பொருளாதார முப்பரிமாண நெருக்கடிகள் பாரிய உளவியல் கோளாறுகளையும் ஏற்படுத்தியுள்ளன (Inamullah Masihudeen) - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, June 15, 2022

பொருளாதார முப்பரிமாண நெருக்கடிகள் பாரிய உளவியல் கோளாறுகளையும் ஏற்படுத்தியுள்ளன (Inamullah Masihudeen)

 


அரசியல் சமூக பொருளாதார முப்பரிமாண நெருக்கடிகள் பாரிய உளவியல் கோளாறுகளையும் ஏற்படுத்தியுள்ளன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அரசியல் நெருக்கடியா? பொருளாதார நெருக்கடியா? என சிலமட்டங்களில் புத்திசீவிகள் தாமறிந்த பரப்புகளுக்குள் கருத்தாடல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

காலத்தை சேமித்து சுருக்கமாக கூறினால் ஏற்பட்டிருப்பது வங்குரோத்து அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத பின்விளைவான பொருளாதார நெருக்கடியாகும்.

ஆக, இன்னுமொரு படி மேலே சென்று ஆராய்கின்ற பொழுது அவையிரண்டினதும் பின்விளைவாக பாரிய சமூகவியல் நெருக்கடி ஒட்டு மொத்த தேசத்தையும் ஆட்கொண்டு வருவதனை நாம் அவதானிக்கின்றோம்!

அதனால் தான் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை அரசியல் சமூக பொருளாதார நெருக்கடிகள் எனும் முப்பரிமாணங்களில் நாம் பேசுகின்றோம்.

உண்மையில் அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் பின்விளைவாக மாத்திரம் தான் சமூகவியல் நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளனவா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்ற பதிலே வருகின்றது.

இலகுவாக புரிந்து கொள்வதாயின் ஒருவர் கேட்கலாம், இந்த 226 பகற்கொள்ளைக் காரர்களும் செளகரியமாக அவர்களது குடும்பங்களும் செளகரியமாக இருக்க அப்பாவிப் பொதுமக்கள் நாம் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? என்று கேட்கலாம்.

உதாரணத்திற்காக அத்தியாவஷ்ய உணவுப் பொருட்களுக்கான வரிசைகள், எரிவாயு, எரிபொருள், மருந்து, பசளை என ஒரு வரிசை யுகத்தில் செத்துப் பிழைப்பது பொதுமக்கள் அல்லவா?

உண்மைதான், பொதுமக்கள் தமது ஜனநாயக அடிப்படை உரிமைகளை, வாக்குரிமையை பிரயோகிப்பதில், மக்களாணையை வழங்குவதில், தம்மிடமுள்ள சுயாதிபத்தியத்தை தாரைவார்க்குகையில் அசிரத்தையாக விழிப்புணர்வற்றவர்களாக மடையர்களாக மந்தைகளாக வங்குரோத்து அரசியல் கலாசாரத்தின் அடிமட்ட பங்காளர்களாக இருந்தமையின் பின்விளைவுகளே இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிகள், அங்கு தான் சமூகவியல் நெருக்கடி ஆரம்ப படிநிலையில் இருக்கின்றது என வாதிடுபவர்களும் இருக்கின்றார்கள்.

98 வீத எழுத்தறிவும், 10,000 பாடசாலைகளும் 10 ற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், கல்வி உயர்கல்வி, தொழில் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களும், சமயத்தலைமைகளும் சமயக்கல்வி நிறுவனங்களும் கல்வி உயர்கல்விச் சமூகமும் உள்ள தேசத்தை பக்காத் திருடர்களிடம் பாரப்படுத்திய சமூக உளவியலில் தான் அடிப்படைக் கோளாறு இருக்கின்றது என்றும் வாதிடலாம்!

எது எப்படிப் போனாலும் தற்பொழுது தலைதூக்கியுள்ள அரசியல் சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னால் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு இருந்தாலும் அவை தேச மக்கள் மத்தியில் வயது பால் வேறுபாடுகளுக்கு அப்பால் பாரிய உளவியல் கோளாறுகளை ஏற்படுத்தியுள்ளமையை நாம் அவதானிக்கின்றோம்.

எவ்வாறு அரசியல் தீர்வுகள், பொருளாதார தீர்வுகள் பற்றி நாம் அதிகம் சிந்திக்கவும் பேசவும் எழுதவும் செய்கின்றோமோ அதைவிடவும் கூடுதலான கரிசனை காருண்யம் உளவியல் கோளாறுகளால் அவதிப்படும் மக்கள் மீது கொள்ளப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

அடுத்த வேளை குடும்பத்தின் உணவுத் தேவை பற்றி குடும்பத் தலைவன் பரிதவித்துக் கொண்டிருக்கிறான், பிள்ளைகளின் பசி பட்டினி கண்டு இல்லத்தரசி உள்ளம் உருகிக் கொண்டிருகின்றாள், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் இன்றி பல குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன..

அத்திவஷ்யத் தேவைகளுக்காக வரிசைகளில் இரவுபகலாக பசிபட்டினியில் காத்திருப்போர் மனநிலை எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது..

விலைவாசி உயர்வு பணவீக்கம் என்பவற்றால் உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலாவணி அதிகரிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் வறியவர்கள் மாத்திரமன்றி மத்தியதர வர்க்கமும் தவித்துக் கொண்டிருக்கிறது.

கையில் காசிருந்தும் குழந்தைகளுக்கு தேவையான பால்மா, பெரியவர்களுக்கு தேவையான மருந்து வகைகள் அத்தியாவஷ்ய உணவுப் பொருட்கள் இல்லாது செய்வதறியாது பரிதவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்கள்..

மொத்த வியாபாரி முதல் சில்லறை வியாபாரிகள் வரை கருப்புச் சந்தை கலாசாரத்தில் பொய் களவு புரட்டு கலப்படம், பதுக்கள் என பண்பொழுக்கங்கள் சீரழிந்து உளவியல் கோளாறூகளின் உச்சத்தில் சுகம் காண்கின்றார்கள்...

பசி பட்டினியால், மருந்து சிகிச்சை இன்மையால், போசாக்கின்மையால் மாத்திரமன்றி உளவியல் கோளாறுகளாலும் பல உயிர்கள் காவு கொள்ளப்படும் அபாயம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்த நிலையில் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் பெளதீக காரணிகளூடா தீர்வுகளை தேடுவதோடு மாத்திரம் நின்றுவிடாது எமது ஆன்மீக பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவமளித்து மனிதாபிமானத்துடனும் அனைத்து மதங்களும் போதிக்கும் ஜீவ காருண்யத்துடனும் நடந்து கொள்ள முயற்சிப்போம், இன்ஷா அல்லாஹ்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
15.06.2022

No comments:

Post a Comment

Pages