சமூக ஊடகங்களில் தினமும் வெளியிடப்படும் வீடுகளினதும், வாழ்க்கையினதும் இரகசியங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.(கட்டாயம் வாசியுங்கள்) - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, June 20, 2022

சமூக ஊடகங்களில் தினமும் வெளியிடப்படும் வீடுகளினதும், வாழ்க்கையினதும் இரகசியங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.(கட்டாயம் வாசியுங்கள்)

 


என் சகோதர, சகோதரீரே! உனக்கு சில அறிவுரைகள்…….

இன்றைய நிலைமை கவலைக்குரியது. உங்கள் வீடுகளினதும், வாழ்க்கையினதும் இரகசியங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் தினமும் வெளியிடப்படும் விடயங்கள்..

🧵நான் குடும்பத்தோடு கடலுக்குச் செல்கிறேன்.
🧵புதிய கார் வாங்கிய கணவருக்கு வாழ்த்துக்கள்.
🧵இப்போது நான் இந்தப்பேரங்காடியில் (shopping mall) இருக்கிறேன்.
🧵பெருநாள் உடைகளுடன் பிள்ளைகளின் போட்டோக்கள்.
🧵கணவனது குடும்பத்தில் இன்று ஒரு விருந்து.
🧵இன்று எமது காலைச்சாப்பாடு மேசை.
🧵குறிப்பிட்ட ஹோட்டலில் இன்று எமது இராச்சாப்பாடு.
🧵இது எனது கணவன் தந்த பரிசு.
🧵நானும் கணவரும் விமான நிலையத்தில்…

இவ்வாறாக இன்று பல்வேறுபட்ட ஆடம்பரங்களும், பெருமைபாராட்டலும் ஒருவித பைத்தியமும் அதிகமான மக்களைப் பீடித்துள்ளது.

நாம் தினமும் காணக்கூடிய இவ்விடயங்கள் மூலம் எமது வீட்டின் இரகசியங்களையும் எமது வாழ்க்கையின் விசேடங்களையும் மக்களுக்கு நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றோம். அதேநேரம் எத்தனையோ பொறாமை பிடித்த, குரோதம் நிறைந்த கண்கள் எம்மை நோக்குகின்றன என்பதை உணராமல் இருக்கின்றோம்.

இந்த விடயங்கள் (status) உங்களுக்கு எதிராக அதிகமான வாயில்களைத் திறந்து விடுகின்றன. ஆகக்குறைந்தது அதனை வாசிப்போருக்கு, பார்போருக்கு பொறாமை ஏற்படலாம். அது முற்றும் போது உங்கள் மரணத்திற்கும் வழிவகுக்கலாம்.

அல்லாஹ் தன் திருமறையில் “என் அருமை மகனே (யூசுபே!) உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம். (அவ்வாறு செய்தால் அவர்கள் உனக்கு சதி செய்வார்கள். ஏனெனில் ஷைத்தான் நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான். )(12:5) என யஃகூப் நபி கூறியதாக கூறுகின்றான்.

ஒரு சங்கைமிக்க நபி (யஃகூப் அலை) தன் நபியான மகனுக்கு தன் சகோதரர்களின் பொறாமை, குரோதம் பற்றி எச்சரிக்கின்றார். அப்படியாயின் அந்நியர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா?!

நபி (ஸல்) கூறுகிறார்கள் “நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரக்கூடியது. உங்களில் ஒருவர் தான் விரும்புபவற்றைக் கனவில் கண்டால் தனக்கு விருப்பமானவரிடம் தவிர வேறு யாரிடமும் கூற வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)

மேலும் கூறுகிறார்கள் “கண்ணேறு உண்மையானது; கத்ரை முந்துவது என்றிருந்தால் கண்ணேறு அதனை முந்திவிடும்” (புஹாரி,முஸ்லிம் ) அன்பின் சகோதர சகோதரிகளே! உங்கள் இரகசியங்களை, திருமணத்தை, பிள்ளைகளை, போட்டோக்களை, உங்கள் செய்திகளை, உங்கள் விஷேடங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தளவு மக்களின் கண்களை விட்டும் அவற்றை தூரமாக்குங்கள். ஆடம்பரமான போட்டோக்களை, வீடியோக்களை அனுப்பாதீர்கள். அவற்றை உங்களுக்கென்று பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களைச் சூழ சில மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் பசி பட்டினியோடு காலம் தள்ளுகின்றனர். ஒரு ரொட்டியை கூட விலை கொடுத்து வாங்க முடியாது உள்ளனர். தமது வீட்டை விட்டு வெளியேற முடியாது அச்சத்தோடு இருக்கின்றனர்.

உங்கள் வீடுகளையும், பிள்ளைகளையும், கணவன்/மனைவிகளையும் கண்ணேறிலிருந்தும், பொறாமையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மீது ஆணையாக ஒரு வகையில் நீங்கள் அவர்களை கொலைசெய்கிறீர்கள். அத்தோடு உங்களையும் கொலை செய்கிறீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையை நேசியுங்கள். பிறர் கண்களை விட்டும் அவற்றை மறைத்துக் கொள்ளுங்கள். இரகசியங்களால் மூடப்பட்ட குடும்ப வாழ்க்கையை விட மேலானதொன்று கிடையாது. அது ஒரு மூடப்பட்ட புத்தகம். அதற்கே உறியவர்களை தவிர, வேறு யாரும் அதனை வாசிக்கவும் கூடாது; அதனை அனுபவிக்கவும் கூடாது.

அரபியிலிருந்து தமிழில்
Ummu Nadha
2022/6/19

No comments:

Post a Comment

Pages