இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அல்லாமா யூஸுஃப் கர்ளாவி அவர்களது அறிவுரை! - KALPITIYA VOICE - THE TRUTH

Friday, September 30, 2022

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அல்லாமா யூஸுஃப் கர்ளாவி அவர்களது அறிவுரை!

 


சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் ஸ்தாபக தலைவர் என்ற வகையில் அல்லாமா யூஸுஃப் அல் கர்ளாவி ரஹிமஹுல்லாஹ் அவர்களை அதன் பொதுக்குழு மாநாடுகளிலும் வேறு சில விஜயங்களின் பொழுதும் சந்தித்துள்ளேன்.


இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள் ? என்று வினவப்பட்ட இரு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய விடயங்களை இங்கு தருகின்றேன்:

இலங்கை அரபுலகின் ஒரு நட்பு நாடு, அது பலஸ்தீன் மக்களது நியாயமான போராட்டத்தை அங்கீகரித்து பலஸ்தீன் இராச்சியத்தையும் அங்கீகரித்து நல்லுறவைப் பேணும் நாடு.

இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே வரலாறு நெடுகிலும் வாணிப வர்த்தக உறவுகள் இருந்து வந்திருக்கின்றன.

இலங்கையின் பெரும்பான்மை மக்கள் அமைதி சமாதானத்தை விரும்பும் நல்ல மக்கள், 1985 ஆம் ஆண்டு இலங்கைக்கு நான் வருகை தந்தேன், உடல் நிலை இடம் தருமாயின் மீண்டும் ஒருமுறை அங்கு வர விரும்புகிறேன்.

முஸ்லிம்கள் தமது சமய கலாசார தனித்துவங்களை பேணுகின்ற உரிமைகள் அங்கு தரப்பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றோடு தனித்து ஒதுங்கி வாழாமல் தேசிய வாழ்வில் பெரும்பான்மை சமுகங்களோடு கரைந்து போகாமல் கலந்து வாழ வேண்டும், தேசிய கட்டுமானத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டும்!

நீங்கள் சிறுபான்மை சமூகம் என்ற மனநிலை மாற வேண்டும், நீங்கள் உலகலாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினர், உங்கள் தேசமக்களோடு தேசிய வாழ்வில் ஒன்றிணைந்து ஒற்றுமை பேணி வாழுங்கள், துரதிட்ட வசமான உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்திருக்கின்றமை ஆறுதல் தருகிறது, எந்தவொரு நிலையிலும் வன்முறைகளை நாடாது பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும்.

பல்லின பலமத கலாசார சூழமைவில் பரஸ்பரம் புரிந்துணர்வும் கருத்தாடலும் சமாதான சகவாழ்வும் கட்டி எழுப்பப்பட வேண்டும்.

சர்வதேச அரங்கில் அரபு முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன, நாங்கள் உங்களோடு இருக்கின்றோம், சர்வதேச இஸ்லாமிய ஒன்றியம் முடியுமான வழிகளில் அரபு முஸ்லிம் உலக நல்லுறவை கட்டி எழுப்புவதற்கும், சமாதான சகவாழ்வை கட்டி எழுப்புவதற்கும் ஒரு உறவுப் பாலமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

அண்டை நாடுகளான இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் உற்பட ஏனைய நாடுகளில் உள்ள முஸ்லிம்களுடனும் புரிநாதுணர்வை நல்லுறவுகளை வளர்த்துக் கொண்டு உங்கள் தேசத்தின் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யுங்கள்.

இயக்கங்களாக அமைப்புகளாக குழுக்களாக பிரிந்து பிளவுபட்டு விடாதீர்கள், கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை கட்டி எழுப்புங்கள், பிளவுபட்ட பெரும்பான்மைகளை விட ஒற்றுமைப்பட்ட சிறுபான்மைள் பலமானவை, உங்களுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு உயர்மட்ட அரச தூதுக்குழுவுடனும் (2011), பின்னர் சில சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் (2014) அல்லாமா யூஸுஃப் கர்ளாவி அவர்களை கட்டார் தலைநகர் டோஹாவில் சந்தித்த பொழுது மேற்படி விடயங்களை அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள்.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

No comments:

Post a Comment

Pages