அரசியல்வாதிகளுக்கு மக்களின் குரல்கள் இன்னும் கேட்கவில்லையா ? - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Monday, May 30, 2022

அரசியல்வாதிகளுக்கு மக்களின் குரல்கள் இன்னும் கேட்கவில்லையா ?

 


நாட்டில் பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியும் இணைந்து தலைவிரித்தாடுகின்றது. இதனால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். மக்களும் அரசியல்வாதிகளுக்கு தெளிவாக விளங்கும் வகையில் தமது போராட்ட வியூகங்களை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி முன்னெடுத்து வருகின்றனர்.

மக்களின் போராட்டம் விரிவுபடுத்தப்பட்டு தெளிவடைந்த போராட்டக் களமாக காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” என்பது மாற்றமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது மழை, வெயில், இரவு, பகல் எனப் பாராது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக மக்களால் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வெவ்வேறு குழுக்களாகவோ அல்லது இன, மத ரீதியாகவோ முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் தற்போது ஒரே தளத்தில் இலங்கையர்கள் என்ற ரீதியில் இன, மத, பேதம் கடந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப் போராட்டத்தில் ஒலிக்கப்படும் கோஷங்கள் நாட்டை ஆட்சிசெய்கின்றவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெளிவாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ளவர்கள் எவர் ? எந்தக் கட்சி இதற்குப் பின்னால் உள்ளது ?  என்று ஆராய முற்படாமல் நாட்டு மக்களின் பிரச்சினை என்ன என்பதை அரசியல் தலைவர்கள் ஆராய்ந்து அதற்கான தீர்வினை வழங்க ஒன்றிணைய வேண்டும்.

குறிப்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடந்த 74 வருடகால ஆட்சியில் மக்களுக்கான எவ்வித சிறந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லையெனவும் ஊழல் மோசடிகள் மாத்திரமே நிறைந்து காணப்படுகின்றன எனவும் குற்றம் சுமத்துகின்றனர். 

ஏனவே இனியாவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தலைவர்கள் கட்சி பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலன்குறித்து ஒருமித்து சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும். மாறாக பாராளுமன்றில் நேரங்களை வீணடித்து தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து பிரயோசனமான வாத விவாதங்களை மேற்கொண்டு மக்களுக்காக தமது நேரங்களை இனியாவது ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு அரசியல் தலைவர்கள் சிந்திக்காது விடில் மக்கள் போராட்டம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 உறுப்பினர்களுக்கு எதிராக மிகவும் வலுவானதாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அரசியல்வாதிகள் திருத்திக்கொள்ள மக்களால் தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்துவோர் நாட்டில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது அரசியல் நெருக்கடிக்கோ தீர்வினைப் பெற ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது விரும்பியோ விரும்பாமலோ முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாயமாகும்.

தற்போதைய நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துகின்றனர். அடுத்த ஓரிரு மாதங்கள் மக்களுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகள் காத்திருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

“ சிறுபோக விவசாயத்தில் 50 சதவீத விளைச்சலை பெற்றுக்கொள்வது கூட சாத்தியமற்றது. ஏனெனில் ஒரு மெற்றிக்தொன் உரம் கூட இதுவரையில் இறக்குமதி செய்யப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும். நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுப்பட வேண்டும். வசதியில்லாதவர்கள் பூச்சாடிகளிலாவது மரக்கறிகளை பயிரிட வேண்டும்” என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகிறார்.

“ நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் வரை அரச சேவையில் எத்தரப்பினருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவினை வழங்குவது பொருத்தமற்றதாகும். நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அரச சேவையாளர்கள் குறைந்தது 10 வருட காலத்திற்கு தங்களின் வரப்பிரசாதங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்” என அரச சேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் பியந்த மாயாதுன்ன தெரிவிக்கிறார்.

“ சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றிக்கொள்ள முடியும். 

அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும் காலத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுப்பட வேண்டும்” என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர புத்திமதி கூறுகிறார்.

“ தவறான உரக் கொள்கையினால் கடந்த காலங்களில் பெரும்போக விவசாயமும், சிறுபோக விவசாயமும் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. விவசாயத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும், எதிர்வு கூறல்களையும் அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்தியதன் பிரதிபலனை முழு நாடும் தற்போது எதிர்கொள்கிறது. தேசிய விவசாயத்துறை வீழ்ச்சிக்கும் விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிக்கும், எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள உணவுத் தட்டுப்பாட்டினால் ஏற்பட போகும் விளைவிற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.” என ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா கூறுகிறார்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு உபதேசம் செய்வதை இனியாவது நிறுத்திவிட்டு தாங்கள் அனைவரும் ஒருமித்து சிந்தித்து மக்கள் நலன்சார்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல்வாதிகளுக்கு உபதேசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

 கடந்த காலங்களில் தமது நல்சார்ந்து அனைத்து தீர்மானங்களையும் பாராளுமன்றில் முன்னெடுத்த ஒரு சில அரசியல்வாதிகளால் தற்போதைய நிலை தோற்றம் பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு தற்போதாவது சிந்தித்து செயற்படுவதை விடுத்து, மக்களின் கழுத்தை பொருளாதார நெருக்கடி நெருக்கிக்கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் மக்கள் மீது இவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படுவது எவ்வகையில் நியாயம். 

வீ.பி.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages