மக்களிடம் உணவு போர் தொடுக்கும் முறையில் மிரட்டும் அரசாங்கம் - கம்யூனிச கொள்கை பண்ணை முறைகள் அமுல்படுத்தப்படவேண்டும்

 என்.கண்ணன்


அடுத்து வரும் மாதங்கள் மோசமானதாக இருக்கும், மக்கள் இரண்டு வேளை மட்டும் சாப்பிட முடியும் என்றளவுக்கு உணவு நெருக்கடி ஏற்படும், ஒக்ரோபரில் அரிசி விலை ஆயிரம் ரூபாவைத் தாண்டும் என்பன போன்று மக்களை மிரட்டுகின்ற செய்திகள் நாளாந்தம் வந்து கொண்டிருக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தொடர்ச்சியாக எச்சரித்துக் கொண்டிருக்கிறார். 

விவசாய அமைப்புகளும், பல்வேறு நிறுவனங்களும் மக்களுக்கு இந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

இதுபோன்ற எச்சரிக்கைகளை கடந்த இரண்டரை ஆண்டுகளில் பலமுறை மக்கள் சந்தித்து விட்டனர். அதனால் இப்போது அதனைப் பலர் அலட்சியம் செய்கின்றனர்.

நாளுக்கு நாள் மக்களின் கொள்வனவு செய்யும் திறன் குறைந்து வருகிறது.

மக்கள் தங்களின் உணவைத் தியாகம் செய்யப் பழகிக் கொண்டு விட்டனர்.

அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளவற்றை விட்டு விட்டு, கிடைத்ததை உண்ணுகின்ற நிலைக்கு வந்து விட்டனர்.

பொருட்களின் விலை ஏறப்போகிறது என்றவுடன் கடைகளின் குவிகின்ற நிலை இப்போது, குறையத் தொடங்கி விட்டது.

கிடைத்ததை கொண்டு வாழுகின்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம்,

நிலைமைகள் மோசமடைந்து வருகின்ற நிலையில், இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள் சரியாக வழங்கப்பட்டிருக்கிறதா? 

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாட்டில், மக்களை அதற்கு ஏற்றவாறு வழிப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எம்முன் உள்ளன.

சிலாபத்தில், ஒரு உணவகத்தில், அழகுச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்த இடங்களில் மிளகாய்ச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இது நம்பிக்கையூட்டுகின்ற ஒரு விடயம்.

கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்தல் என்பது தற்சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமானதொரு நடவடிக்கை.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குதல் முக்கியமானதொரு தேவையாக மாறியுள்ளது.

ஆனால், இன்னமும் பணப் பயிர்களின் மீதான நாட்டம் விவசாயிகளுக்கு குறையவில்லை. 

இந்த ஆண்டு தொடக்கத்தில், யாழ்ப்பாணத்தில் பெருமளவு விவசாயிகள், புகையிலையைப் பயிரிட்டனர். 

காலநிலை காலை வாரியதாலும், சரியான உரம் கிடைக்காமையாலும் வலிகாமம் பிரதேசத்தில் பெருமளவு புகையிலைச் செடிகள் கருகிக் கிடக்கும் காட்சி, வைக்கோல் பட்டடை நாயின் நிலையையே நினைவுபடுத்துகிறது.

அந்த நிலங்களில் சாதாரண உணவுப் பயிர்களை பயிரிட்டிருந்தாலே, அன்றாட உணவுத் தேவைகளாவது நிறைவேறியிருக்கும்.

அந்த இடத்தில் விவசாயிகளும் சூழலை சரியாக கணிக்கவில்லை. இந்த விடயத்தில் விவசாயிகளை அறிவுறுத்தி அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டிய நிலையில் உள்ள விவசாய அதிகாரிகளும் அதனைச் செய்யவில்லை.

பொருளாதார, உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு நாட்டுக்கு, பொருத்தமான விவசாயக் கொள்கை போர்க்கால அடிப்படையில் வகுக்கப்படுவது முக்கியம்.

குறுகிய காலத்தில் பயன்தரக் கூடிய பயிரினங்களை அடையாளம் காணுதல் அதில் முக்கியமானது.

காலநிலை, மண் வளம், நீர்வளம் மற்றும் எரிசக்தி வளம் என்பனவற்றுக்கு ஏற்ப பயிர்களை விவசாயிகளுக்கு அடையாளப்படுத்த வேண்டும்.

எல்லா இடங்களிலும், ஒரே வகைப் பயிர்களை பயிரிட்டு வீண் நிரம்பலை தவிர்ப்பதும், நட்டத்தை குறைப்பதும், முக்கியம்.

அதற்காக திட்டமிட்ட ஒழுங்குமுறைகளுக்கு அமைய பயிர்களை நாட்டுதலும், கைக்குக் கிட்டிய அறுவடையை குறிப்பிட்ட காலத்துக்கு பாதுகாக்க கூடிய வழிகளை தேடுவதும் இத்தகைய சூழலில் அவசியமான தேவையாகும்.

சேதமடைவதும், பழுதடைவதும், வீணாக கொட்டப்படுவதும் தவிர்க்கப்படுவதன் மூலம், கணிசமான பொருளாதார நலன்களை பெற முடியும்.

சீனா, சோவியத் யூனியன் போன்ற நாடுகளில், கம்யூனிச கொள்கை தீவிரமாக பின்பற்றப்பட்ட காலங்களில், தன்னிறைவுப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக, பண்ணை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்தப் பண்ணை முறைகளில், உள்நாட்டு தேவைகளுக்கான உணவுப் பொருட்கள், திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்டன.

அதாவது தேவைக்கு அதிகமாகவும் உற்பத்தி செய்யப்படவில்லை. தேவைக்கு குறைவாகவும் உற்பத்தி செய்யப்படவில்லை.

தேவைக்கு அதிகமான உற்பத்தி இருந்தாலும், அதனை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைக்காது போனால் வளங்கள் வீணாகி விடும்.

தேவைக்கு குறைந்தால், இறக்குமதியை நாட வேண்டியிருக்கும், அது சாத்தியமற்றுப் போனால், பஞ்சம் ஏற்படும்.

இதனால் தான், கம்யூனிச நாடுகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக பண்ணை முறை விவசாயத்தில் ஈடுபட்டன.

அதற்காக இலங்கையை கம்யூனிச முறைக்குள் செல்ல வேண்டும் என்று இந்தப் பத்தி வலியுறுத்தவில்லை.

தற்சார்பு பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு, உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு, மக்களின் உணவு நெருக்கடியை தீர்ப்பதற்கு, இதுபோன்ற அவசரமான வழிமுறைகளை அரசாங்கம் வகுக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

ஆனால் அரசாங்கம், வீட்டுத் தோட்டம் அமையுங்கள் என்கிறது, அரச அலுவலகங்களில் காய்கறிகளை பயிரிடுங்கள் என்கிறது. 

இவை மட்டும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்குப் போதுமானதல்ல.

அதற்கு போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.

போர்க்கால அடிப்படையில், திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும்.

அத்தகையதொரு நிலைக்கு இன்னமும் அரசாங்கமும் தயாராகவில்லை, மக்களையும் தயார்படுத்தவில்லை.

இவ்வாறான நிலையில், மிகப்பெரியதொரு- வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத உணவு நெருக்கடியை, இலங்கை அவலங்களுடன் தான் எதிர்கொள்ளப் போகிறதா?

Post a Comment

0 Comments