அரகலய" மக்கள் எழுச்சியினால் அதியுச்ச பயனடைந்தோர் யார்?! - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, May 29, 2022

அரகலய" மக்கள் எழுச்சியினால் அதியுச்ச பயனடைந்தோர் யார்?!

 


"அரகலய" மக்கள் எழுச்சியினால் அதிக பயன் பெற்றவர்கள் கோட்டா தலைமையிலான அரசு, இரண்டாவது ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க.

அழிவின் விளிம்பிற்கு நாடு செல்வதை உணர்ந்த ஆட்சியாளர்கள் தமது பொறுப்பில் இருந்து விலக அரகலய மக்கள் எழுச்சியை மிகவும் கவனமாக கையாண்டனர்.

பல்வேறு தரப்புக்கள் அரகலய உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அதனை தமது அரசியல் வியூகங்களுக்காக பாவித்துக் கொண்டார்கள், கொண்டிருக்கின்றார்கள்.

தேசிய சக்திகள் மாத்திரமன்றி பிராந்திய, சர்வதேச மேலாதிக்க சக்திகளும் களத்தில் கவனமாக காய்களை நகர்த்துகின்றன.

தேசிய அரசு முன்மொழிவுகள், நகர்வுகள், கோஷங்கள், அமைச்சரவை மாற்றங்கள் அனைத்துமே மூலோபாய அரங்கேற்றங்கள்.

ரணில் பிரதமராக இருப்பதனால் ஆட்சி அவருடையது அல்ல, அது ராஜபக்ஷ அண்ணன் தம்பிமாரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

ரணில் ஒரு தற்காலிக பகடைக் காயாக நகர்த்தப்படுகிறார், அவர் இந்த அரசை பாதுகாக்கின்றார், சர்வதேச சமூகத்திற்கான ஒரு முகக் கவசம்!

அரகலய மக்கள் எழுச்சியை அதன்பாட்டில் ஆறப்போட்டு காலத்தை கடத்தி அதனை படிப்படியாக முடக்கியடக்கும் மூலோபாயங்களுக்கு முகக்கவசமாக செயற்படுகிறார்.

21 ஆவது அரசியலமைப்பு மாற்றம் என்ற பெயரில் காலத்தை கடத்துவதற்காக அதனுடன் 13 ஆவது அரசியலமைப்பு மாற்றத்தை, ஏற்கனவே இழுபறியில் உள்ள தேர்தல் திருத்த சட்டத்தை முடிச்சுப் போடுகின்றனர்.

இனி அரசியலமைப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மைச் சமூகங்களைத் சீண்டிவிட்டு பேரின அரசியலுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்படலாம்!

பாராளுமன்ற பெரும்பான்மை ஆளும் பொது சன முன்னணியிடமும் அதன் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷவிடமும் இருக்கிறது.

எதிரணியில் உள்ள பிரதான கட்சிகள் துண்டாடப்பட்டு பலவீனப்படுத்தப் படுகின்றன, அடுத்து வரும் தேர்தலுகாகான வியூகங்கள் தான் வகுக்கப் படுகின்றன.

அடுத்த தேர்தலில் உயிருட்டப்படும் ஐ.தே.க பிரதான எதிர்க்கட்சியை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி ஆசனங்களை பெறவும் பின்னர் ஆளும் கூட்டணியில் பங்கெடுக்கவும் சாத்தியங்கள் அதிகம்.

காற்று வீசும் திசையில் சுதந்திரக் கட்சியும் அந்த விமல் கம்மன்பில மற்றும் 11 கட்சிகளும் அணிசேரும்!

ஆர்பாட்டக் காரரர்கள் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர், சிவில் பாதுகாப்பில் இராணுவம் களமிறக்கப் பட்டுள்ளது.

பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பிற்குள், அரசியலமைப்பு முறைமைக்குள் பலரும் எதிர்பார்த்த வேகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது கேள்விக்குறியாக இருக்கிறது.

சரி, இரண்டு வருட முடிவில் அல்லது இடைநடுவில் பொதுத் தேர்தல் இடம் பெற்றாலும் அதே கட்சிகள் தான் களத்தில் இருக்கப் போகின்றன.

புதிய கட்சிகள் எதுவும் களத்தில் இல்லை, சுயேட்சைக் குழுக்களுக்கு மக்கள் வாக்கு தரப்போவதில்லை, ஏனென்றால் மக்களும் வங்குரோத்து அரசியல் கலாசாரத்தின் பங்காளர்களே!

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் கதைதான்!

இந்நிலையில் மாற்றத்தை விரும்புகின்ற புதிய தலைமுறையினர் எந்த அணிகளில் ஊடுருவிப் பயணிக்கப் போகிறார்கள், அல்லது உள்வாங்கப் படவுள்ளார்கள் என்பதே தற்போது சிந்திக்கப்பட வேண்டிய விடயம்!

அரசியலில், அரசியல் கலாசாரத்தில், அரசியலமைப்பில் முழுமையான மாற்றம் அடிமட்ட மக்களின் ஆணையாக அடுத்தடுத்து வரும் தேர்தல்களூடாகவே ஏற்படுத்தப்படல் வேண்டும், ஆகவே அரகலய அடிமட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
29.05.2022

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages