எரிபொருள் நிலையங்களில்..எதற்கிந்த இடியப்ப சிக்கலும் பின்னல்களும், இத்தனை கஷ்டங்களும்? - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, August 3, 2022

எரிபொருள் நிலையங்களில்..எதற்கிந்த இடியப்ப சிக்கலும் பின்னல்களும், இத்தனை கஷ்டங்களும்?


காஞ்சன விஜேசேகர உண்மையாக திறமையான ஒருவர்தான், எரிபொருள் விரயத்தையும், எரிபொருள் மாபியாவையும், இல்லாதொழித்து சிக்கன எரிபொருள் விநியோகத்திற்கு வழி சமைத்திருக்கும் அவரின் முயற்சி பாராட்டப்படவேண்டியது.

இதன் மூலம் இலங்கை குடிமக்களில் வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் குறைந்தது நான்கு லீற்றர் எரிபொருளாவது கிடைப்பதற்கு வழியேற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

இங்கு எழுப்பபடுகின்ற கேள்வி என்னவென்றால்...?

போலின், QR முறை, வாகனத்தின் கடைசி எண், மட்டுப்படு்தப்பட்ட எரிபொருள் விநியோகம், முச்சக்கர வண்டிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள்..எதற்கிந்த இடியப்ப சிக்கலும் பின்னல்களும், இத்தனை கஷ்டங்களும் ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தேவைப்பட்ட அளவிற்கு தேவைப்பட்ட எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பினோம், கட்டுப்பாடு இல்லை, வரிசை இல்லை, சிரமங்கள் இல்லை, ஏன் எரிபொருள் மாபியா கூட இல்லை மிக மிக சுலபமாக நடைமுறைகள் இருந்தது பல ஆண்டுகளாக இதேதான் வழக்கமாக இருந்தது இப்போது மட்டும் ஏன் இந்த புதிய நடைமுறைகள்.

காரணம் எரிபொருள் தட்டுப்பாடு என்று கூறுவார்கள் சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை ஆனால் போதியளவான எரிபொருளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு இலங்கையிடம் நிதிவசதியில்லை இருந்த திறைசேரி நிதிகளை எல்லாம் கள்வர்கள் ஆட்டையை போட்டுவிட்டார்கள்.

பொதுமகன் ஒருவன் தேங்காய் ஒன்றை களவாடி விட்டால் கூட அதற்கும் வழக்கு பதிவு செய்து 25000/= தண்டம் அறவிடும் காவல்துறையும் நீதிபதியும் நாட்டின் நீதியும் சட்டமும் முழு நாட்டையே திருடிதின்று ஏப்பமிட்ட கள்வர்களை பார்த்து ரசித்துக்கொண்டு பொதுமக்களை வாட்டி வதைக்கிறது அதற்கான வழிகளை புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் திருடர்களை கண்டுபிடித்து அவர்கள் திருடிய நாட்டின் சொத்துக்களை மீட்டெடுக்கத்தான் இன்னும் அவர்களுக்கு வழிமுறை தெரியவில்லை.

மக்களை ஏறி மிதிக்கிறார்கள் என தெரிந்து கொண்டும் அவர்களுக்கொரு பாராட்டு வேறு.

சரி விடயத்துக்கு வருவோம் எரிபொருள் விரயத்தையும் எரிபொருள் மாபியாவையும் அழிக்க வேண்டும் என்று காஞ்சன கொண்டு வந்திருக்கும் இந்த QR திட்டத்தினால் வெற்றியடையலாமா ?

சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் முன்பை போல் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் ஒரு நிலமை உருவாகும் வரையிலும் காஞ்சன விஜேசேகரவால் இந்த திட்டத்தில் வெற்றி காணமுடியாது..

இந்த QR முறைமை நடைமுறைக்கு வந்த பின்னரும் கூட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் முன்னரை போல் எரிபொருள் மாபியா இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

Fuel Dispenser இலிருந்து பத்து மீற்றர் தொலைவில் QR Code பரிசோதிக்கப்படுகிறது டிஸ்பென்சரிடம் சென்று எரிபொருள் நிரப்பும் ஊழியருக்கு ஐநூறு ரூபாவை கொடு்த்து புல்டேங் ஒன்று அடி மச்சான் என்று கூறினால் அவன் அடித்துவிட்டு போகிறான்.

QR Code System எங்கே எரிபொருள் மாபியாவை ஒழிப்பது எங்கே ? எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் முகாமையாளரையோ அல்லது முக்கியமான நபரையோ இலஞ்சம் கொடுத்து கைக்குள் போட்டுக்கொண்டு தேவையான அளவு எரிபொருளை வாங்கி பதுக்கி வைப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை..

இதனை பார்க்கும்போது QR உம் மசிரும் என எண்ணத்தோன்றுகின்றது.

முன்னரைபோல் எல்லா நிலையங்களிலும் எரிபொருள் நிரப்ப முடியாது அவசர தேவையாக ஒரு தூரப்பயணம் செல்ல முடியாது பாவப்பட்ட சில முச்சக்கர வண்டி சாரதிகள் தொழில் செய்ய முடியாது இப்படியான பல்வேறு சிக்கல்களும் குளறுடிகளும் நிரம்பி கிடக்கின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இலஞ்சம் ஊக்குவிக்கப்படுகின்றது எரிபொருள் நிரப்பும் ஊழியருக்கு ஐநூறோ ஆயிரமோ கைக்குள் வைத்தால் தேவையான அளவுக்கு அவன் எரிபொருளை நிரப்பி விடுவான் என்ற தப்பான எண்ணம் அனைவரிடமும் விதைக்கப்படுகின்றது அதன்படி மக்கள் நடந்து கொள்கிறார்கள்.

முன்னரெல்லாம் நாம் எவரொருவரும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியருக்கு ஒரு ரூபாயை கூட சரி கொடுத்ததில்லை ஆனால் இப்போது ஆயிரக்கணக்கில் அள்ளிக்கொடுக்கிறோம் யார் இதற்கு காரணம் அரசாங்கமும் எரி சக்தி அமைச்சரும்தான் காரணம்.

ஒரு நிலையத்திற்கு இன்று எரிபொருள் டேங்கர் வந்தால் இனி நான்கு நாட்களுக்கோ ஒரு வாரமோ கழித்துதான் அந்த நிலையதிற்கு அடுத்த எரிபொருள் டேங்கர் வரும் இந்த நிலமையில் எப்படி எரிபொருள் மாபியாவை ஒழிப்பது ?

முதலில் தட்டுப்பாடற்ற வகையில் நாட்டிற்கு எரிபொருளை கொண்டு வரட்டும் அதன் பிறகு இந்த போலின், QR முறைமை, எரிபொருள் மாபியா, கறுப்பு மார்கெட் விநியோகம் இவை எல்லாமே தன்னாலயே மறைந்து விடும் அதன் பிறகு அந்த அமைச்சருக்கு ஆளுயர மாலையே போட்டு வாழ்த்துகிறோம்.

இப்போதைக்கு கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்.


-ரசானா மனாப்-

No comments:

Post a Comment

Pages