புத்தளம் கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இன்று (06) அதிகாலை சிறிய லொறியொன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து வருகை தந்த 20,
22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேர் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது குறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதி மற்றும் ஒருவரும் கடுமையான
காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் ஏனைய ஐவரும் சிறிய காயங்களுக்கு
உள்ளாகியிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இளைஞர்கள் சிலர் புத்தளத்தில் உள்ள நண்பர்களின் வீட்டுக்கு செல்வதற்காக புத்தளம் - குருநாகல் வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது, கல்லடி 6 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள சிறிய பாலம் ஊடாக பயணித்த
முச்சக்கர வண்டி ஒன்றுக்கு வழி விடுவதற்காக லொறியின் சாரதி லொறியை
பாலத்திற்கு அருகே நிறுத்த முட்பட்டுள்ள போதே குறித்த லொறி கவிழ்ந்து அந்த
பாலத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பாலத்திற்கு வீழ்ந்த லொறியை பாலத்திற்குள்
இருந்து வெளியே கொண்டு வந்ததுடன், காயமடைந்த இளைஞர்களை புத்தளம் தள
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-புத்தளம் நிருபர் ரஸ்மின்-
0 Comments