ஒவ்வொரு ஊரிலும் ஒரு கலந்தாலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு பொறிமுறை (மஜ்லிஸ் அல் ஷூரா) கட்டாயம் (Inamullah Masihudeen)

 


ஒவ்வொரு ஊரிலும் ஒரு கலந்தாலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு பொறிமுறை (மஜ்லிஸ் அல் ஷூரா) கட்டாயம் இருத்தல் வேண்டும்.


ஊரில் உள்ள உலமாக்கள் அதிபர், ஆசிரியர்கள், உயர்கல்விச் சமூகத்தினர், வியாபாரிகள், விவசாயிகள் இளைஞர் மாதர் அமைப்புக்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு "ஷூரா சபை" மஜ்லிஸ் அல்-ஷூரா அமைவது நெருக்கடிகள் மிகுந்த இந்த காலகட்டத்தின் தேவையாகும்.

ஊரில் உள்ள பிரதான மஸ்ஜிதில் ஒவ்வொரு வாரமும் கூடி ஊர் மக்களின் சமய சமூக பொருளாதார பாதுகாப்பு சுகாதார சுற்றுச் சூழல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடி கூட்டுப் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்கவும் அமுலாக்கவும் இத்தகைய அடிமட்ட தலைமைத்துவங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.

அவ்வாறான ஆலோசனை சபைகள் (மஜ்லிஸ் அல்-ஷூரா) கல்வி உயர்கல்வி, பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சட்ட ஆலோசனை, பாதுகாப்பு, சமாதான சகவாழ்வு, சிறுவர் மாதர் விவகாரங்கள், போதை வஸ்த்து ஒழிப்பு, அரசியல் விவகாரங்கள், சுகாதாரம் சுற்றுச் சூழல் என பல உப குழுக்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் வழிகாட்டல்களை, சேவைகளை வழங்கும் ஒருங்கிணைக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய ஷூரா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், வை.எம்.எம்.ஏ, ஷரீஆ கவுன்சில், தரீக்காக்களுக்கான உயர் சபை, அதேபோன்று மாகாண, மாவட்ட மட்டங்களில் உள்ள பிராந்தியத் தலைமைகள் ஆகியவற்றுடன் அவற்றின் துறைசார் விவகாரங்களிலும் தேசிய விவகாரங்களிலும் தொடர்பாடல்களை வைத்துக் கொள்வதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

அவற்றை நிர்வகிக்கும் பணிகளை செய்வதற்கான பங்களிப்புகளை உதவிகளை ஊர்மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான வெளிப்படைத் தன்மை பொறுப்புக் கூறல் பண்புகளுடன் கூடிய நிதி நிர்வாகம் இருத்தல் அவசியமாகும்.

அதேபோன்று சுய தொழில்களுக்கான நுண்கடனுதவிகளை வழங்கவும் விவசாயம், வியாபாரம், கால்நடை வளர்ப்பு மீன்பிடி, நெசவு, கைத்தொழிலகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு, கல்வி உயர்கல்வி, வைத்திய செலவுகள், இலகு கடன்கள் என இன்னோரன்ன விடயங்களுக்கான நிதியுதவிகளை வழங்க முடியுமான கூ‌ட்டுறவு அபிவிருத்தி வங்கிகள், பைதுல் மால் நிதியங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

ஒரு சமூகமாகவும் தேசமாகவும் நாளுக்கு நாள் நாம் எதிர் கொண்டு வரும் புதிய புதிய நூதனமான சவால்களுக்கு மத்தியில் இவற்றை எல்லாம் நாம் செய்யாது பார்வையாளர்களாக இருந்து கொண்டு இந்த சமூகத்திற்கு தலைமை இல்லை, யார் பொறுப்புக் கூறுவது, யாரிடம் போய்ச் சொல்வது என அங்கலாய்ப்பதோ, அரசியல் வாதிகளை அல்லது தேசிய அமைப்புக்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதோ ஒரு போதும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தரப் போவதில்லை.

இவ்வாறான நம்பகமான உள்ளூர் கட்டமைப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றின் சிபாரிசுகளை ஆலோசனைகளை செயற்திட்டங்களை அங்கீகரித்து அவற்றினூடாக ஊர்மக்களுக்கு உதவி ஒத்தாசைகளை செய்வதற்கு பல தரப்புக்களும் தயக்கமின்றி முன்வருவார்கள்.

அல்ஹம்துலில்லாஹ், எமக்கு மத்தியில் அறிவாலும், ஆற்றலாலும், பொருளாலும் தாராளமாக உதவக் கூடியவர்களும், உதவிகளை பெற்றுத்தரக் கூடியவர்களும், செல்வம் செல்வாக்கு அதிகாரம் உடையவர்களும் இருக்கின்றார்கள், ஆனால் அவர்களது பணிகளை சேவைகளை முறையாக ஒருங்கிணைக்கின்ற பொறிமுறைகள் தான் இல்லாமல் இருக்கின்றன.

அதேவேளை பல்வேறு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட குழுக்கள் தனியாட்கள், சமூக ஊடக பிரமுகர்கள், சங்கங்கள் அந்த இடைவெளிகளை இஷ்டப்படி நிரப்ப ஆரம்பிப்பார்கள், பல முறைகேடுகள் இடம் பெறலாம்.

இவ்வாறான அடிமட்ட ஆலோசனைப் பொறிமுறைகளை அமைத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழிகாட்டல்களை தேசிய ஷூரா சபையிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம், தேவைப்படும் பட்சத்தில் எனது தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள முடியும், இன்ஷா அல்லாஹ்.

இவ்வாறான அடிமட்ட தலைமைத்துவ கட்டமைப்புகளை கட்சி அரசியல், கொள்கை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் உருவாக்குவதில் புதிய தலைமுறை இளைஞர்கள் முன்வர வேண்டும், அறிவும், ஆற்றலும், அனுபவமும், துறைசார் நிபுணத்துவங்களும் உள்ள தரப்புக்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
13.06.2022

Post a Comment

0 Comments