இந்த நாட்டின் தேசிய மற்றும் வெளிநாட்டு கடன் சுமை மொத்த தேசிய உற்பத்தி விகிதத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னரே விஞ்சி விட்டதனை அறிவோம்.
சுமார்
6000 கோடி அமெரிக்க டாலர் வெளிநாட்டுக் கடனை வட்டியும் முதலுமாக
வருடாந்தம் செலுத்த எமக்கு சுமார் 600 கோடி அமெரிக்க டாலர்
தேவைப்படுகின்றது.
இந்த நிலையில் ஏற்றுமதி வருமானம், கடல்கடந்து
உழைப்போர் வைப்பீடுகள் இழப்பு, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, நேரடி வெளிநாட்டு
முதலீடுகள் இல்லாமை என பல காரணிகளால் நாடு கடன்களை செலுத்த முடியாத
வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி,
ஆசிய அபிவிருத்தி வங்கி, கடன் உதவி வழங்கும் நாடுகள் என்பன நாட்டின்
நிதிநிலமை குறிகாட்டிகளை கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றன
என்பதனை அறிவோம், குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தும் வலிமை கவனத்தில்
கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் இறுதியாக
இந்தியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் பெற்ற அதிக கடப்பாடுகளுடன் கூடிய
சுமார் 400 கோடி டாலர் கடனுதவியைத் தவிர நாட்டிற்கு குறிப்பிடத்தக்க
உதவிகள் சர்வதேச சமூகத்திடம் இருந்து கிடைக்கவில்லை.
குறைந்த பட்சம்
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்பவும், உதவி வழங்கும்
நாடுகள் நிறுவனங்களது அவதானத்தை ஈர்க்கவும், வெளிநாட்டில் உழைப்போரது
நம்பிக்கையை வெல்லவும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் ஒரு அரசியல்
மாற்றத்தை தேசிய அரசு என்ற நகர்வின் மூலம் ஏற்படுத்துவதற்கு இருந்த ஒரே
சந்தர்ப்பத்தை ரணில் ராஜபக்ஷ அரசியல் மூலோபாயம் இல்லாமல் செய்துள்ளது.
இந்த
நிலையில் அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்து
வகைகள், எரிபொருள், எரிவாயு, இரசாயண பசளை, உள்நாட்டு உற்பத்திகளுக்கான
மூலப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் பண்டங்கள் இறக்குமதிகளுக்கான
வெளிநாட்டு நாணயம் திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் இல்லா நிலை
ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் தமது அரசியல்
இலாப நட்ட கணக்குகளுக்கு அப்பால் அழிவின் விளிம்பில் உள்ள தேசம்
எதிர்பார்க்கும் மாற்றங்களுக்கு வழிவிடும் உபாயங்களை துரிதப்படுத்தாது
காலதாமதப்படுதாதும் வியூகங்களை கையாள்வதில் காலத்தை கடத்திக கொண்டிருந்தால்
நிச்சயமாக நாடு அராஜகத்தின் உச்சத்தை எட்டிவிட அதிக காலம் செல்ல மாட்டாது.
அத்தகையதொரு
இடைக்காலத் தீர்விற்கான முனைப்புக்களுடன் ஏக காலத்தில் வெளிநாட்டு
செலாவணியை ஈட்டுவதற்கும் மிகுதப் படுத்துவதற்குமான நகர்வுகளையும்
துரிதப்படுத்துதல் வேண்டும்.
முதற்படியாக கடல்கடந்து உழைக்கும்
தேசத்தவர்களது வெளிநாட்டு நாணய வைப்பீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும், உதாரணமாக அவர்களது மாதாந்த வருடாந்த வைப்பீடுகளுக்கு
ஏற்ப சுங்கத் தீர்வை சலுகைகள், அரச காணியுரிமை பத்திரங்கள், நாடு திரும்பிய
பின், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான சலுகைகள், சட்ட
உதவிகள், காப்புறுதிகள் என வங்கிகளின் ஊக்குவிப்புக்கள் என பல சலுகைகளை
அறிமுகம் செய்தல் வேண்டும், அதன் மூலம் சுமார் 600 கோடி அமெரிக்க டாலர்களை
உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தோடு வெளிநாட்டு
தொழிற்சந்தைகளை அறிந்து அதற்கேற்ற நிபுணத்துவ தகைமைகளை வழங்கி,
பயணச்செலவுகளுக்கான வட்டியில்லா கடனுதவிகளையும் வழங்கி இளைஞர்
யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் கட்டாயமாகும்.
இரண்டாவது
கட்டமாக ஏககாலத்தில் உள்நாட்டு உணவு உற்பத்தியில், விவசாயம், கால்நடை
வளர்ப்பு, மீன்பிடி என்பவற்றில் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்டு குறுகிய
காலத்தில் பசுமைப் புரட்சி ஒன்றின் மூலம் தன்னிறைவு காண்பதோடு பிற நாட்டு
சந்தைகளுக்கு ஏற்றுமதிகளை செய்வதன் மூலம் வெளிநாட்டுச் செலாவணியை
சேமிக்கவும் ஈட்டவும் தூரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இருதரப்பு
பல்தரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் வரிச்சலுகைகளை கவனத்தில் கொண்டு
தேசிய ஏற்றுமதி வகையறாக்களை அதிகரிப்பதோடு இறக்குமதிகளுக்கான மாற்றீட்டு
உற்பத்திகளை உள்நாட்டில் ஊக்குவிக்கும் தொழில் புரட்சி ஒன்றை முடுக்கி விட
வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட மின்வலு துறைகளில் நாட்டின் வளங்களை,
சுயாதிபத்தியத்தை, தாரைவார்க்காத உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை
ஊக்குவிக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்து சேவைகளை தரமுயர்த்துவதன்
மூலம் தனியார் வாகன பாவனைகளை மட்டுப்படுத்துவதன் மூலம் எரிசக்தியிற்கான
செலவினங்களை குறைக்க வேண்டும்.
ஏக காலத்தில் தலைநகரில்
குவிக்கப்பட்டிருக்கும் அரச அதிகாரங்களை சேவைகளை மாகாண மாவட்ட
மட்டங்களுக்கு பரவலாக்குவதன் மூலம் அவற்றை மக்களது காலடிக்கு கொண்டு சென்று
பயணங்களுக்கான தேவைகளை குறைக்க வேண்டும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்துதல்.
தொடரும்...
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments