இன்று உலகளவில் அனர்த்தங்களை இயற்கையுடனும் விலையேற்றத்தை ஆட்சியாளர்கள், நாட்டுடனும் இணைத்து சாடிப் பேசுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் யதார்த்தமாக பார்க்கின்ற போது இவை அனைத்தையும் வல்ல அல்லாஹ்வே ஏற்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்டி பாவங்களிலிருந்து விலக்கும் வண்ணம் அவர்களை மேலும் நெறிப்படுத்தி தம் பால் தொடர்புகளை அதிகரிக்கச் செய்கிறான்.
இவ்வடிப்படையில் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி தொடர்பாக இஸ்லாமும், இஸ்லாமிய அறிஞர்களும் என்ன கூறியுள்ளனர் என்பதை சற்று அலசுவோம்.
● அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் விலையயுர்வு ஏற்பட்ட போது மக்கள் நபியவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! எமக்கு பொருட்களது விலையை நிர்ணயித்து தாருங்கள்" என்று கேட்டனர், அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நிச்சயமாக அல்லாஹ்வே விலை நிர்ணயிப்பாளன், அவனே வாழ்வாதார தேவைகளை சுருக்குபவனும் விஸ்தீரப்படுத்துபவனும், உணவளிப்பவனுமாவான், மறுமையில் பொருளாதாரம், உயிர் பழி விடயத்தில் அநியாயம் இழைக்கப்பட்டதாக என்னிடம் உங்களில் யாரும் வினவாத படி நான் என் ரப்பை சந்திக்க விரும்புகிறேன்."
நூற்கள்: திர்மிதீ (1314), அபூ தாவூத் (3451), இப்னு மாஜா (2200), முஸ்னத் அஹ்மத் (11809).
● ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
"விலையேற்றம், விலை குறைவு என்பன அல்லாஹ் ஏற்படுத்தும் விடயங்கள் மட்டுமல்லாது அவனது நாட்டம், நியதி இல்லாமல் இவை நிகழ்வதில்லை. எனினும் அல்லாஹ் சில நிகழ்வுகள் நிகழ்வதற்கு மக்களது செயற்பாடுகளை காரணங்களாக அமைத்துள்ளான், உதாரணமாக கொலையாளி கொலை செய்வதானது கொலை செய்யப்படுபவனின் மரணத்துக்கான காரணமாக அமைத்துள்ளது போன்று விலையேற்றம் நிகழ்வது மக்களது அநியாயங்களை (பாவங்கள்) காரணமாக அமைத்துள்ளான், அத்தோடு பொருட்களது விலை இறங்குவது மக்கள் நல்ல முறையில் நடந்து கொள்வதை காரணமாக அமைத்துள்ளான்."
நூல்: மஜ்மூஉல் பதாவா (520-523/8)
● அபூ ஹாஸி(z)ம் ஸலமத் இப்னு தீனார் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் "அபூ ஹாஸி(z)ம் அவர்களே! பொருட்களது விலை அதிகரித்துள்ளதே இது பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று வினவப்பட்ட போது அவர்கள் "உங்களுக்கு இதில் என்ன கவலை! பொருட்களது விலை குறைந்த (சாதாரண) சந்தர்ப்ப்பத்தின் போது எமக்கு உணவளிக்கும் அதே அல்லாஹ் தான் விலையேற்றத்தின் போதும் உணவளிப்பவன்" என்று பதிலளித்தார்கள்.
நூல்: ஹில்யதுல் அவ்லியா லிபீ நுஐம் (239/3)
● கலாநிதி அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அல்பத்ர் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
" மக்களுக்கு உணவு உட்பட வாழ்வாத தேவைகளை வழங்கும் பொறுப்பை ஏக வல்லோனான அல்லாஹ்வே எடுத்துள்ளான், உலகிலுள்ள எந்த உயிரினமானாலும் அதற்குரிய அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதுள்ள பொறுப்பாகும் (அல்குர்ஆன்), ஆதலால் ஓர் அடியான் தனது தேவைகளை அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனிடம் அவற்றை முறையிட்டு வேண்டவும் வேண்டும், அவன் அறிந்துகொள்ளட்டும் உலகில் எந்த ஓர் ஆத்மாவும் தனக்கான உணவு மற்றுமுண்டான தேவைகளை பூரணமாக அடையாமல் மரணிப்பதில்லை, ஒருவனிடத்தில் மார்க்கம் (ஆன்மீகம்) சரியாக இல்லாத பட்சத்தில் தான் அவனை இவ்வாறான கவலைகள் ஆட்கொள்ளும்."
தகவல்: ஷைக் அவர்களது இணையத்தளம்
மேற் கூறப்பட்ட செய்திகள், வழிகாட்டல்களிலிருந்து விளங்குவது யாதெனில் மனிதனது நடத்தைகள், செயற்பாடுகளை வைத்தே அல்லாஹ் பொருட்களது விலைகளை கூட்டவும் குறைக்கவும் செய்கிறான். மக்களாகிய நாம் பாவங்களிலிருந்து விடுபடாமல் பொருட்களது விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் போது ஆட்சியாளர்களை, நாட்டை குறை கூறுவதிலோ, ஏசிப்பேசித் திரிவதிலோ எந்த பயனும் இல்லை.
ஆதலால் நாம் அதிகமதிகம் இஸ்திக்பார், தௌபா செய்து பாவங்களிலிருந்து விடுபட்டு எம்மை நாம் திருத்தி நற்கருமங்களில் ஈடுபடுத்தி வல்ல அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக ஆகும் பட்சத்தில் அனைத்து நிலமைகள், சந்தர்ப்பங்கள், ஆட்சியாளர்களைக் கூட எமக்கு சாதகமாக அமைத்து தருவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தொகுப்பு:
அஸ்(z)ஹான் ஹனீபா
24/02/2022
0 Comments