1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவருக்கு பேங் எக்கவுண்ட் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?


அறிந்ததும் தெரிந்ததும் பகுதி- 28

Dr PM Dr Arshath Ahamed MBBS MD PAED

முஹம்மது நபி அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து புலம் பெயர்ந்து வந்து சேருகிறார்கள். மதீனாவில் குடியேறிய நபி அவர்கள் மதீனத்து மக்களின் தண்ணீர் தேவையை உணருகிறார்கள். அவர்கள் தண்ணீருக்காக படும் கஷ்டங்களை கண்டு கண் கலங்குகிறார்கள்.

அப்போது மதீனாவில், மஸ்ஜிதுன் நபவிக்கு வட மேற்கு திசையில், 6Km தொலைவில், உள்ள ஒரு இடத்தில் ரூமா எனும் யூதருக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஒரு கிணற்றில் மட்டுமே குடிக்கக்கூடிய நல்ல தண்ணீர் இருந்தது. அதனால் அந்த கிணறு (بئر رومة) வின் கிணறு என்று அறியப்பட்டது.

ரூமா ஒரு கையளவு பிடிக்கும் தண்ணீருக்கு கூட மிக அதிகமான கட்டணம் வசூலிப்பவராக இருந்தார். இதனால் அன்றைய மதீனத்து மக்கள் அதிலும் குறிப்பாக முஹாஜிர்கள் தங்களது அடிப்படை தேவையை நிறைவு செய்வதற்கு அதிகம் சிரமப்பட்டனர்.

மக்களுக்கு உதவி செய்வதற்காக, அவர்களின் கஷ்டத்தை நீக்குவதற்கு பகரமாக, சுவர்க்கத்தில் ஒரு தோட்டத்திற்கு ஈடாக அந்த கிணற்றை மக்கள் பாவனைக்கு இலவசமாக திறந்து விடுமாறு அதன் உரிமையாளரான யூதரிடம் நபி (ஸல்) அவர்கள் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்கள். அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு, பணம் பார்ப்பதிலே குறியாக இருந்தார். ஏனெனில் மக்களின் சிரமத்தில் இலாபம் ஈட்டுவது அவருக்கு பெரும் வணிகமாக இருந்தது. (எப்போதும் முதலாளித்துவம் இப்படி தான் இருக்கும்)

மக்களின் கஷ்டத்தை இலகுபடுத்த, சமுதாயத்திற்காக இந்த கிணற்றை விலைக்கு வாங்கி, அதை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து கொடுப்பவருக்கு ( வக்பு செய்பவருக்கு) சுவர்க்கத்தில் பூந்தோட்டம் ஒன்றை பெற்றுத்தருவதை தான் பொறுப்பு எடுப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பகிரங்க அறிவிப்பு செய்தார்கள். இந்த வாக்குறுதியை கேள்விப்பட்ட உதுமான் இப்னு அஃப்பான் (ரழி) உடனே அதன் உரிமையாளரை நேரில் சென்று சந்திக்கிறார். பேரம் பேசுகிறார்.

அவர் விரும்பும் அளவு பெரும் தொகையை தருவதாக சொல்லியும் கிணற்றின் உரிமையாளர் "இந்த கிணறு விற்பனைக்கு இல்லை" என்பதிலேயே பிடிவாதமாக இருந்தார்‌. மீண்டும் மீண்டும் போய் கேட்டும் விற்பதற்கு மறுத்துவிட்டார். இப்போது உதுமான் ரழி அவர்களின் வியாபார மூளை வேலை செய்யத் தொடங்குகிறது.

கிணற்றின் உரிமையாளர் அதில் வரும் வருமானத்திலே குறியாக இருப்பதால், அதற்கு பாதிப்பு இல்லாத வகையில், கிணற்றின் பாதி உரிமையை மட்டும் தமக்கு விற்குமாறும், அப்படி செய்தால் கிணற்றை விற்பதற்கு மேலதிகமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர் கிணற்றில் இருந்து வழமை போலவே தண்ணீரை விற்பனை செய்ய முடியும் என்றும் தனது ப்ரொபோசலை முன் வைத்தார், ஆசை ஊட்டினார் உதுமான் ரழி.

கிணற்றின் உரிமையாளர், உடனடியாக கிடைக்கும் பெரிய ஒரு தொகை மற்றும் ஒரு‌ நாள் விட்டு ஒரு நாள் வரும் வருமானத்தை கருத்திற் கொண்டு இந்த ஒப்பந்தத்துக்கு, வியாபாரத்துக்கு ஒப்புக்கொண்டார்.

உதுமன் (ரழி) தனது முறை வரும் நாட்களில், மக்களுக்கு இலவசமாக தண்ணீரை வழங்கினார். இதனால் உதுமான் ரழி அவர்களின் தினத்தன்று மக்கள் அனைவரும் கிணற்றிலிருந்து இலவசமாக தண்ணீரை எடுக்கச் சென்றனர், நாளடைவில் கிணற்றின் உரிமையாளரின் நாளில் யாரும் அவரிடம் தண்ணீர் வாங்க செல்லவில்லை. அப்போது தான் உதுமான் ரழியின் வியாபார தந்திரம் அவருக்கு விளங்கியது. தண்ணீர் வாங்க வாடிக்கையாளர்கள் இல்லாமல் போனதால், ஆத்திரமடைந்த உரிமையாளர், தனது பங்கையும் உத்மான்‌ (ரழி)க்கே விற்பனை செய்வதற்கு முன்வந்தார், சுமார் 20ஆயிரம் திர்ஹம் விலைக்கு முழுக் கிணற்றையும் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டார். பின்னர் உதுமான் ரழி அவர்கள் அந்த கிணற்றை அல்லாஹ்வின் பெயரால் வக்ஃபுப்(பொதுச்) சொத்தாக தர்மம் செய்தார்கள். அனைத்து மக்களும் அதில் சுதந்திரமாக குடிப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தார்கள்.

பின் ஒரு காலத்தில், நபித் தோழர்களில் ஒருவர் உத்மான் (ரழி)யிடம் வந்து கிணற்றை இரட்டிப்பு விலைக்கு வாங்க முன்வந்தார். இருப்பினும், உத்மான் ரழி அவர்கள் தொடர்ந்து தனது விலை மனுக் கோரலை உயர்த்தும்படி கேட்டுக் கொண்டே இருந்தார். எதையும் ஏற்காமல் இப்படியே இருந்தால் இறுதியாக "லாஸ்ட் பிரைசாக என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் உதுமான்" என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு உதுமான் ரழி அவர்கள் "அல்லாஹ்" தான் இதற்கு பகரமான விலை என்று பதிலளித்தார்கள்.

அடுத்த பத்தாண்டுகளில் கிணற்றைச் சுற்றி பேரீச்சம்பழங்கள் வளர ஆரம்பித்தன. பல நூற்றாண்டுகளாக அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் அவற்றில் பங்கு கொண்டு மேலும் பயிரிட்டு தோட்டத்தை வளப்படுத்தினர். உதுமானியார்கள் ஆட்சியில் தோட்டத்திலிருந்து பெறப்பட்ட வருமானம் ஏழைகளுக்கு உதவி செய்யும் நிதியமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

அந்த தொடரில் இப்போது, இந்த தோட்டத்து மரங்களின் பேரீச்சம்பழங்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன, அதில் கிடைக்கும் வருமானம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு: ஒரு பாதி வழமை போல் அநாதைகள் மற்றும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது, மற்றைய பாதி வருமானம் உத்மான் அஃப்பானின் பெயரில் ஒரு சிறப்பு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படுகிறது, இது சவுதியின் வக்பு அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகிறது.

இப்போது இந்தக் கணக்கில் உள்ள நிதியை முதலீடாக கொண்டு நகரின் மையப் பகுதியில் நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலுக்கு அடுத்தபடியாக உள்ள இடத்தில் நிலம் ஒன்றை வாங்கி ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த நிலம் உத்மான் இப்னு அஃப்பான் என்ற பெயரில் உள்ளூர் நகராட்சியில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் வேலைகள் முடிந்து இப்போது உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரை வரும் விருந்தினர்களை ஏற்றுக்கொள்கிறது உதுமான் ரழி அவர்களின் ஹோட்டல். அது இப்போது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கம்பனி ஒன்றின் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் சவுதி ரியால்களை வருமானமாக ஈட்டுகிறது. வழக்கம் போலவே இந்த வருவாயில் பாதி ஏழைகள் மற்றும் அநாதைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது, மற்றைய பாதி எதிர்கால தொண்டு நோக்கங்களுக்காக உத்மான் பின் அஃப்பானின் வங்கிக் கணக்கில் தொடர்ந்தும் டெபாசிட் செய்யப்படுகிறது. ஹோட்டலின் தண்ணீர் பில் கரண்ட் பில் கூட உதுமான் இப்னு அப்பான் என்ற பெயரிலேயே செலுத்தப்படுகிறது.

செத்தும் கொடை கொடுத்த சீதாக் காதி வள்ளல் போல, 1400 ஆண்டுகள் தாண்டியும் உதுமான் ரழியல்லாஹு செய்த தர்மம் அவருக்கு இப்போதும் நன்மைகளை சேர்த்துவைத்துக்கொண்டே இருக்கிறது. இது அவரது நல்லெண்ணத்திற்கு கிடைத்த நற்கூலி அன்றி வேறொன்றும் இல்லை.

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்,(அல்குர்ஆன் 2:261-262)

இறைவனுடனான வியாபாரம் எப்போதும் இலபாகரமானது என்பதற்கு இதை விட வேறு ஏதும் உதாரணம் உண்டோ?

Post a Comment

0 Comments