நோன்பு இஸ்லாத்தின் நான்காவது அடிப்படைக் கடமை. சுகதேகியான அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கடமையாக்கப் பட்டிருக்கின்றது.
புனித ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பதன் நோக்கம் பட்டினியாயிருப்பது மட்டுமல்ல. உள்ளத்தை கட்டுப்படுத்தவும் ஏனைய தவறுகளை சரிப்படுத்தி நேர்வழியை நோக்கிச் செல்லவுமான ஒரு களம் அமைக்கும் மாதமாக காணப்படுகின்றது என்றால் மிகையாகாது. நோன்பு பிடிப்பதில் பல்வேறு நன்மைகளிலிருப்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் அதை சிறிதளவு மாற்றி Intermittent fasting என்ற பெயரில் உடல் நிறையை குறைக்கும் முறையாகவும் பட்டினியிருப்பது பயன்படுத்தப்படுகின்றது.
நோன்பில் சஹர் நேரத்திலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை பட்டினியுடனும் தாகத்துடனும் இருப்பது எம்மை கஷ்டப்படுத்துவதற்காகவல்ல. இதன் நன்மைகளை அறிந்தால் தினமும் நோன்பு நோற்க முயற்சிப்பீர்கள் என்றே இஸ்லாம் கூறியுள்ளது.
பலரும் ரமழான் மாதத்தை அடைவதற்காக ஆர்வமாக இருக்கின்றோம். இதில் நன்மைகளை அதிகளவில் செய்து இறைவனின் நெருக்கத்தை அடைய காத்திருக்கின்றோம்.
அதேநேரம், இயற்கையின் மார்க்கமான இஸ்லாம் உங்களை கஷ்டப்படுத்தும் விடயங்களை கடமைப்படுத்துவதில்லை.
நோன்பு பிடிக்க கடினமான சந்தர்ப்பங்களில் அதை தவிர்ப்பதற்கான சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணமாக கர்ப்பினித் தாய்மார்கள் , பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் நோன்பை விடுவதற்கான சலுகையை அது வழங்கியுள்ளது.
கர்ப்ப காலத்தை பொருத்தவரை உடல் தொழிற்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான போசாக்கை வழங்கவும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கு தயாராகவும் பல மாற்றங்கள் தாயினுள் நடைபெறுகின்றன.
வயிற்றில் வளரும் சிசு தாயிலிருந்து தொடச்சியாக போசாக்கு, ஒட்சிசன் என்பவற்றை பெறுகின்றது. இதனால் கர்ப்பினித் தாய்மாருக்கு ஏனையவர்களை விட அதிகளவு போசாக்கு தேவை. இத்தேவை படிப்படியாக அதிகரித்துச் செல்லும்.
நோன்பைப் பொருத்தவரை அநேகமாக 14 மணித்தியாளங்கள் உணவருந்தாது நீரருந்தாது இருக்கும் போது சில கர்ப்பிணித் தாய்மாருக்கு கடினமாக அமையலாம். குறிப்பாக உடல்நிறை குறைந்த தாய்மார்களில் மற்றும் ஏற்கனவே பல்வேறு நோய்நிலைமைகளுடன் கர்ப்பம் தரித்தவர்களில் (Dehydration) மற்றும் குருதியில் சீனி மட்டம் குறைவடைதல் (Hypoglycemia) போன்றவற்றின் அறிகுறிகள் வெளிப்படலாம்.
அதேவேளை, சில நிலைமைகளில், உதாரணமாக, குழந்தையின் வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள், குழந்தையின் இரத்த ஓட்டம் குறைவு என அடையாளம் காணப்பட்டவர்கள் நோன்பை பிற்படுத்துவது சிறந்தது. அதேவேளை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் நோன்பு பிடிப்பதாயின் உணவுப் பழக்கங்களையும் மருந்துகளின் அளவையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே உங்கள் வைத்திய நிபுணரை நாடி மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
சுகதேகியான (Low risk pregnancy)தாய் நோன்பு நோற்பதால் குழந்தையில் நிறை குறைவு (Low birth weight), குறை மாதத்தில் குழந்தை கிடைத்தல் (Preterm labor) என்பவை ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு.
எனினும், தாய் தனக்கோ குழந்தைக்கோ பாதிப்புகள் ஏற்படலாம் என ஐயப்படின் நோன்பை பிரசவத்தின் பின்னர் நோற்பது சிறந்தது.
நோய் நிலைமைகள் உள்ளவர்கள் உடலை வருத்தி, சலுகை வழங்கப்பட்டுள்ள போதும் கூட அதைப் பயன்படுத்தாது நோன்பு நோற்பது சிறந்ததா? என்பதும் கேள்விக்குறிதான்.
ஆரோக்கியமான கர்ப்பினித் தாய் (Low risk Pregnancy)தனக்கு நோன்பு நோற்கமுடியும் என கருதின் அக்கடமையை செய்வதில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. சிலருக்கு தொடர்ச்சியாக நோன்பு பிடிப்பது கடினமாயின் முடியுமானளவு நோன்புகளைப் பிடித்துக் கொள்ளலாம்.
எனவே, கர்ப்ப காலத்தில் நோன்பு பிடிக்கலாமா? என்பது ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்குமிடையே வித்தியாசப்படும். ஏனைய நோய்கள் அற்ற சுகதேகியான கர்ப்பிணித் தாய்மார்கள் தமக்கு நோன்பு நோற்கலாம் எனக் கருதின் நோன்பு பிடிக்கலாம். ஏனையவர்கள் வைத்திய ஆலோசனைக்கமைய நோன்பு நோற்கலாம். விடுபடும் நோன்புகளை கழா செய்து கொள்வது போதுமானது.
Sheikh Rishard Najimudeen (MPhil, Senior Lecturer, Jamiah Naleemiah)
&
Dr A C Mohammed Musthaq
Consultant Obstetrician and Gynecologist
National Hospital Kandy
0 Comments