மக்களுக்கு பெரிய நன்மையுள்ள ஒசுசலயை யார் பாவிப்பார்? (MIM Infas)

 


சில்லறை பொருட்களிலே மக்களுக்கு சேவை செய்யவென அரசினால் உருவாக்கப்பட்டதே சதோச விற்பனை நிலையங்கள்.

இது போல மருத்துவ துறையிலே மக்களுக்கு சேவையை வழங்க உருவானதே ஒசுசல என்கிற மருத்துவ நிலையங்கள்.

சதோச கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குவது போல , ஒசுசல சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும்.

இன்று அதிகமாக வைத்தியசாலையிலும் , தனியார் மருத்துவ நிலையங்களிலும் , மக்களுக்கு Pharmacy களிலே மருந்து எடுக்கும்படி துண்டுகள் கொடுக்கும் போது , ஒரு ஒசுசல நிலையமிருக்கும் இடத்திலே அது மக்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாகும்.

ஏனெனில் , ஏனைய பாமசிகளை விட ஒசுசலவிலே மருத்துவ பொருட்களுக்கான விலைகள் மிகவும் குறைவாகும்.

ஒசுசலவிலே அதிகம் கிடைப்பது SPC ன் மருந்துக்கள் , அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் மருந்துக்கள் - ஏனெனில் சுகாதார அமைச்சின் கீழான இந்த கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே , ஒசுசல இயங்குகிறது.

நாடு முழுவதும் 200 ற்கும் மேலான ஒசுசல நிலையங்கள் இயங்குகிறது.
இதை இரண்டாக பிரித்து Frenchise Osusala , Rajya Osusala என்று வழங்கியுள்ளார்கள்.

Frenchise Osusala நாடு முழுவதும் 150++ கிளைகளை கொண்டு இயங்குகிறது - அதாவது இதனை ஒருவர் , தங்களது பகுதியிலே செய்வதற்கு முகவராக செயலாற்றுவது.
இது பெரியளவிலே மக்களுக்கு பிரயோசனமாக போவதில்லை.

Rajya Osusala நாடு முழுவதும் 50++ கிளைகளை கொண்டுள்ளது.
இதனால் மக்களுக்கு பெரியளவிலே நன்மையுண்டு.

மக்களுக்கு இதிலே பெரிய நன்மையுள்ளது என்கிற விடயமும் , மருத்துவ துறையிலே இப்படியான ஒரு நிலையமுண்டு என்கிற விடயமும் , மக்களிலே பலருக்கு தெரியாது என்கிற ஒரு பக்கமும் உண்டு.
அதனையும் தெளிவாக்கவே வேண்டும்.

இப்படியாக இயங்குகிற அரச ஒசுசலவிலே , புத்தளம் மாவட்டத்திலேயே இரண்டே இரண்டு நிலையங்களே இயங்குகிறது.
ஒன்று சிலாபத்திலே , மற்றொன்று ஆனமடுவையிலே.

புத்தளம் நகருக்கும் இந்த நிலையம் ஒன்று தேவை என்கிற விடயத்தை , கொரோனா காலத்திலேயே உணர்ந்த நான் , பல அரசியல்வாதிகளிடம் இது தொடர்பாக பேசியுமுள்ளேன்.

எழுத்து பதிவாக , வீடியோ பதிவாகவும் வெளியிட்டுமிருக்கிறேன்.

ஒரு அரசியல்வாதி நினைத்தால் , இதனை முயன்று , இங்கு ஒரு கிளையை கொண்டு வருதல் , கடினமான ஒரு பணி கிடையாது.
பல மக்கள் இதனால் நன்மையடைவர்.

ஆனால் , பல்லாயிரக்கணக்கான மக்களது நன்மையடைதலை விட , ஒரு சில தனியார் பாமசி உரிமையாளர்களது முக சுழிப்புக்கு ஆளாக வேண்டுமே என்கிற வகையிலே , அரசியல்வாதிகள் சிந்திக்கிறார்களோ தெரியாது.

ஏனெனில் , ஒசுசல ஒன்றின் கிளை , இங்கு வருவதை , பாமசி நடத்தும் அதிகமானோர் விரும்ப மாட்டார்கள் என்பதும் கசப்பான உண்மையே !

இன்று , முகநூலிலே உள்ள ஊர்மக்கள் அனைவர் சார்பாகவும் , மீண்டுமொரு முறை , இவ்விடயத்தை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

உங்களால் முடிந்த முயற்சிகளையும் செய்யுங்கள் , அதிகாரத்திலே உள்ளோருக்கு உங்களால் முடிந்த அழுத்தங்களையும் வழங்குங்கள்.

Post a Comment

0 Comments