மூடித்தனமாக விரும்பிய இளையோர். தனது தோற்றத்தை நவீன தொழில்நுட்பம் மூலமாக மாற்றியமைத்து, அழகான ஒரு கதாநாயகனாக சித்திரித்திருந்த மதனின் நிஜத்தோற்றம் அவ்வாறில்லை என்பது அவர்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கியிருந்தது.  

பொலிஸாரின் பிடியில் சிக்கிய மதன், அவரது வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு தனது செயற்பாடுகளை நிகழ்த்திக்காட்டுமாறு கேட்கப்பட்டதுடன் அவர் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டது வேடிக்கை. 

எனினும் விசாரணைகளுக்கு அவை உதவும் என்பதினாலேயே அவ்வாறு கேட்கப்பட்டார் எனக்கூறப்பட்டது.

ஆரம்பத்தில், உணவகம் ஒன்றை நடத்துவதற்காக வங்கியில் ரூபாய்ஐந்து லட்சம் கடன் பெற்று, அதில் நட்டம் ஏற்படவே, தலைமறைவான மதன் யூடியூப் பக்கம் மூலம் பெற்ற வருமானத்தில் பங்களா, சொகுசு கார்கள், வங்கியில் கணிசமான பணம் என்னும் அளவுக்கு உயர்ந்தார்.

மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரின் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கூகுள் பே மூலமாக மதன் பலரிடம் பணம் பெற்றிருக்கிறார். 

 என்பதுவும், இவரது மனைவியின் வங்கிக் கணக்கில் நான்கு கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், அதற்கு வருமானவரி செலுத்தப்படவில்லை என்பதும் 45 இலட்ச மதிப்பில் ஒரு வீடும் இரண்டு சொகுசு கார்களும் பல இலட்ச ரூபாய் மதிப்பில் தங்க, வைர நகைகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

மதனின் குற்றச் செயல்கள் இவ்வாறு நீண்டு கொண்டு போனமைக்கு மதனே காரணம் எனக் கூறினாலும், அவரது யூடியூப் சேனலைப் பார்வையிட்டு சந்தாதாரர்களாகிய பதின்ம வயதினரின் பெற்றோருக்கும் கணிசமான பங்குள்ளது.


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றலுக்கான வளங்களை தேடிக் கொடுப்பதோடு நின்று விடாது,

அவர்களது செயற்பாடுகளை கண்காணிப்பவர்களாகவும் விளங்கவேண்டும். அவ்வாறின்றி பெற்றோர் தம் பிள்ளைகளைக் கண்மூடித்தனமாக நம்பி, தமது பொறுப்பிலிருந்து விலகும் போது மதன் போன்றோரின் அராஜகம் இடையூறின்றித் தொடரும் என்பது வெளிப்படை.

எனவே, பெற்றோர் தம் பிள்ளைகள் விடயத்தில் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளவேண்டும் என்பது  குடும்ப நலனையும் தாண்டி சமூக நலனுக்கு வித்திடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழி தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதனுக்கு சாலவும் பொருந்தும் என்றால் அது மிகை இல்லை.

No comments:

Post a Comment

Pages