பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வட்ஸ்எப் எனப்படும் செல்லிடப்பேசி செயலியில், பயனாளர்கள் தாங்கள் எப்போது ஒன்லைனில் இருந்தோம் என்பதை ஒரு சிலருக்கு மட்டும் மறைக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
பயனாளர்களின் புரொபைல் புகைப்படம், ஒன்லைனில் கடைசியாக வந்தது எப்போது என்பது உள்ளிட்ட தகவல்களை பயனாளர்கள், தாங்கள் விரும்பாதவர்களுக்கு மட்டும் காண்பிக்காத வகையில் அமைத்துக் கொள்ளும் வசதியை வட்ஸ்எப்உருவாக்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, கடைசியாக ஒன்லைனில் வந்தது, புரொபைல் புகைப்படம், தங்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அனைவரும் பார்க்கலாம் அல்லது செல்லிடப்பேசியில் எண் உள்ளவர்கள் மட்டும் அல்லது யாரும் பார்க்க முடியாத வகையில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால், குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்க முடியாத அல்லது பார்க்க முடியும் வகையில் அமைக்கும் வசதி இல்லை. இதனால், ஒரு சில சிக்கல்களை பயனாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.
ஆனால், இந்த தொல்லை விரைவில் தீரப்போகிறது. விரைவில் பயனாளர்களின் புரொபைல் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை ஒரு சிலர் பார்க்க இயலாத வகையில் அமைக்கும் வசதியை வட்ஸ்எப் பரீட்சார்த்த முறையில் பரிசோதித்து வருகிறது.
இந்த வசதி மூலம், வட்ஸ்எப் பயனாளர்கள், தாங்கள் எப்போது ஒன்லைனில் இருந்தோம் உள்ளிட்ட தகவல்களை, ஒரு சிலர் பார்க்க இயலாத வகையில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
0 Comments