அட்டுளுகம பிரதேசத்தில் 9 வயதான சிறுமி ஆயிஷா, கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. இச் சம்பவம் இன, மத பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இக் குற்றத்தை இழைத்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரியவருகிறது. குறித்த பிரதேசத்தில் அண்மைக்காலமாக போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் அங்கு குற்றச் செயல்கள் மலிந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் பாரியளவில் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உண்மையில் இந்த ஆபத்து அட்டுளுகமைக்கு மாத்திரம் உரியதல்ல. மாறாக நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று போதைப் பொருள் வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் முழுக்க முழுக்க முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் கூட போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது தந்தையின் கண் ஒன்றைத் தோண்டியெடுத்த பரிதாப சம்பவத்தை ‘விடிவெள்ளி’யூடாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான பாரதூரமான குற்றச் செயல்கள் நாடளாவிய ரீதியில் போதைக்கு அடிமையானவர்களால் இடம்பெற்ற வண்ணமேயுள்ளன.
அட்டுளுகம சம்பவம் இரண்டு விடயங்கள் தொடர்பில் நமது கவனத்தை ஈர்க்கிறது. ஒன்று, போதைப் பொருள் பாவனையும் அதன் தாக்கங்களும். அடுத்தது, சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல். இவ்விரண்டுக்குமே நேரடித் தொடர்பிருக்கிறது. போதைக்கு அடிமையானவர்கள் தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள சிறுவர்களைக் குறிவைக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கொலை செய்யவும் துணிகின்றனர். அதுவே சிறுமி ஆயிஷாவின் விடயத்திலும் நடந்துள்ளது.
போதையொழிப்பு வேலைத்திட்டங்களைப் பொறுத்தவரை முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்புகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும். போதைக்கு அடிமையானவர்களுக்கு பள்ளிவாசல்களையும் ஏனைய நிறுவனங்களையும் மையப்படுத்திய சிகிச்சை மற்றும் வழிகாட்டல்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்ற முன்மாதிரிகளை இங்கும் நடைமுறைப்படுத்த முடியும். அதற்குத் தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட வளங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இது தொடர்பில் சிந்திக்கவும் ஒன்றிணைத்து செயற்படவும் முன்வர வேண்டும்.
மறுபுறும் இலங்கை சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. துரதிஷ்டவசமாக, இலங்கையில் கடந்த 20 மாதங்களுக்குள் 14 சிறுவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆயிஷாவின் கொலை இடம்பெற்ற இதே காலப்பகுதியில் மேலும் பல இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பெற்றோர்களும் சிறார்களும் பலத்த அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளுக்குக் கூட வெளியில் செல்ல அச்சப்படுகின்றன. இது அவர்களது உடல், உள ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும். எனவேதான் இந்த விவகாரங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்தில் மிகவும் தீவிரமான உரையாடல்கள் இடம்பெற வேண்டும். அதிலிருந்து நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக பாடசாலை மட்டத்திலிருந்து போதைப் பொருளுக்கு எதிரான காத்திரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் அமல்களுக்காக மாத்திரமன்றி சமூகப் புனரமைப்புக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே ஓரளவு மாற்றங்களை எம்மால் ஏற்படுத்த முடியும்.-Vidivelli
No comments:
Post a Comment