‘கோட்டாகோகமவுக்கு உதவ ரோஸி , ருவன் விஜேவர்தன கொண்ட குழு அமைப்பு - இனிதான் கவனமாய் இருக்கவேண்டும் - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, May 15, 2022

‘கோட்டாகோகமவுக்கு உதவ ரோஸி , ருவன் விஜேவர்தன கொண்ட குழு அமைப்பு - இனிதான் கவனமாய் இருக்கவேண்டும்

 


‘கோட்டாகோகமவுக்கு உதவ ரோஸி , ருவன் விஜேவர்தன , சுகாதார அதிகாரிகள் உட்பட்டோர் கொண்ட குழுவொன்றை அமைத்தார் ரணில்.'

இனிதான் கவனமாய் இருக்கவேண்டும்.நெட்பிளிக்ஸ் தலைமுறையோடு மோத அதே நெட்பிளிக்ஸில் House of cards, Squid game எல்லாம் பார்த்து காலத்தோடு தன்னை அப்டேட் செய்து கொண்ட கோட் சூட் சகுனி களத்தில் இறங்கி இருக்கிறது.இதெல்லாம் ராஜபக்சாக்களுக்கு என்னவென்றே தெரியாது.

ஜே ஆர் ஜெயவர்தனவின் டீமில் முதல் பதினொரு பேருக்குள் இல்லாவிட்டாலும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டு dressing room ல் இருந்தவர் அல்லவா ? இந்த உருட்டு ,புரட்டு எல்லாம் அவருக்கு அங்கிருந்து கிடைத்தவைதான்.play the game.follow the rules கூட்டம்.

யுத்தமும் குண்டுவெடிப்புகளும் தந்த பாரிய பின்னடைவுகளால் 2001ல் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.இது அரசியல் ஸ்திரமற்றதன்மையை உண்டு பண்ணியது.இப்போதைய சீரழிந்த நிலை அல்ல.இப்போதைவிட ஒரு ஐம்பதே முக்கால் மீட்டர் உயரத்தில் மேம்பட்ட நிலையில்தான் அப்போது இருந்தது தேசம்.

ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கொழுகிக் கொண்டு ஜீ எல் பீரிஸ் உட்பட பதின்மூன்று பேர் வந்து எதிர்க்கட்சியில் அமர நாடாளுமன்ற பெரும்பான்மை இழந்த அரசு தேர்தலுக்குச் சென்றது.ஐ.தே.க வென்றது.

பிரதமர் ரணில் செய்த முதல் காரியம் புலிகளுடன் சமதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுவிட்டு உலகம் சுற்றியதுதான்.யார் எதைக் கேட்டாலும் ஒரே பதில் சமாதானம்.கருணாவின் கொள்கைகளை எல்லாம் முப்பதாயிரம் அடி உயரத்தில் முதல் கிளாஸ் விமானங்களில் பறக்கவிட்டார் ரணில்.அதன்பின்னர் நடந்தவை சரித்திரம்..

கோல் ஃபேஸ் ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகளுக்கு நடந்ததைத்தான் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.சண்டை எதுவும் போடவில்லை.ஒரு துளி ரத்தம், ஒரு தோட்டா செலவு இல்லை.ஆனானப்பட்ட இயக்கமே இரண்டாய் உடைந்தது.

கோல்பேஸ் கோஷங்கள் எல்லாமே பாரம்பரிய கட்சியமைப்பை,அரசியலை ஒட்டுமொத்தமாய் நிராகரிப்பவை.அரசியலுணர்வு பெற்ற டிஜிட்டல் தலைமுறை ரணில் உட்பட அத்தனை பேரினது பயோடேட்டாவையும் கைசொடுக்கில் வைத்து இருக்கிறது.

இதெல்லாம் தன் மருகன் ருவன் விஜேவர்தன உட்பட அத்தனை பிரபு வர்க்க அரசியலுக்கும் நாமம் போடப்போகிறது என்று ரணிலுக்கு நன்கு தெரியும்.

கோல்பேஸ் போராட்டத்திற்கு அரச அனுசரணை வழங்குவதன் மூலம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து அதன் பரிசுத்ததன்மையைக் கழற்றி எடுத்து அதன் பின்புலமாய் இருப்பவர்களுக்கு சூப்பர் லக்சரி கனவுகளைக் காட்டும் திட்டம் இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம்.

போராட்ட வளாகத்தை வெறும் கார்னிவலாக்கி அங்கே கூடும் வெவ்வேறு அரசியல் அபிலாஷை கொண்ட மக்களையும் குழப்பியடித்தால் அந்தப் பக்கம் யாருமே எட்டியும் பார்க்கமாட்டார்கள்.

ரணில் மெதுவாய் உள்ளே நுழைந்து கூண்டோடு காலி செய்யப்பார்க்கிறாரா அல்லது கோட்டாகோகமவை ஊக்கிவித்து கோட்டாவை ஜனாதிபதி பதவியில் இருந்து துரத்தி தன் வாழ்நாள் லட்சியத்தை அடையப் பார்க்கிறாரா என்பதில் இன்னமும் தெளிவில்லை.இதில் எதைச் செய்தாலும் கைமேல் பலன் ரணிலுக்குத்தான்.

ரணிலுக்கு இந்த மாதிரியான செஸ் ஆட்டங்கள் கால் வந்த கலை.எந்த நேரத்தில் யாரைக் கவிழ்ப்பார்,யாரை ஆதரிப்பார் என்று அவரது ஆஸ்தான செல்லக் குழந்தைகளான வஜிர, அகில ,சாகலவைத் தவிர இந்த உலகத்தில் யாருக்கும் சரியாய் தெரியாது.

-Zafar Ahmed-

No comments:

Post a Comment

Pages