இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட ரணில் (wikileaks) வெளியிட்ட தகவல் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, July 24, 2022

இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட ரணில் (wikileaks) வெளியிட்ட தகவல்

 


கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க தொடர்பில் விக்கிலீக்ஸ் டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதனை நிறுத்துமாறு ரணில் கோரியதாகவும், அதனை ஜப்பானிய அரசாங்கம் நிராகரித்தது எனவும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.

நாட்டின் தலைவர்கள் தரகு பெற்றுக் கொள்வதனாலும், மக்களை உதாசீனம் செய்வதனாலும் அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் உதவி வழங்குவதனை நிறுத்த முடியாது எனவும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு, ஜப்பான் பதிலளித்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அப்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடாத்துவதற்கு தயார் என அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசியிடம் உறுதியளித்திருந்தார் என விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சர்வகட்சி பேரவையின் ஊடாக பரிந்துரை செய்யப்படும் தீர்வுகளை நடைமுறைப்படுத்த தயார் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, அப்போதைய ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை என யசூசி அக்காசியிடம் கூறியிருந்தார் என விக்கிலீக்ஸ் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பு அடங்கிய விக்கிலீக்ஸ் பதிவினை பகிர்ந்து ஜனாதிபதியின் பதவிப் பிரமாணம் குறித்து டுவிட்டர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages