கரைத்தீவு மக்களும் கற்பிட்டி மரைக்கார் ஆட்சியும் - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, September 15, 2021

கரைத்தீவு மக்களும் கற்பிட்டி மரைக்கார் ஆட்சியும்

 கரைத்தீவு புத்தளத்தின் மற்றொரு பழமையான முஸ்லிம் கிராமமாகும்.

இது தீவு என்று குறிப்பிடப்பட்டாலும் தீவு அல்ல கல்பிட்டிக் கடல்நீரேரிக்கு அக்கரையில் இருப்பதனால் கரைத்தீவு என்ற பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும்.

அரிப்பு மற்றும் மறிச்சிக் கட்டியூடாக வந்த தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே இக்கிராமத்தின் முதற் குடியேற்றவாசிகள் எனக் கருதலாம். குறிப்பாக அதிராம் பட்டினம் அம்மா பட்டினம் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் இம்முதற் குடியேற்றவாசிகளில் அடங்கியிருக்கலாம்.


பெரும்பாலும் உப்பு செய்கையை நம்பியே இக்குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம்.

பொன்பரப்பியின் வனவளமும் கடல் நீரேரியும் அவர்களின் அன்றாட ஜீவனோபாயத்திற்கு தொடர்ந்து உதவின.

கல்பிட்டி சீமான்களுக்கு சொந்தமான இடத்திலேயே கதைச்சுருக்கம் உருவாகியது.

கரைத்தீவில் கல்பிட்டி மரைக்காயர்களுக்கு ஏராளமான நிலப்பரப்பு சொந்தமாக இருந்தது.

இதனால் கல்பிட்டியின் ஏனைய பகுதிகளை விடக் கரைத்தீவில் மரைக்கார் ஆதிக்கம் தீர்க்கமான பரிபாலன முறையாக அமைந்தது.

கல்யாணம் முதல் கந்தூரிவரை மரைக்காரின் அனுமதியைப் பெறுவது கட்டாய வழக்கமாக இருந்தது.

மரைக்காரின் ஆணைக்கும் ஆலோசனைக்கும் ஊர் கட்டுப்பட்டது.

கல்யாணம் நடைபெறமுன்னர் சம்பந்தப்பட்டவர்கள் மரைக்காரை 101 வெற்றிலை 101 பாக்கு முதலியவற்றுடன் சென்று அவரது அங்கீகாரத்தைப் பெற்றனர்.

கல்யாணக் கடுத்தம்(பதிவு) எழுதும்போது கல்பிட்டி மரைக்கார் முன்னிலையில் கல்யாணம் நடந்ததாக எழுதப்பட்டே அன்றைய கரைத்தீவுக் கல்யாணங்கள் நடந்தது.

கிராமத்தின் சண்டை சச்சரவுகள், கணவன்-மனைவி தகராறு போன்றவற்றையும் மரைக்காரே தீர்த்துவைப்பார். மரைக்காரின் தீர்ப்பை மக்கள் தட்டி நடப்பது அபூர்வம். மரைக்கார் மக்களின் சுகதுக்கத்துக்களிலும் பங்கு கொண்டனர்.

குற்றங்குறைகள் இருந்தபோதிலும் மரைக்கார் ஆட்சிக்காலத்தில் அவர்கள் மூலமாக ஊர் பெற்று நன்மைகளை கரைத்தீவு மக்கள் நன்றி பெருக்குடன் நினைவு கூருகின்றனர். கரைதீவு இலக்கணப் புலவர் காலஞ்சென்ற பொண்ணு முத்தப்பா தமது காலத்துப் புகழ்பெற்ற கல்பிட்டி மரைக்கார் செ.மு.த.வின் மறைவின்போது பாடியுள்ள பாடலிலும் தமது ஊரை ஆண்ட செ.மு.த.மீதுள்ள நன்றியுணர்வு நன்கு வெளிப்படுவதைக் காணலாம்.
மாட கூட மாளிகையும் வயல்கள் தோட்டம் மற்றவையும் மூடிக் கண் முழிக்கும் முன்னே முற்றும் அழிந்து போமென்றே தேடிய பொருள் யாவற்றையும் தர்மம் செய்தார் ஏழைகளுக்கு.
காவிற் சிறந்திடும் கல்பிட்டியும் கடல் சூழிலங்கிடும் அக்கரையும் கோவிற் சிறந்திடும் புத்தளமும் குடியிற் சிறந்திடும் கரைத்தீவையும் மேவி அரசாண்ட மரைக்காரிவர் பெற்றார் போன வழியிலே சென்றார் கவன பதிக்கு
-கரைத்தீவின் வரலாறு
-புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும் புத்தகத்தில் இருந்து..

No comments:

Post a Comment

Pages