30 வருடங்களுக்கு பறிபோகும் கல்பிட்டி உச்சமுனை தீவு - மீனவர்களின் நிலை?

 


இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் கல்பிட்டி பிரதேச எல்லைக்குள் ஒருபுறம் பாக்குநீரிணையையும் மறுபுறம் "டச் வளைகுடா"வையும் கொண்டுள்ள 14 சிறிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. அதில் 25 ஹெக்ரர் பரப்பளவைக் கொண்ட இரண்டாவது பெரிய தீவு உச்சிமுனை என்று அழைக்கப்படுகிறது. இதை சுவிஸ் இனை தளமாகக் கொண்ட சுற்றுலா கம்பனியொன்று (Let's Travel) 30 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. மாலைதீவின் மாதிரி வடிவில் 150 நீர்சூழ் பங்களாக்கள் முளைக்கும் சுற்றுலா விடுதி தோன்ற இருக்கிறது. "சுற்றுச்சூழலை காதலிக்கும் விடுதி" என்ற பெயர்ப்பலகையோடு இத் திட்டம் உருவாகிறது.


இத் திட்டத்துக்கு 2020 இல் SLTDA (Srilanka Tourism Development Authority) அதிகாரிகள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இதில் கையொப்பமிடுவதற்கான காலக்கெடு 11.05.2022 ஆக இருந்தது என இப்போ சொல்கிறார்கள். நாடு போராட்டக் களமாகி அரசாங்கம் உருக்குலைந்து போய் இருந்த அந்த நாட்களில் சுவிஸிலிருந்து அந்த சுற்றுலா கம்பனி நிர்வாகிகள் அவசரமாக வந்து கையொப்பமிட்டிருந்தார்கள். அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் இல்லை. சுற்றுலாத்துறை அமைச்சர் இல்லை. ஆனால் SLTDA இயக்குநர்கள் கையொப்பமிட்டார்கள். "அமைச்சர் இல்லாவிட்டாலும் அரசியல் யாப்பின்படி அது சட்டபூர்வமானது" என ஜனாதியின் செயலாளர் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். 417 மில்லியன் முதலீடு செய்கிறது அந்தக் கம்பனி. அந்த உடன்படிக்கையில் என்ன உள்ளடங்கியிருக்கிறது என யாருக்கும் தெரியாது. 


அந்தச் சிறுதீவில் 200 பேர் மீன்பிடித் தொழில் சார்ந்து வாழ்கிறார்கள். அனைவரும் தமிழ் பேசும் பாரம்பரிய மீனவர்கள். அது மனித தொடுகையற்ற பிரதேசம் என 2010 இல் இலங்கை அரசு சார்பில் பசில் ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் Let's Travel கம்பனிக்கு சொல்லியிருந்தார்கள். இவர்களிருவரும் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய செயற்படாமல் 2010 ஆகஸ்ட் இல் இந்தக் கம்பனியுடன் பேரம் பேசி முடித்தார்கள். பின்னர் மார்ச் 2011 இல் இந்த விடயத்தை ஒரு செய்தியாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். அதற்கெதிரான குரல்கள் பாராளுமன்றத்தில் எழுந்துமிருந்தன. 


யார் இந்த Let's Travel  இன் இயக்குநர். அவரது பெயர் லூயிஸ் சிறீவர்த்தன. அவரது தந்தை இலங்கையர். தாயார் சுவிஸ். "அந்த இடத்தில் வசிக்கும் மக்கள் மிக ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். வாழத் தகுதியற்ற பின்தங்கிய நிலை கொண்டது அத் தீவு. குடி தண்ணீர் இல்லை. சுகாதார வசதி இல்லை. எந்த உட்கட்டமைப்பும் இல்லை. நானும் ஒரு இலங்கையன்தான். அந்த அடிப்படையில் அந்த மக்களின் அபிலாசைகளில் அக்கறை கொண்டவன். அரசுடன் சேர்ந்து பணியாற்றி அந்த மக்கள் integrate பண்ண உதவுவோம். சுகாதாரம் மற்றும் வசதிவாய்ப்புகளின் முன்னேற்றத்தில் அவர்களை பங்குகொள்ள வைப்போம். சுற்றுலா அபிவிருத்தி திட்டம் அங்கு வாழும் மீனவ சமூகத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது. எமது முதலீட்டில் 6 சதவீதம் உள்ளுர் பொருளாதார அபிவிருத்திக்கு ஒதுக்கப்படுகிறது. மோசமான நிலைமைகளிலிருந்து அந்த மீனவர்கள் மீள உதவும். அவர்கள் துரத்தப்பட மாட்டார்கள். எனது விடுதிச் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் சமையல் காரராக பணிபுரியலாம்“ எனச் சொன்னார் லூயிஸ். இது குறித்து கருத்துத் தெரிவித்த Nina Sahdeva (working group tourism & development, Basel)  லூயிஸ் சிறீவர்த்தன 'உலகம் தெரியாதவர்' என சாடியுள்ளார். 


"அந்தத் தீவுக் கூட்டங்கள் மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவை. பெரும்பான்மையானவர்கள் தமிழர். அங்கு நிரந்தரமாக வசிக்கும் மீனவர்களும் பருவகால மீன்பிடிப்புக்கு வரும் மீனவர்களும் அத் தீவுக் கூட்டங்களின் மக்கள். அங்கிருக்கம் மக்களின் இருப்பை இலங்கை அரசு மறுப்பதன்மூலம் அவர்களின் பாரம்பரிய வாழ்முறையும் இருப்பும் அந்த மண்ணில் அச்சுறுதப்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்படுகிற இந்த ஒப்பந்தம் சர்வதேச விதிகளை கவனத்தில் எடுக்கவில்லை" என்கிறது STP (Society for threatened people) சுவிஸ் அமைப்பு !


தேசிய மீனவர் ஒருங்கிணைப்பு இயக்கம் NFSM (National Fisheries Solidarity Movement) இன் தலைவர் கேர்மன் குமார "நில பங்கீடு கல்பிட்டி பிராந்திய செயலாளரால்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்கான தீர்மானம் வழமையான நில பங்கீட்டு ஒழுங்குவிதிகளின்படி இல்லாமல் மந்திரிசபையினூடாக நடைபெற்றுள்ளது. இது அதிகாரம் வாய்ந்த அரசியல் பின்னணி கொண்டஒரு திரைமறைவு ஒப்பந்தமாக இருக்கிறது" என கூறினார்.


ACTSPA (All-Ceylon Tourism Service Providers Association) இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. உள்ளுர் முதலீட்டாளர்களிடம் கொடுங்கள். அது இலங்கைக்குள் டொலர்களை கொண்டுவர உதவும் என அந்த அமைப்பு கூறுகிறது. இன்றைய நிலை அதற்கான முக்கியத்துவத்தை அதிகம் உணர்த்தி நிற்கின்றது. ஆனால் அந்தக் குரலுக்கு வலுவில்லாமல் போயிற்று, மக்கள்விரோத ஆட்சியின் முன் !

-RAVINDRAN PA-

Post a Comment

0 Comments