ஏ.ஆர்.ஏ.பரீல்
பல நூற்றாண்டு காலமாக இலங்கையில் நடைமுறையிலிருந்து வரும்
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில விதிகளையும், காதி
நீதிமன்ற முறையையும் இல்லாமற் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ்
காதிநீதிமன்ற முறைமை இல்லாமற் செய்யப்பட்டு அனைத்தும்
பொதுச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதற்கான
அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
வரலாறு நெடுகிலும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் உறுப்பினர்கள்
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த நிலையில் தற்போதைய
அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சராக
நீதியமைச்சர் அலி சப்ரியே பதவி வகிக்கிறார்.
இந்நிலையிலே தற்போதைய அமைச்சரவை காதிநீதிமன்ற முறைமையை
இல்லாதொழிப்பதற்கும், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில
பிரிவுகளை இல்லாமற் செய்வதற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த
அங்கீகாரத்தை நீதியமைச்சரினால் எதிர்க்க முடியாதிருந்துள்ளது.
இதனை நீதியமைச்சர் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்.
நூற்றாண்டு காலமாக முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் அனுபவித்து வந்த
இந்த உரிமை விரைவில் பறிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிராக
முஸ்லிம் சமூகத்திலிருந்து பரந்த அளவில் எதிர்ப்புகள்
வெளியிடப்படாதுள்ளமை கவலையளிக்கிறது. முஸ்லிம் சமூகத்தின்
புத்திஜீவிகள் குழுவொன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
காதிநீதிமன்ற முறைமை இல்லாமற் செய்யப் படக்கூடாதென்று மனுவொன்று
தயாரித்து தற்போது கையொப்ப வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த மனு
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சருக்கு அனுப்பி
வைக்கப்படவுள்ளது. இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள்
அமைச்சரவையின் தீர்மானத்தை தடுத்து நிறுத்துமா என்பது சந்தேகமே.
நீதியமைச்சர் அலி சப்ரியுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதில்
எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. அவர் அமைச்சரவையின்
தீர்மானத்திலும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையிலுமே இருக்கிறார்.
காதிநீதிபதிகள் போரம்
நாட்டில் 65 காதிநீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. காதி
நீதிபதிகளின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு காதி
நீதிபதிகள் போரம் என்ற அமைப்பொன்று செயற்பட்டு வருகிறது.
கடந்தவாரம் காதிநீதிபதிகளின் போரம் அமைச்சரவையின் தீர்மானம்
குறித்து நீதியமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடுவதற்கு நேரம்
ஒதுக்கியிருந்தது. என்றாலும் கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்ட
நிலையில் குறிப்பிட்ட கலந்துரையாடல் சூம் (zoom) செயலியூடாக
இடம்பெற்றது. இந்த சூம் செயலியூடான கலந்துரையாடலின் போதும்
நீதியமைச்சர் அமைச்சரவையின் தீர்மானத்தில் உறுதியாகவே
இருந்துள்ளார்.
காதிநீதிபதிகள் போரம் நீதியமைச்சருக்கு தனது கோரிக்கைகளை
எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை
காதிநீதிபதிகள் போரத்தின் தலைவர் ஏ.எல்.எ.எம்.பௌஸ் மற்றும் உதவித்
தலைவர் எம்.இப்ஹாம் யெஹ்யா ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி
வைத்துள்ளனர்.
கோரிக்கைகள்
காதிநீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு நீதிச் சேவை
ஆணைக்குழு மற்றும் காதிநீதிபதிகள் போரத்தினால் பயிற்சிகள்
வழங்கப்படுவதில்லை. நீதிவான்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு
நீதிவான்களின் நிறுவனம் (Judges Institute) தொடராக பயிற்சி வழங்கி
வருகிறது. ஆனால் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு
பயிற்சி வழங்கப்படுவதில்லை. காதிநீதிபதிகளுக்கு கடந்த 10
வருடங்களில் 3 பயிற்சிகளே வழங்கப்பட்டுள்ளன.
எனவே காதிநீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு காதி
நீதிபதிகள் போரத்துடன் இணைந்து பயிற்சிகள் வழங்க வேண்டும். இதற்கான
விரிவுரை மண்டபம், விரிவுரையாளர் கட்டணம், சான்றிதழ் என்பனவற்றை
நீதிச்சேவை ஆணைக்குழுவே வழங்க வேண்டும்.
காதிநீதிபதிகள் நியமனம்
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பில்
நீதியமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட குழு
சட்டத்தரணிகளே காதிநீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென
பரிந்துரைத்துள்ளது. ஆனால் இஸ்லாமிய சட்டம் பற்றிய அறிவு அனுபவம்
உள்ளவர்களே நியமிக்கப்பட வேண்டும்.
இதேவேளை பட்டதாரிகள், மௌலவிகள், அல்ஆலிம் பட்டம் பெற்றவர்கள்,
ஓய்வு நிலை அதிபர்களும் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட
வேண்டுமென காதிநீதிபதிகள் போரம் பரிந்துரைக்கிறது.
வழக்குகளை மாற்றுதல்
ஒரு காதிநீதிமன்றத்திலிருந்து வழக்கொன்றுவேறு
காதிநீதிமன்றுக்கு மாற்றப்படும் போது விஷேட காதியாக ஒருவர்
நியமிக்கப்படுவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நீண்ட காலம் சுமார் 3 – 5
மாதங்கள் எடுக்கிறது. இக்கால தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். இக்கால
தாமதத்திற்கு காதிநீதிபதிகள் மீதே மக்கள் குற்றம்
சுமத்துகிறார்கள். அத்தோடு தாபரிப்பு வழக்காக அது இருந்தால்
தாபரிப்பு பணம் பெற்றுக் கொள்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்
நீதிச்சேவை ஆணைக்குழுவில் முஸ்லிம் விவாக, விவாகரத்து
சட்டபிரிவுக்கு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் மற்றும் இஸ்லாமிய
சட்ட அறிவுடைய முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
ஏனைய நீதிமன்றங்களுக்கு தெளிவில்லை
நாட்டின் ஏனைய நீதிமன்றங்களான மஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் மாவட்ட
நீதிமன்றங்கள் என்பன முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில்
தெளிவில்லாமல் இருக்கின்றன.
காதிநீதிமன்றங்கள் தாபரிப்பு, கைக்கூலி, மஹர் என்பன
செலுத்தப்படாது நிலுவையாகிய நிலையில் அவற்றை
விண்ணப்பதாரிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு குறிப்பிட்ட
நீதிமன்றங்களுக்கு வலியுறுத்தற் கட்டளை அனுப்பி வைக்கின்றன.
நிலுவையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பதாரி
அந்நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் இந்த நடைமுறை
சட்டத்தில் இல்லை. நீதிமன்ற பதிவாளர் பிரதிவாதியிடமிருந்து
நிலுவை தொகையை அறவிட்டு குறிப்பிட்ட காதி நீதிமன்றத்துக்கே அனுப்பி
வைக்க வேண்டும். இந்நடைமுறை பின்பற்றப்படாமையினால்
பாதிக்கப்படும் பெண்கள் காதி நீதிபதிகளையே குறை கூறுகிறார்கள்.
மேன்முறையீடு
விவாகரத்து மற்றும் தாபரிப்பு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட
பின்னர் காதிநீதிபதிகள் மேன்முறையீட்டு சபைக்கு மேன்முறையீடு
செய்யப்படும் வழக்குகள் தீர்ப்பு வழங்குவதற்கு கால தாமதம்
ஏற்படுகிறது.
பிள்ளை தாபரிப்பு, மனைவி தாபரிப்பு வழக்குகள் மேன்முறையீடு
செய்யப்படும் போது மேன்முறையீட்டு சபை தீர்ப்பு வழங்கும் வரை
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தாபரிப்பு தீர்ப்பில் 50 வீதம் மாதாந்தம்
செலுத்தப்படுவதற்கு உத்தரவிடப்பட வேண்டும். இவ்வாறு வழங்க
உத்தரவிடப்படாததால் பெண்கள் பெரிதும்
பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
ஆலோசனைச் சபை
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாக காதிநீதிபதிகளுக்கும்,
முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக
ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட ஆலோசனைச் சபையில் தலைவருடன் மேலும் 9 பேர் அங்கத்தவர்களாக இருக்க வேண்டும்.
நியமிக்கப்பட வேண்டியவர்கள்.
தலைவர், பதிவாளர் நாயகம், ஏனைய அங்கத்தவர்கள் – 65 காதி
நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 காதிநீதிபதிகள்,
காதி மேன்முறையீட்டு சபை உறுப்பினர் ஒருவர், அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் காதி
பிரிவின் பிரதிநிதி ஒருவர், நீதியமைச்சரின் பிரதிநிதியொருவர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், வக்பு
சபையின் தலைவர் மற்றும் முஸ்லிம் விவாக பதிவாளர் ஒருவர்.
காதிநீதிபதிகளுக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இடம்
காதி நீதிபதிகளுக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மஜிஸ்திரேட்
நீதிமன்றில் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு இடம் ஒதுக்கப்பட
வேண்டும். தற்போது காதிநீதிமன்றங்கள் பாடசாலை கட்டிடங்களிலும்,
பள்ளிவாசல் மண்டபங்களிலும், சனசமூக நிலையங்களிலுமே இயங்கி
வருகின்றன. இதனால் மக்கள் காதிநீதிமன்றினை தரக்குறைவாக
கருதுகின்றனர்.
எனவே அனைத்து மாவட்டங்களிலும் காதிநீதிமன்றங்கள் செயற்படுவதற்கு
மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் மாதம் இரு நாட்கள் சனிக்கிழமைகளில் இடம்
ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.
சிங்கள மொழிபெயர்ப்பு
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
காதிநீதிமன்றங்கள் மீள கட்டமைக்கப்படல்
தற்போது அநுராதபுரம், பொலனறுவை, பதுளை மாவட்டங்களில் தலா ஒரு
காதிநீதிமன்றம் வீதமே இயங்கி வருகின்றன. இம்மாவட்டங்களில் தலா
இரண்டு காதிநீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
புதிதாக முல்லைத்தீவு, கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களுக்கு காதி நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் தற்போது 10 காதி நீதிபதிகள் கடமையாற்றுகின்றனர். இவ் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட வேண்டும்.
அடையாள அட்டை
நீதிச்சேவை ஆணைக்குழு காதிநீதிபதிகளுக்கு உத்தியோக அடையாள அட்டை
வழங்க வேண்டும் என காதிநீதிபதிகள் போரம் நீதியமைச்சரிடம்
கோரிக்கை விடுத்துள்ளது.
0 Comments