குழந்தைகள் மீதான பாசம்: அவர்களுக்காக நாம் எதை சேர்த்து வைக்கிறோம்! (Inamullah Masihudeen)


செல்வங்களில் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம், பாக்கியங்களில் உயர்ந்த பாக்கியம் பிள்ளை பாக்கியம் என்பார்கள், ஆதிகாலம் தொட்டு அடிக்கடி சொல்லப்படுவதாலும் கேட்டுக் கேட்டு சலித்துப் போனாலும் இந்த வசனங்களில் உள்ளார்ந்த அர்த்தம் பலருக்கு புரிவதில்லை.

அதேவேளை அல்லாஹுத்தஆலா ஒரு சிலருக்கு அந்த செல்வத்தை, பாக்கியத்தை தராமல் இருந்விட்டால் அவனது தீர்ப்பில் நிச்சயமாக நன்மைகளே அதிகமிருக்கும் அதற்கு நிகரான வேறு அருட்பாக்கியங்களை இம்மை மறுமை வாழ்வில் அவன் தருவான் என்று உண்மையான விசுவாசிகள் அல்லாஹ்வின் கழாவையும் கத்ரையும் பொருந்திக் கொள்வார்கள், அதனை ஒரு குறையாகவோ துரதிட்டமாகவோ அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

குழந்தைகள் மீது தாய்தந்தையர் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதனை எவ்வாறு வார்த்தைகளால் சொல்ல முடியும், அவர்களை நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வளர்ப்பதில், அவர்களுக்கு சிறந்த கல்வியை ஞானத்தை பெற்றுக் கொடுப்பதில் எவ்வளவு கரிசனை கொள்கிறார்கள்.

அவர்களது உடல் உள ஆரோக்கியம் சந்தோஷம் ஒரு கணமேனும் பாதிக்கப்படுவதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது போகும், அவர்களது ஆசைகளை தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் தமது சொந்த ஆசைகள் தேவைகளை மறந்து போய்விடுவார்கள்.

தாம் வாழ்க்கையில் அனுபவிக்காத வசதி வாய்ப்புக்களை செளகரியங்களை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதில், தமது மரணத்திற்கு பின்னரும் அவர்களுக்கு சொத்து சுகம் சேர்த்து வைப்பதில் தமது உடல் உள ஆரோக்கியத்தையும் மறந்து போவார்கள்.

தம்மை இவ்வாறெல்லாம் அள்ளி அரவணைத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்ன கைமாறு செய்கிறார்கள், தமக்கில்லாத உயர் தராதரம் தந்து அந்த தராதரத்திற்கு ஏற்ற தாரமும் தந்தவர்கள் எத்தகைய தராதரத்தில் நடாத்தப்படுகிறார்கள் என்பதனை ஒவ்வொரு ஆண் பெண் பிள்ளைகளும் அவ்வப்போது நினைவிற் கொள்ள வேண்டும்.

ஆனால், இன்று அந்த பெற்ற கடன் வளர்த்த கடன் பற்றி பேசவில்லை, மாறாக அதிகம் நாம் உணர்ந்து கொள்ள மறுக்கின்ற அலட்டிக் கொள்ளாத ஒரு விடயம் பற்றி சொல்ல விரும்புகின்றேன்.


அதற்கு முன்னர் மற்றொரு விடயத்தை ஓரளவு தொட்டுச் செல்வது மிகவும் பொறுத்தமாக இருக்கும் எனவும் நினைக்கின்றேன், அதாவது எமக்கு இருக்கின்ற குழந்தைப் பாசம் தான் அடுத்தவர்களுக்கும் இருக்கிறது, எமது குழந்தைகளுக்கு இருக்கின்ற ஆசாபாசங்கள் தான் அடுத்தவர் குழந்தைகளுக்கும் இருக்கின்றது என்ற உண்மையை நாம் உள்ளார உணர்ந்து வாழ்தல் மிகவும் முக்கியமான விடயமாகும்.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம் எமது அன்புச் செல்வங்களை அள்ளி அரவனைத்து அவர்களுக்கு எல்லாவகை செல்வங்களையும் அள்ளி வழங்கி அவர்களது கண்களில் ஆனந்தக் கண்ணீரை மட்டுமே காண வேண்டும் என விரும்புகிற நாம் அவர்களுக்கு எத்தகைய உலகத்தை விட்டுச் செல்கிறோம் என்பதனை யோசிக்கத் தவறுகிறோம்.

அன்றாடம் தானும் தனது மனைவி மக்களும் ஆரோக்கியமாக செளகரியமாக வாழ்வதற்காக ஓடியாடி உழைத்து பொருள் சேர்த்து சொந்த நலன்களில் மாத்திரம் கரிசனை கொண்டு வாழும் சுயநலமிகளுக்கு இந்த வாழ்வின் யதார்த்தம் புரிவதில்லை.

குழந்தை வாழ்வதற்கு ஒரு வீடு வேண்டும் என எண்ணும் பலர் எனது குழந்தை வாழ்வதற்கு ஒரு நாடு வேண்டுமே என சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

தனது பிள்ளை வாழுகின்ற சூழல், ஊர், சமூகம், தேசம், உலகம் என தத்தமது அறிவிற்கும் ஆற்றலுக்கும், வசதி வாய்ப்புகளுக்கும் ஏற்ப சிந்தித்து பொதுவாழ்வில் தனது கடமைகளை உணர்ந்து தனியாகவும் கூட்டாகவும் செயற்படுபவனே உண்மையான ஆறறிவு படைத்த சமூகப் பிராணியாக வாழ்வை அர்த்தமுள்ள வாழ்வாக ஆக்கிக் கொள்கிறான்.

அன்பும் அறமும் ஆன்மீகமும் மனிதாபிமானமும் கோலோச்சுகின்ற ஆரோக்கியமான ஒரு சுற்றுச்
சூழலை, குடும்பத்தை, சமூகத்தை, தேசத்தை, உலகத்தை நாம் எமது குழந்தைச் செல்வங்களுக்கு பிள்ளைகளுக்கு எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும்!

எமது ஆன்மீக தலைமைகளாக இருந்தாலும், சிவில் சமூக தலைமைகளாக இருந்தாலும், எமது அரசியல் தலைமைகளாக இருந்தாலும் அவர்கள் சத்திய வழியில் உண்மை நீதி நேர்மை அறம் அன்பு மனிதாபினம் அர்ப்பணிப்பு உள்ள தலைமைகளாக அமைவதை நாம் உறுதி செய்து கெள்வது தான் நாம் எமது சந்ததிகளுக்கு செய்கின்ற மிகப் பிரதானமான கடமையாகும்!

நீதி நேர்மையான நல்லாட்சி இடம் பெறுவதனை நாம் உறுதி செய்யா விட்டால், ஊழலும் மோசடிகளும் அநீதி அக்கிரமங்களும் கோலோச்சுகின்ற தேசத்தின் வளங்களை சூரையாடுகின்ற, இயற்கை வளங்களை அழிக்கின்ற, சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்ற, இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் காழ்ப்புணர்வை உரமூட்டி வளர்க்கின்ற அடாவடித்தனங்களை அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுகின்ற சாத்தான்களின் சாத்தான்களின் சாம்ராஜ்யங்களைத் தான் நாம் எமது அன்பின் செல்வங்களுக்கு விட்டுச் செல்வோம்.

ஒவ்வொரு விசுவாசியான ஆணும் பெண்ணும் தத்தமது குழந்தைச் செல்வங்களை அருகில் வைத்துக் கொண்டு இந்த உண்மையை நேரமெடுத்து சிந்தித்துப் பாருங்கள்.


நன்மையை ஏவுதலும், தீமையை தடுப்பதும், நீதியை நிலை நிறுத்துவதும், அறப்பணிகள் செய்வதும், தாமும் வாழ்ந்து பிறரும் வாழ்வதற்கான மனிதாபிமானம் தழைத்தோங்கும் வளமான தேசத்தை உலகை உருவாக்குவதும் தான் ஆன்மீக அடித்தளங்களுடன் கூடிய அல்லாஹ் ரஸுல்மீது அன்புவைத்துள்ள ஒரு உண்மையான விசுவாசியின் பணியாகும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் 

Post a Comment

0 Comments