எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள் என்பவற்றை பதுக்குதல் ஹராமான உழைப்பாகும்! - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, July 24, 2022

எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள் என்பவற்றை பதுக்குதல் ஹராமான உழைப்பாகும்!

 


பொருட்கள் பண்டங்களின் தட்டுப்பாடு: ஈமானை சோதிக்கும் ஹலால் ஹராம் பேணுதல் !

எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள் என்பவற்றை பதுக்குதல், சேகரித்து அதிக விலைக்கு விற்று கொள்ளை இலாபமீட்டுதல் ஹராமான உழைப்பாகும்!

வரிசைகளில் முண்டியடித்தல் அடுத்தவர்களது நியாயமான உரிமைகளை தட்டிப்பறிக்கும் ஹராமான முறைகேடாகும்!

போட்டி போட்டுக் கொண்டு வியாபாரம் மற்றும் கொள்வனவு செய்தல் அடுத்த சகோதரர்களது உணர்வுகளை காயப்படுத்துதல், தர்க்கங்களில், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல் அனைத்தும் தடுக்கப்பட்ட பாவமான காரியங்களாகும்!

அறிமுகம் செய்யப்படுகின்ற விநியோக நடைமுறைகளை மீறுதல் , இலஞ்சம் வழங்குதல், வண்டி தகடுகளை மாற்றி மோசடி செய்தல் எல்லாமே பாவ காரியங்களாகும்.

வரிசையில் காத்திருந்து பெறப்படும் எரிபொருளை உறிஞ்சி எடுத்து வீடுகளில் பதுக்கிவிட்டு மீண்டும் மீண்டும் வரிசைகளில் நின்று நியாயமான தேவையுடையோருக்கு நெரிசலை தடையை ஏற்படுத்துகின்ற காடைத் தனங்கள் ஹராமான பாவங்களாகும்.

எரிவாயு பெற்ரல் வரிசைகளில் முண்டியடித்து கலவரம் செய்வோர் தொழுகைக்காக வரிசையில் நேர்த்தியாக நிற்பதில் இமாமை பின்பற்றுவதில் எந்தவித பயனுமில்லை!

போக்குவரத்து சேவைகளை பயணிகளுக்கு வழங்காது கிடைக்கின்ற எரிபொருளை விற்று கொள்ளை இலாபமீட்டுவோர் ஹராமான உழைப்பிற்கு அப்பால் கடமைதவறி அமானிதங்களை பாழாக்கும் பாவத்தை செய்கின்றனர்.

அதேபோன்று நிலைமையை சாதகமாக பயன்படுத்தி நிர்கதியில் உள்ள பயணிகள், நோயாளிகளிடம் ஆயிரக் கணக்கில் அதிகரித்த கட்ணங்களை கோரும் அறவிடும் முச்சக்கர வண்டி மற்றும் சேவைகளை வழங்குவோர் தமது வயிற்றை நெருப்பினால் நிறைத்துக் கொள்கின்றனர்.

எரிவாயுவை முறைகேடாக கொள்வனவு செய்து பதுக்கி ஹராமாக கொள்ளை இலாபமீட்டும் நபர்கள் அடுத்தவர் வீடுகளில் அடுப்புகள் எரிவதை தடுக்கும் பாவத்தையும் சுமந்து கொள்கிறார்கள்.

ஹராமான மோசடியான உழைப்பு வாழ்வில் ஒரு பொழுதும் விருத்தியை ஏற்படுத்துவதில்லை, மாறாக அவை அழிவை பிரச்சினைகளை துன்ப துயரங்களையே கொண்டு வந்து சேர்க்கின்றன!

இவ்வாறான முறைகேடான உழைப்பின் மூலம் தாமும் வயிறு வளர்த்து தமது மனைவி மக்கள் பிள்ளைகளுக்கும் செலவு செய்வோர் அவர்களையும் பாவத்தின் பங்காளர்கள் ஆக்குகிறனர்!

பொருளாதார நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள்,பசி பட்டினி அச்சம் பயம் எல்லாமே எமது ஈமானை சோதிக்கும் இறைவனின் சோதனைகளாகும்!
இங்கு மனிதர்களில் புனிதர்களின் தாராளத் தன்மைகள் வெளிப்படும் அதேவேளை அவர்களில் கேடுகெட்டவர்களின் இழிகுணங்களும் இடைபோடப் படுகின்றன!

நிர்கதியில் உள்ள மனிதர்களிடம் கொள்ளை அடிக்கின்றோமா, அல்லது நன்மைகளை கொள்ளையடிக்கின்றோமா என்பதே இப்போதைய கேள்வி!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
24.07.2022

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages