மத்திய கிழக்கு நாடுகளில் டெலிவரி சாரதிகளாக பணிபுரிபவர்களே! அவசியம் வாசியுங்கள்!

 


அன்பின் சகோதரர்களே!

மத்திய கிழக்கு நாடுகளில் மோட்டார் சைக்கிள் டெலிவரி சாரதிகளாக பணிபுரிபவர்கள் தயவு செய்து மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் பயணியுங்கள்.
 
மத்திய கிழக்கு நாடுகளில் வாகன நெருக்கடிகளும் அதிவேக நெடுஞ்சாலைகளும் இருப்பதனால் வேகமாக பயணிக்கும் வாகனங்களே அதிகம்.

இங்கே இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதென்பது மிகவும் ஆபத்தான ஒரு தொழில்.

கனரக வாகனங்கள் அதிவேகமாக பயணிக்கும் போது அதன் பின்னாலோ அல்லது அருகிலோ வரும் இரு சக்கர வண்டிகள் கனரக வண்டிகளின் கண்ணாடியில் அதனை ஓட்டும் சாரதிக்கு தெரிவதில்லை.
 
இதனால் தினமும் எங்கோ ஒரு இடத்தில் குறைந்தது 10 இற்கு உட்பட்ட விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
 
குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக வேறு வழியின்றி இந்த தொழிலில் பல எமது உறவுகள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். புதிதாக வெளிநாடுகளுக்கு வர இருப்போர் இனிமேல் இவ்வாறான ஆபத்தான தொழில்களில் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 
பெற்றோர்களே பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.
 
எனதருமை சகோதர்களே!
 
குடும்பத்தின் ஜீவனோபாயத்திற்காக நாம் ஒவ்வொருவரும் எம் உறவுகளை பிரிந்து இங்கே பல கஷ்டங்களுக்கு மத்தியில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
 
உங்களது உயிரை இழந்து எம் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தி விட்டு செல்லாதீர்கள்.

உணவுப் பண்டங்களை டெலிவரி செய்யும் சகோதரர்கள் குறித்த நேரத்திற்குள் அதனை வாடிக்கையாளரிடம் கையளிக்க வேண்டும் இல்லாவிடின் அந்த உணவிற்கான பெறுமதியினை நீங்கள் செலுத்த நேரிடும் என்ற அச்சத்தினால் அவசரமாக நிதானமற்று வண்டிகளை ஓட்டாதீர்கள்.
 
பொறுமையாக நேரத்தை கணக்கிட்டு உங்கள் கம்பனிகளிடம் புரியும் படியும் வாடிக்கையாளரிடமும் அழகான முறையில் சொல்லி நிதானமாக வாகனத்தை செலுத்துங்கள்.
 
உயிர் போனால் திரும்பாது எமக்கு இறைவன் அளித்த இந்த வாழ்க்கையை குறுகிய காலத்திற்குள் முடித்துக் கொள்ளாதீர்கள். இறைவன் நாடியிருந்தால் அது அவ்வாறே நடக்கும். அதற்காக உங்களை பாதுகாப்பதில் இருந்து பின்வாங்கி விடாதீர்கள்.
 
இன்ஷா அல்லாஹ் மறைமுகமாக செய்யும் தர்மங்கள் வர இருக்கும் ஆபத்துக்களை தடுக்கும் என்பார்கள் அதன் அடிப்படையில் உங்களால் முடிந்த அளவு தர்மங்களை செய்து கொள்ளுங்கள்.
 
நாட்டில் உள்ள குடும்பங்களே…!
 
இங்கே வேகா வெயிலிலும், கடுங்குளிரிலும் அல்லல்பட்டு உழைக்கும் உங்கள் மகன்களை அல்லது கணவனை
 
  மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் பேசாதீர்கள்!

 அடிக்கடி அவர்களுடன் சண்டை போடாதீர்கள்!

 உங்கள் பொருளாதார சிக்கல்களை அழகான முறையில் அவர்களுக்கு மெதுமெதுவாக எத்தி வையுங்கள்!

 நாட்டில் நடக்கும் துயரமான நிகழ்வுகளை உடனே அறிவித்து விடாதீர்கள். அவர்கள் ஓய்வாக இருக்கின்றனரா என முதலில் வினவி விட்டு பொறுமையுடன் தெரியப்படுத்துங்கள்!
 
இவ்வாறு நீங்கள் செய்யாமல் அதற்கு மாற்றமாக செய்வீர்களாயின் அது அவர்கள் வீதியில் வாகனம் ஓட்டும் போது அவர்களின் சிந்தனைகளை பிரச்சினையின் பக்கம் திசை திருப்பி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும்.
 
அன்பின் தோழர்களே!
 
மீண்டும் சொல்கிறேன் அவதானமாகவும் நிதானமாகவும் வாகனங்களை செலுத்துங்கள்..!
 
உங்களுக்கு தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Thanks to (Mohammed Rihan)

Post a Comment

0 Comments